×

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுக நகரம் நாகையிலிருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுக நகரமாக நாகப்பட்டினம் விளங்கியது. அலங்காரப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை தென் இந்தியாவிலிருந்து அயல்நாடுகளுக்கு அனுப்பும் முக்கிய ஏற்றுமதித் தளமாகவும், முக்கிய இறக்குமதி தளமாகவும் நாகப்பட்டினம் துறைமுகம் விளங்கியது. பன்னாட்டு சரக்குப் போக்குவரத்து மட்டுமின்றி பயணிகள் கப்பல் போக்குவரத்திலும் நாகப்பட்டினம் துறைமுகம் கோலோச்சியது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றிருந்தது. அந்த கால கட்டத்தில் ரோனா, ரஜூலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ஆகிய கப்பல்கள் இங்கு வந்து சென்றன. இதனால் எந்நேரமும் நாகப்பட்டினம் துறைமுகம் பரபரப்பாக இருக்கும். ஆனால் பல்வேறு கால மாற்றங்களால் கடந்த 1998க்குப் பின் நாகப்பட்டினம் துறைமுகம் செல்வாக்கை இழந்தது. ரோனா, ரஜூலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் ஆகிய கப்பல்கள் படிப்படியாக தங்களின் சேவையை குறைத்தன. ஒருகட்டத்தில் முற்றிலும் தங்களின் சேவையை நிறுத்தின. எம்.வி. சிதம்பரம் கப்பல் மட்டும் நாகப்பட்டினம் வந்து சென்றது.

1984ல் மலேசியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்த எம்.வி. சிதம்பரம் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கப்பலும் நாகப்பட்டினத்திற்கான சேவையை நிறுத்திக் கொண்டது. பின்னர் வெங்காய ஏற்றுமதியை மையமாகக் கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல் போக்குவரத்துத் தொடர்ந்து வந்தது. பினாங்கு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு வெங்காய ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றது. 1991ல் போர்ட்கிளாங் துறைமுகம் கன்டெய்னர் துறைமுகமாக மாற்றப்பட்டு மலேசியாவின் பிரதான துறைமுகமாக மேம்படுத்தப்பட்டது. அப்போது நாகப்பட்டினம் துறைமுகத்தில் கன்டெய்னர் கையாளும் வசதி இல்லாததால் வெங்காய ஏற்றுமதியும் தடைபட்டது. 1991 செப்டம்பர் 16ம் தேதி நாகப்பட்டினத்திலிருந்து எம்.வி. டைபா என்ற கப்பல் மூலம் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதே கடைசி ஏற்றுமதியாக அமைந்தது.

பின்னர் 1999லிருந்து நாகப்பட்டினம் துறைமுகம் வழியே பாமாயில் மற்றும் தேங்காய் புண்ணாக்கு இறக்குமதி நடைபெற்றது. இதன்மூலம் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 13 சிறு துறைமுகங்களில் ஓரளவு செயல்பாடும், லாபமும் கொண்ட துறைமுகங்களின் பட்டியலில் நாகப்பட்டினம் இடம் பெற்றது. இருப்பினும் போதுமான வளர்ச்சி நடவடிக்கைகள் இல்லாததாலும் நாகப்பட்டினத்திற்கு அருகே காரைக்கால் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதாலும் நாகப்பட்டினம் துறைமுகம் செயல்பாடுகளை இழக்க தொடங்கியது. இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயில் மட்டுமே இத்துறைமுகத்தை இயங்கச் செய்து வந்தது. அதுவும் கடந்த 6 ஆண்டுக்கு முன் நின்து. இத்துறைமுகத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தானது.

இது நாகப்பட்டினம் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் மருத்துவ குழுவினர், பாஸ்போர்ட் ஆய்வு செய்யும் அதிகாரிகள், இருநாட்டு அதிகாரிகள் என நிறைய அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்காக ஒன்றிய அரசு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து தற்போது நாகப்பட்டினம் துறைமுகத்தில் முதல் டெர்மினல் பணி தொடங்கப்பட்டுள்ளது. 1984 அக்டோபர் மாதம் எம்.வி. சிதம்பரம் கப்பலே கடைசி பயணிகள் மற்றும் சரக்கு கப்பலாக நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றது. அதன் பின் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளது நாகப்பட்டினம் மட்டுமன்றி, தமிழ்நாட்டையும் வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

The post சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுக நகரம் நாகையிலிருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Nagai ,Tamil Nadu ,Chola ,Nagapattinam ,Cholas ,Dinakaran ,
× RELATED புத்தாண்டில் அதிரடி விலை குறைப்பு.....