×

வீராம்பட்டினத்தில் புகழ் பெற்ற செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் வடம் பிடித்தனர்

தவளகுப்பம், ஆக. 19: புதுச்சேரி வீராம்பட்டினத்தில் புகழ் பெற்ற செங்கழுநீரம்மன் கோயிலில் தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கிராமத்தில் வீரராகவர் என்ற மீனவர் ஒருநாள் மீன்பிடிக்க சென்றபோது அவர் வலையில் சிக்கிய ஒரு மரக்கட்டை அவரது கனவில் தோன்றி தன்னை அம்மனாக உருவாக்க வேண்டுமென்று கூறியதன்பேரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் என்ற கோயிலை அவர் உருவாக்கியதாக வரலாறு. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கழுநீரம்மன் கோயிலில் ஆடி மாதம் தோறும் 5வது வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். சுமார் 404 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தேரோட்டத்தை பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்து அப்போதைய புதுச்சேரியின் ஆளுநர் டூப்ளே வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த தேரோட்டத்தை கவர்னர் வடம் பிடித்து துவக்கி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 8 மணிக்கு நடந்தது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்எல்ஏ பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி, கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். வீராம்பட்டினம் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி இழுத்தனர்.

திருத்தேரானது மாட வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி எஸ்பிக்கள் வீரவல்லவன் (தெற்கு) மோகன்குமார் (டிராபிக்) ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்க அங்கு தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தன. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று (19ம்தேதி) இரவு 9 மணிக்கு தெப்பல் உற்சவமும், அதைத் தொடர்ந்து 25ம்தேதி சிறப்பு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.

The post வீராம்பட்டினத்தில் புகழ் பெற்ற செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் வடம் பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Governor ,Chief Minister ,Sengalu Neeramman Temple ,Veerampattanam ,Davalkuppam ,Tamilisai ,Rangasamy ,Puducherry Veerampattinam ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...