×

இதுவரை இல்லாத அளவில் வெற்றிலை விலை உயர்வு

வேலாயுதம்பாளையம், ஆக. 24: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றிலை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேடுப்பாளையம், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், மோதுகாடு, பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற ரக வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலையை கூலி ஆட்கள் மூலம் பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். அதன் பின், உள்ளூர் பகுதிக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் வெற்றிலை சங்க மண்டிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டுசென்று விற்பனை செய்து வருகின்றனர்.

வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து, தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி, லாரிகள் மூலம் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் ஒரு சுமை ரூ. 9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ. 4 ஆயிரத்துக்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதிய பயிர் சுமை ஒன்று ரூ.4,500க்கும், கற்பூரி வெற்றிலை முதிய பயிர் ரூ.2,500க்கும் விற்பனையாகி வந்தன.

இந்நிலையில் தற்போது வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் ஒரு சுமை ரூ.10 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ. 6 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதிய பயிர் சுமை ஒன்று, ரூ. 5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதிய பயிர் மார் சுமை ஒன்று 3,500க்கும் விற்பனையாகின. வெற்றிலை வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. இதனால் வெற்றிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post இதுவரை இல்லாத அளவில் வெற்றிலை விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Velayudhampalayam ,Karur ,Dinakaran ,
× RELATED வேலாயுதம்பாளையம் அருகே மது விற்ற முதியவர் கைது