கடலூர், ஆக. 15: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நல ஆணையம், ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் முன்னிலையில் பலமுறை பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்படாததால், கடந்த 20 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கடந்த 2 நாட்களாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டமும் மேற்கொண்டனர். இதில் 3 பேர் மயக்கமடைந்தனர். தொழிலாளர்கள் போராட்டம் கோரிக்கைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து என்எல்சி நிர்வாகம், ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுடன் ஆட்சியர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருகிற 22ம் தேதி வரும் தீர்ப்பை என்எல்சி நிர்வாகமும், தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். போராட்டம் தொடர்பாக ஒப்பந்த பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக வழங்கப்பட்ட நோட்டீஸ் மீது என்எல்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்றும் நிர்வாகம் உறுதியளித்ததை தொடர்ந்து, வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் appeared first on Dinakaran.
