×

இந்த வார விசேஷங்கள்

12.8.2023 – சனி
தேய்பிறை ஏகாதசி

சூரியன் கடக ராசியில் பிரவேசிக்கும் மாதம் ஆடி மாதம் ஆகும். அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமான ஆடி மாத ஏகாதசி விரதத்தால், வாழ்வில் மேன்மையான பலன்கள் உண்டாகும். முற்காலத்தில் ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் நல்லவர்தான் என்றாலும் விதிவசத்தால் அவர் அறியாமலேயே ஒரு அந்தணரின் மரணத்திற்கு காரணமாகிவிட்டார். இதனால், அந்த செல்வந்தருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது. வீடு, செல்வம் அனைத்தையும் இழந்து துறவியாக சென்று காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ரிஷியிடம் தனது துன்பக் கதையைச் சொல்லி வருந்தி கண்ணீர் விட்டார்.

மனம் இளகிய முனிவர், ஆடி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் இருப்பதன் மகிமையையும், விரத முறைகளையும் எடுத்துக்கூறினார். அதன்படியே அந்த செல்வந்தரும் செய்தார். ஏகாதசியின் பலனாக செல்வந்தரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. வறுமையும் விலகியது. செல்வந்தர், தான் இழந்த வீடு, குடும்பம், செல்வம் ஆகிய அனைத்தையும் திரும்பப் பெற்றார்.

இந்த ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, தாமரை பூ (வெண்தாமரைக்கு புண்டரீகம் என்று பெயர். அது பெருமாளுக்கு விசேஷம். தாயார் இருக்கும் இடமல்லவா) சமர்ப்பித்து, கிருஷ்ணதுளசி இலைகள் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வைத்து படையல் போட வேண்டும். தூப தீபங்கள் ஏற்றி விஷ்ணு சகஸ்ரநாமம், பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன் தரும். எனினும், உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருந்தால், உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு, ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பசு கன்று தானம் செய்த பலன்.

குருக்ஷேத்ராவில் கிரஹணம் போது ஸ்னானம் செய்தல், அஸ்வமேத யாகம், காசியில் கங்கா ஸ்னானம் செய்தல், பத்ரி கேதார யாத்திரை செல்லல், பூமி தானம் செய்தல் ஆகியவற்றால் கிடைக்கும் புண்ணியம், இந்த `காமிக ஏகாதசி விரதம்’ இருப்பவர்கள் கிடைக்க பெறுகிறார்கள். ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு யம பயம் (மரண பயம்) உண்டாகாது. மறுபிறவி இல்லா முக்தி நிலையும் கிடைக்கப் பெறும். பித்ரு தோஷங்கள் நீங்கும். அன்று பாட வேண்டிய பாசுரம்.

தருதுயரம் தடாயேலுன்
சரணல்லால் சரணில்லை,
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ்
விற்றுவக்கோட் டம்மானே,
அரிசினத்தா லீன்றதாய்
அகற்றிடினும், மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி
அதுவேபோன் றிருந்தேனே.

13.8.2023 – ஞாயிறு
மஹா பிரதோஷம்

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த காலவேளையே பிரதோஷ வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதமிருமுறை பிரதோஷம் வரும். திரயோதசி திதியில் சூரிய மறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோஷகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோஷ காலம். சிவதரிசனம் செய்து எல்லையற்ற நற்பலனைப் பெறுக.

சூரியனின் நாளான இன்று வரும் பிரதோஷம் சிறப்பானது. காரணம், குருவின் புனர்பூசத்தில் வருகிறது. அடுத்தடுத்த ராசியில் சந்திரனும் புதனும் இருக்கும் இந்த அமைப்பில் சிவபிரானை பிரதோஷ வேளை பூஜை செய்ய உடனடி பலன் நிச்சயம். அபிஷேகத்தின் போதும், அலங்காரம் செய்ய திரை போட்டிருக்கும் போதும் மெல்ல கோஷ்டியோடு சேர்ந்து மங்கள தோத்திரங்களைப் பாடுங்கள். நந்தி பகவான் அபிஷேகத்தின் போது, கீழே உள்ள பாடலைச் சொல்லுங்கள்.

நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை
நாகேச் சரமிடமா நண்ணி னானைச்
சந்திமல ரிட்டணிந்து வானோ ரேத்துந்
தத்துவனைச் சக்கரம்மாற் கீந்தான் தன்னை
இந்துநுழை பொழிலாரூர் மூலட் டானம்
இடங்கொண்ட பெருமானை யிமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியில் அப்பன் தன்னை
யடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே
கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி
குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி
புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

13.8.2023 – ஞாயிறு
கூற்றுவ நாயனார் குரு பூஜை

கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம் பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர். திருக்களந்தை என்னும் ஊரில் களப்பாளர் மரபில் தோன்றியவர், கூற்றுவ நாயனார். போர் புரிகையில் கூற்றுவனைப் போல் மிடுக்குடன் போர்புரிவார். எனவே இவர் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார். பஞ்சாட்சர மந்திரமும், சிவநெறியும் இவர் வாழ் நெறியாகும். எப்பொழுதும் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதியபடியே இருப்பார்.

சிவனடியார்களைக் கண்டால் சிவனாகவே எண்ணி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார். குறுநில மன்னரான கூற்றுவ நாயனார், தம்முடைய வலிமையால் மூவேந் தர்களையும் வென்று வெற்றி வீரராக விளங்கியபோதும், அவரால் முடியுடை மன்னராக முடியவில்லை. மணிமுடியை தாமாகவே மன்னர்கள் சூடிக் கொள்வதில்லை. வேளாளச் செல்வர்கள் தரச் சிறந்த அந்தணர்கள் உரிமையுடைய மன்னர்களுக்கு மணிமுடியைச் சூட்டுவார்கள். தில்லை, திருவாரூர், உறையூர் மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் சோழ மன்னர்கள் முடிசூடிக் கொள்ளுவது வழக்கம்.

