×

கிண்டியில் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட அரசு நிலத்தில் ரூ.38 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா

சென்னை: கிண்டியில் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட அரசு நிலத்தில் ரூ.38 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கிண்டியில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிலம் தனியாரிடம் இருந்து நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, 118 ஏக்கர் நிலம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இடத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும், என தமிழ்நாடு அரசால் அறிவிப்பு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையின் மைய பகுதியை பெரும் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்சென்னை மாநகராட்சி மூலம் அந்த இடத்தில் 4 குளங்கள் அமைக்கப்பட்டன.

இங்கு அமைத்துள்ள நீர்நிலைகளின் கரைகளை சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர் செடிகள் நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பூங்காவில், கருத்தை கவரும் கருத்தியல் தோட்டங்கள், குழந்தைகள் குதூகலித்திட விளையாட்டு திடல்கள், பறவைகள் விளையாடிட பறவை திட்டுகள், கண்கவர் நீரியல் தோட்டம், பசுமையான புல்வெளிகள், இயற்கையோடு இயைந்த அடர்வனம், பூங்காவை முழுமையாக கண்டுகளித்திட காட்சி மேடைகள், மரங்கள் சூழ்ந்த, நிழலுடன் கூடிய நடைபாதைகள் போன்ற கட்டமைப்புகளுடன் 25 ஏக்கர் பரப்பில், ரூ.37 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதேபோல், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றிடவும், இயற்கையோடு இயைந்த சூழலில் கண்ணாடி மாளிகை, ஜிப்லைன், பறவையகம், இசை நீரூற்று, மரவீடு, தோட்டக்கலை அருங்காட்சியகம், பனிமூட்ட பாதை, தொடர் கொடி வளைவுப்பாதை போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா, நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு அரசால் மீட்கப்பட்ட 6.09 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 13.21 ஏக்கரில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவிற்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் வான்வழி பார்வையில் சென்னை மாநகரின் எழிலை பொதுமக்கள் கண்டுகளித்திட ரூ.11 கோடியே 84 லட்சம் செலவில் இந்தியாவிலேயே முதன் முறையாக 30 மீட்டர் உயர செங்குத்து தோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ள 9 அடுக்குகளை கொண்ட உலகத்தரத்திலான ‘உயர் கோபுர மரத்தை’ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் நேற்று திறந்து வைத்தார். வேளாண் காடு வளர்ப்பில் தமிழ்நாட்டை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்றிடும் வகையில் ‘தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்பு கொள்கை 2026’ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Tags : Guindy ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu government ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...