×

நவாம்சம் சொல்வது என்ன?

* ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

ஜோதிடத்தில் ராசிச் சக்கரம் என்பது ஜாதகர் பிறந்த கிரகங்களின் கோட்சார நிலையை நமக்கு காண்பிக்கிறது. அவ்வாறு காண்பிக்கும் கோட்சார நிலையே ஜாதகரின் உண்மையான ஜாதகம். இதில், எதற்கு அம்சம் கட்டம் என்ற நவாம்சம் கட்டம்? என நீங்கள் சிந்திக்கலாம். நவாம்சத்தின் வழியே என்ன அறிந்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம். கிரகங்களின் இயக்கத்தின் ஆற்றலை எங்கு கொண்டு செல்கிறது. அதன் இயக்கம் தடைபெறுமா? வலிமையாக உள்ளதா என்பதை கண்டறிவதற்கு நவாம்சம் நமக்கு கொடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் ஆகும்.

நவாம்சம் எப்படி அமைக்கப்படுகின்றது?

ராசிக்கட்டத்தில் அமர்ந்த கிரகம் எந்த சாரத்தில் அமைந்துள்ளது என்பதை குறித்துக் கொள்தல் அவசியம். அதில் நவாம்சம் கட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இந்த மூன்று பிரிவுகளில், முதலாவது தனுர் மண்டலம். இரண்டாவது மேஷ மண்டலம். மூன்றாவது சிம்ம மண்டலம் ஆகும். முதலாவது, சூரியன் தனுர் மண்டலத்தில் எந்த சாரத்தில் உள்ளதோ, அந்த கட்டத்தில் நிரப்ப வேண்டும்.

2வது, சந்திரன் மேஷம் மண்டலத்தில் எத்தனையாவது சாரத்தில் உள்ளதோ, அந்த கட்டத்தில் நிரப்ப வேண்டும். 3வது, செவ்வாய் சிம்ம மண்டலத்தில் எத்தனையாவது சாரத்தில் உள்ளதோ அந்த கட்டத்தில நிரப்ப வேண்டும். 4வது, புதன் தனுர் மண்டலத்தில் எத்தனையாவது சாரத்தில் உள்ளதோ அந்த கட்டத்தில் நிரப்ப வேண்டும். ஐந்தாவது, வியாழன் மேஷ மண்டலத்தில் எத்தனையாவது சாரத்தில் உள்ளதோ அந்த கட்டத்தில் நிரப்ப வேண்டும்.

ஆறாவது, சுக்கிரன் சிம்ம மண்டலத்தில் எத்தனையாவது சாரத்தில் உள்ளதோ அந்த கட்டத்தில நிரப்ப வேண்டும். ஏழாவது, ராகு தனுர் மண்டலத்தில் எத்தனையாவது சாரத்தில் உள்ளதோ அந்த கட்டத்தில் நிரப்ப வேண்டும் (இங்கு ராகு சூரியனின் நிழல் என நினைவுப்படுத்திக் கொள்க). எட்டாவது, கேதுவை மேஷ மண்டலத்தில் எத்தனையாவது சாரத்தில் உள்ளதோ அந்த கட்டத்தில நிரப்ப வேண்டும்.

ஒன்பதாவது, சனியை சிம்ம மண்டலத்தில் எத்தனையாவது சாரத்தில் உள்ளதோ அந்த கட்டத்தில நிரப்ப வேண்டும். இவ்வாறு கிரகங்கள் வரிசையாக சாரத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிறது. சூரியன், புதன் மற்றும் ராகு – தனுர் மண்டலத்திற்குள்ளும் சந்திரன், வியாழன் மற்றும் கேது – மேஷ மண்டலத்திற்குள்ளும் செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனி – சிம்ம மண்டலத்திற்குள்ளும் உள்ளது.

நவாம்சம் என்பது

ராசி கட்டத்தில் இருக்கும் கிரகங்கள் உள்ளன என்பதை மட்டுமே ராசிகட்டங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இந்த நவகிரகங்கள் ஏதேனும் ஒரு கிரகம் எங்கே எப்படி உள்ளது என்பதை நவாம்சத்தில் பார்க்கும் பொழுது, இன்னும் அறிந்து கொள்வதற்காகவே எழுதப்படுகின்றன. பலர், நவாம்சத்தை வைத்து ராசி கட்டங்களாக பாவித்து பலன் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். அது அவர்களின் தனிப்பட்ட திறமை.

