×

ரூ4.95 கோடியில் கட்டுமான பணிகள் தொடக்கம்

சேலம், ஆக.18: சேலத்தில் பிரசித்தி பெற்ற மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் ₹4 கோடியே 95 லட்சம் மதிப்பில் பக்தர்கள் தங்குமிடம், உணவருந்துமிடம் மற்றும் செயல் அலுவலர்கள் குடியிருப்பு கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோயில்கள் உள்ள மாநிலம் தமிழகமாகும். இங்கு 24 ஆயிரத்து 608 சிவன் கோயில்களும், 10 ஆயிரத்து 33 பெருமாள் கோயில்களும், சிறிய, பெரிய கோயில்கள் 10 ஆயிரத்து 346 உள்ளன. மொத்தம் 38 ஆயிரத்து 615 கோயில்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் உள்ள ஆயிரத்து 586 கோயில்களில், 2 ஆயிரத்து 359 குளங்கள் உள்ளன. கோயில்களில் ஆண்டு வருமானத்தை வைத்து தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ₹10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்கள் முதல்நிலை கோயிலாகவும், ₹5 லட்சம் வருமானம் வரும் கோயில் இரண்டாம் நிலை கோயிலாகவும், ₹3 லட்சம் உள்ள கோயில் மூன்றாம் நிலை கோயிலாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப கோயில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலில் தற்போது அன்னதானம் திட்டம், தினசரி பிரசாதம் வழங்கும் திட்டம், பூசாரிகளுக்கு ஓய்வூதியம், பல ஆண்டாக கும்பாபிஷேகம் நடக்காத கோயில்கள் கண்டறிந்து, அந்த கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தவும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தங்ககுமிடம், அதிகாரிகள், அலுவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், திருப்பணிகள், வணிக வளாகம், தடுப்புச்சுவர், முடிகாணிக்கை மண்டபம், உணவருந்துமிடம், கல்லூரி ஆய்வகங்கள் உள்பட பல பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், ஆன்மீகவாதிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனையேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு கோயில்களில் பணிகளை தமிழகஅரசு மேற்கொண்டுள்ளது.

இதன்படி படி, சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி, உணவருந்துமிடம், செயல் அலுவலர்கள் குடியிருப்பு கட்டும்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதற்கான பணிகளை முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதையடுத்து பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து சேலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் ெதாலைவிலும், புண்ணிய காவிரிநீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேச்சேரி உள்ளது. இங்கு சேலம்-தர்மபுரி மெயின் ரோடு பிரிவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பத்ரகாளிம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மேலும் கோயிலை சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன.

கருவறை முன் மண்டபத்தில் மையம் பகுதியிலிருந்து பார்த்தால் மூலவரையும், மூலவர் கோபுர தங்க கலசத்தையும் ராஜகோபுர கலசங்களையும் தரிசிக்கலாம். லைவிருப்பவர்களும் மூலவரை தடையின்றி பார்க்கும் வகையில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா காலங்களிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் வரும் பக்தர்கள் இளைப்பாறி செல்ல கிரானைட் பதித்த சுற்று மண்டபம், பிரமாண்டமான கொடி கம்பம், வசந்தை மண்டபங்கள் ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து மேச்சேரி பத்ரகாளிம்மனை வழிப்பட்டு செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் இக்கோயிலில் பக்தர்கள் தங்குமிடம், உணவருந்துமிடம், செயல் அலுவலர்கள் குடியிருப்பு கட்டும் பணிகள் உள்ளிட்டவைகள் ₹4 கோடியே 95 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post ரூ4.95 கோடியில் கட்டுமான பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Mecheri Bhadrakaliamman ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...