கூடுவாஞ்சேரி, ஆக. 17: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவாயில் முன்பு ஜிஎஸ்டி சாலையில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை வெள்ள தடுப்பு சிறப்பு அலுவலர் ஜான்லூயிஸ் ஆய்வு நேற்று செய்தார்.
சென்னை – வண்டலூர் அடுத்த கிளாம்பாகத்தில் சுமார் ₹400 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெப்ப சலனத்தால் திடீரென கன மழை பெய்தது. அப்போது, கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் மழைநீர் சூழ்ந்து கொண்டு கடல்போல் காட்சி அளித்தது.
இதனால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் வரை உள்ள ஜிஎஸ்டி சாலை இரண்டு பக்கத்திலும், இதேபோல் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், அவசர ஆபத்துக்கு கூட செல்ல வழி இல்லாமல் 108 ஆம்புலன்ஸ்கள் தவியாய் தவித்தன. இதனால், குறித்த நேரத்திற்கு வீட்டிற்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அன்றாடம் வேலைக்கு சென்று வருவோம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
மேலும், சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் முன்பு ஜிஎஸ்டி சாலை விவரங்களில் ₹6 கோடி மதிப்பீட்டில் மழைநீர் பாலம் மற்றும் கால்வாய் வாசதியை செய்து தருவதற்காக நிதி ஒதுக்கி அனுமதி கொடுத்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை சார்பில் இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த பணிகளை இதுவரை செய்யாததால் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா அடிக்கடி தள்ளிபோய் வருகிறது. மேலும், பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையை 3 அடி உயரம் எழுப்பி சாலை அமைத்தால் மட்டுமே அப்பகுதியில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க முடியும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குனர் மற்றும் வெள்ள தடுப்பு சிறப்பு அலுவலர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சிஎம்டிஏ நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினரிடம் ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பகுதிகளிலும் மழை நீர் பாலம் மற்றும் கால்வாய் வசதிகளை செய்து தரும் வரை மழைக்காலத்தின்போது பேருந்து நிலையத்தின் முன்பு தேங்கும் மழை நீரை மின் மோட்டார் மூலம் தற்காலிகமாக வெளியேற்றி அதை அருகிலுள்ள வண்டலூர் மற்றும் ஓட்டேரி ஏரிகளில் சென்றடையவும் உத்தரவிட்டார்.
The post கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவாயில் முன்பு வெள்ள பாதிப்பு பகுதிகளை சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.