உண்மையில், நவாம்சம் என்பது ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் உள்ளது என்றும், அந்த கிரகம் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தில் எந்த பாத சாரத்தில் அமர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு உதவுகிறது. அவ்வாறு அறியும் பட்சத்தில கிரகங்களின் வலிமையை எளிதாக அளவீடு செய்வதற்கு உதவும் கருவிதான் நவாம்சம். மேலும், எந்த பாத சாரத்தில் அமர்ந்துள்ளது என்பதை அறியும் பொழுது கிரகத்தின் பாகையின் அளவை நாம் யூகிக்க முடியும்.

அவ்வாறு பாகையின் அளவு அதிகமானால் அந்த கிரகம் மீனம், கடகம், விருச்சிகம் போன்ற ராசிக்குள் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள இயலும். நவாம்சக் கட்டத்தில் மீனம், கடகம் மற்றும் விருச்சிகம் போன்றவை நீர் ராசிகள். அந்த நீர் ராசிக்குள் ஒரு கிரகம் அமரும் பொழுது ஜாதகர் நினைக்கும் காரியத்தை முடிக்கும் திறன், இந்த நீர் ராசியில் அமர்ந்த கிரகங்களுக்கு உண்டு.

மேலும், நீர் ராசியில் அமர்ந்த கிரகங்களின் திசா புத்திகள் நடைபெறும் காலத்தில் நற்பலன்களை செய்யும் என்பதை புரிந்து கொள்ளலாம். நெருப்பு ராசியில் அமர்ந்த கிரகங்கள் மிகக் குறைந்த அளவு பலன்களை பெறலாம். காற்று ராசியில் அமர்ந்த கிரகங்கள் மிகவும் மத்திமமான பலன்களை செய்யும் என்பதை இந்த நவாம்ச கட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதில், சில கிரகங்கள் வர்கோத்தமம் அடையும். அப்படி வர்கோத்தமமாகும் கிரகங்கள் அதன் தசா புத்தி காலங்களில் கண்டிப்பாக சிறப்பான பலன்களை செய்யும் என்பது உறுதி. அதாவது, வர்கோத்தமம் பெற்ற கிரகம் ஆட்சி பெற்ற தன்மைக்கு நிகரான பலன் என்று சொல்வார்கள்.

வர்கோத்தமத்தின் பலன்கள்

* லக்னம் வர்கோத்தமம் அடைந்தால், ஜாதகர் நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு உண்டாகும்.

* சூரியன் வர்கோத்தமம் அடைந்தால், ஜாதகர் அரசு சார்ந்த பதவிகளில் மிகவும் உயர்ந்த பதவியை அடைவார்கள்.

* சந்திரன் வர்கோத்தமம் அடைந்தால், ஜாதகர் மன வலிமை, கற்பனை வளம் மிக்கவராக இருப்பார்.

* புதன் வர்கோத்தமம் அடைந்தால், ஜாதகருக்கு புத்திக்கூர்மை, சிந்தனை, உயர் கல்வி, ஆராய்ச்சி திறன் உண்டு.

* வியாழன் வர்கோத்தமம் அடைந்தால், ஜாதகர் ஆன்மிக ஈடுபாடும், செல்வ வளம் உடையவர்.

* சுக்கிரன் வர்கோத்தமம் அடைந்தால், ஜாதகர் கலைத்துறையில் உயர்ந்த இடத்திற்கு செல்வார். அனைவராலும் விரும்பப்படுவார்.

* சனி வர்கோத்தமம் அடைந்தால், பல தொழில்கள் செய்யும் தொழிலதிபராக திகழ்வார். புதுப்புது தொழில்களை தொடங்கிக் கொண்டே வெற்றியும் அடைவார்.

* ராகு வர்கோத்தமம் அடைந்தால், மிகுந்த துணிச்சல் உடையவர், பிரமாண்டத்தை எப்பொழுதும் விரும்புவார்.

* கேது வர்கோத்தமம் அடைந்தால், மிகுந்த இறையருள் உண்டு. ஞானம் மிகுதியாகப் பெற்றவராகத் திகழ்வார்.

The post நவாம்சம் சொல்வது என்ன? appeared first on Dinakaran.

Tags : navamsam ,Sivaganesan ,Kotsara ,Navamsa ,
× RELATED ருசக யோகம்