×

5 ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கை பிரிவை தடுக்க விபரீதம் நண்பனை திருமணம் செய்ய ரூ.11 லட்சம் செலவு செய்து பெண்ணாக மாறிய வாலிபர்: அழகாக இல்லை என திருமணத்துக்கு மறுத்ததால் அதிர்ச்சி

திருமலை: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரை சேர்ந்தவர் பவன்குமார்(30). விஜயவாடாவை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ்(30). இவர்கள் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். இந்த நெருக்கம் இருவரிடையே ஓரினச்சேர்க்கையை ஏற்படுத்தியது. இருவரும் வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால் தனித் தனியாக பிரிந்துவிடுவோம் என நினைத்து வருந்தி உள்ளனர். அப்போது நாகேஸ்வரராவ், `நீ டெல்லிக்கு சென்று ஆபரேஷன் செய்துகொண்டு வா, நீ பெண்ணாக மாறினால் நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழலாம்’ என ஆசை வார்த்தை கூறினாராம். இதை நம்பிய பவன்குமார், ஆபரேஷன் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதற்காக ரூ.11 லட்சம் செலவு செய்து, பவன் கல்யாண் பெண்ணாக மாறியுள்ளார்.

இதுதவிர நாகேஸ்வரராவ் கேட்டுக்கொண்டதன்பேரில் அவருக்கு அடிக்கடி நகை, பணம் ஆகியவற்றை பவன்குமார் கொடுத்துள்ளார். மொத்தம் 11 சவரன் நகை, ரூ.26 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. நாகேஸ்வரராவ் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில் பவன்குமார் நாகேஸ்வரராவிடம் வந்து நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். அதற்கு நாகேஸ்வரராவ், ‘நீ அழகாக இல்லை. அதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது’ என மறுப்பு தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு பவன்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் நாகேஸ்வரராவ் சரிவர பேசாமல் இருந்தாராம். பவன்குமார் பெண்ணாக மாறியது தனது பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் மறைத்துள்ளார். தன்னை திருமணம் செய்யும்படி நாகேஸ்வரராவிடம் கேட்டும் அவர் மறுத்து ஆபாசமாக திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பவன்குமார், கடந்த 10ம் தேதி மங்களகிரி போலீசில் புகார் அளித்தார். அதில், நெருங்கிய நண்பனை நம்பியதால் இன்று நகை, பணம் மற்றும் எனது பிறப்பையும் மாற்றி மன உளைச்சலில் உள்ளேன். நாகேஸ்வரராவை உடனடியாக கைது செய்யுங்கள்’ என கதறி அழுதபடி மனு கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான நாகேஸ்வரராவை தேடி வருகின்றனர்.

The post 5 ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கை பிரிவை தடுக்க விபரீதம் நண்பனை திருமணம் செய்ய ரூ.11 லட்சம் செலவு செய்து பெண்ணாக மாறிய வாலிபர்: அழகாக இல்லை என திருமணத்துக்கு மறுத்ததால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Pawan Kumar ,Benamalur, Krishna District, Andhra Pradesh ,Nageswar Rao ,Vijayawada ,
× RELATED திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய செயல் அதிகாரி நியமனம்