கூற்றுவ நாயனார் இறைவனின் திருக்கோயில்களில் சிறந்த தலமான தில்லையில் முடிசூடிக் கொள்ள ஆர்வம் கொண்டார். அதே சமயத்தில் சோழர்களின் மணிமுடியை தில்லைவாழ் அந்தணர்கள் பாதுகாத்து வந்தனர். ஆதலால், தில்லையை அடைந்த கூற்றுவ நாயனார் மணிமுடி சூடிக் கொள்ளும் தம்முடைய விருப்பத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார். அதற்கு தில்லைவாழ் அந்தணர்கள் “சோழப் பரம் பரையில் வரும் மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்களுக்கு மரபுக்கு மாறாக திருமுடி அணிவிக்க மாட்டோம்.” என்று மறுத்துவிட்டனர்.

சோழ நாட்டினை ஆளும் மன்னனுக்கு முடிசூட மறுத்ததால் அரசனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தில்லை வாழ் அந்தணர்கள் அஞ்சினர். ஆதலால், தம்மில் ஒரு குடும்பத்தாரை மட்டும் தில்லை ஆடலரசனுக்கு வழிபாட்டினை நடத்தவும், சோழ அரசரின் மணிமுடியைப் பாதுகாக்கவும் சோழநாட்டில் விட்டுவிட்டு ஏனையோர் சேர நாட்டிற்கு புலம் பெயர்ந்தனர்.

தில்லைவாழ் அந்தணர்கள் சோழ நாட்டினைவிட்டு சென்றதற்கான காரணம் தெரியாமல் கூற்றுவ நாயனார் வருந்தினார். தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூடாவிட்டாலும், அவர்களுள் முதல்வராகிய `ஆடலரசனின் திருவடியை நன்முடியாகச் சூடிக் கொள்வேன்’ என்று எண்ணி அம்பலத்தரசனை, ‘நீயே நின் திருவடியை எனக்கு மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும்’ என்று மனமுருகி வேண்டிக் கொண்டார். அன்றிரவு கூற்றுவ நாயனார் துயில்கையில் அவர் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சித பாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாகச் சூட்டினார்.

உடனே விழித்தெழுந்த நாயனார், தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார். இறைவனின் திருவருளை எண்ணி எண்ணி உருகினார். தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து ‘எதற்கும் அஞ்ச வேண்டாம்’ என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வரவழைத்தார் கூற்றுவர். கூற்றுவ நாயனார் இறைவனார் கோயில் கொண்டுள்ள பலத் திருத்தலங்களுக்கும் சென்று, திருத்தொண்டுகள் செய்து வழிபட்டார். இறுதியில், வீடுபேற்றினை இறையருளால் பெற்றார். கூற்றுவ நாயனார் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்
கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்
பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்
பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த
மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி
மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில்
சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து
திருவருளா லமருலகஞ் சேர்ந்துளாரே

14.8.2023 – திங்கள்
மாத சிவராத்திரி

இன்று மாத சிவராத்திரி. இந்த நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாய மந்திரம் சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தரும். சிவாலயம் செல்வதும், சிவபூஜைக்கு உதவுவதும், சிவத் தொண்டு புரிவதும் உத்தம பலன்களைத் தரும். இன்று இந்த அழகான தேவாரத்தைப் பாடுங்கள்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

(இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும், மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும், வீசுகின்ற தென்றலின் சாயலும், செறிந்த இளவேனிலின் மாட்சியும், ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும்)

16.8.2023 – புதன்
ஆடி அமாவாசை

ஆடி மாதம் சூரிய பகவான், தெற்கு திசையில் தனது ரதத்தை செலுத்தும் மாதமாகும். மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு சூரிய பகவான் மாறும் காலம். இந்த மாதத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் சேரும் நேரம் அமாவாசை ஆகும். சந்திரனுடைய ராசியில் சூரியன் சேரும் சிறப்பு இந்த அமாவாசைக்குரியது.
புதன் கிழமை புதனுக்குரிய ஆயில்ய நட்சத்திரத்தில் ஏற்படுவது இன்னும் சிறப்பு. சூரியன், சிம்ம ராசியில் முழு வலிமையோடு பிரவேசிக்கும் காலத்தில் நிகழும் அமாவாசை. டிகிரி அமைப்பில் குருவின் பார்வையும் கிடைப்பது இன்னும் சிறப்பு.

இந்த நாளில் பிதுர் உலகத்திலிருந்து முன்னோர்கள் பிரயாணம் செய்து வருகிறார்கள். பொதுவாக, அமாவாசை திதியன்று முன்னோர்களையும், பெரியோர்களையும் வழிபட மிக சிறந்த நாள். மேலும், அன்று இறந்தவர்களுக்குத் எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அதே போல், அமாவாசை நாளன்று குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம். அன்றைய நாளில் அம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. அரச மரம் வலம் வருவதும் சிறந்த பலனைத்தரும்.

தவிர்க்க வேண்டியவை

1. அமாவாசை நாளில் தெரியாமல்கூட வாசலில் கோலம் போடக் கூடாது.

2. அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி அமாவாசை தினத்தில் அசைவம் சமைக்கக் கூடாது.

3. காகத்திற்கு அமாவாசை தினத்தில் கட்டாயம் உணவு கொடுக்க வேண்டும். அது முன்னோர்கள் நேரடியாக வந்து உண்பதற்குச் சமம் எனச் சாஸ்திரம் கூறுகிறது.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Shani Teipirai Ekadasi ,
× RELATED இந்த வார விசேஷங்கள்