பள்ளிபாளையம்,ஆக.25: பள்ளிபாளையம் அடுத்துள்ள சின்னாக்கவுண்டம்பாளையம் கிராமத்தில், கடந்த 11ம்தேதி இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்களின் வீடுகள் எரிந்து சாம்பலானது. வீடிழந்த மக்களை நேரில் சந்தித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், வீடுகளை இழந்த மக்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித்தரும்படி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து கலெக்டர் உமா, தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை வழங்கினார். தாசில்தார் மேற்பார்வையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்ட மைனாவதி, தேன்மொழி ஆகியோரது கான்கிரீட் வீடுகளை தலா ₹25 ஆயிரம் செலவில் புதுப்பிக்கவும், முற்றிலும் வீடுகளை இழந்த சாந்தாமணி, ஈஸ்வரி, குமாரி, லட்சுமணன் ஆகியோரின் நான்கு வீடுகளையும் தலா ₹1.25 லட்சம் செலவில் புதிதாக கட்டிக் கொடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
இதற்கான நிதியினை ராஜேஷ்குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹3 லட்சமும், கலெக்டர் தன்விருப்ப நிதியில் இருந்து ₹1.50 லட்சம் ஒதுக்கினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு புதிய வீடுகளை கட்டும் பணியினை ஆலாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. புதிய வீடுகள் கட்டுமான பணிகளை பேரூராட்சி தலைவர் சகுந்தலா, செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, பேரூர் திமுக செயலாளர் கார்த்திராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்ததுடன், அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஷ்குமார் மற்றும் கலெக்டர் உமா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
The post தீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.
