பள்ளிபாளையம், ஆக.11: அதிக பாரமேற்றி வரும் கரும்பு லாரிகளில் இருந்து சாலையில் கொட்டப்படும் கரும்புகள் அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் இருந்து பள்ளிபாளையம் தனியார் சர்க்கரை ஆலைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரி மற்றும் டிராக்டர்கள் கரும்பு பாரமேற்றி வருகிறது. ஆலை நிர்வாகம் கரும்பு லாரிகளுக்கு வழங்கும் வாடகை கட்டுப்படியாவதில்லை. இதனால் லாரி மற்றும் டிராக்டர்களில் அதிகப்படியான கரும்புகள் ஏற்றப்பட்டு நெரிசல் மிகுந்த சாலைகள் வழியாக கொண்டு வரப்படுகிறது. 3 டன் ஏற்ற வேண்டிய லாரிகளில், 15 டன் கரும்புகள் ஏற்றிவருவதால் சாலைகள் சேதமடைகிறது.
அதிகப்படியான கரும்புகள் ஏற்றிய லாரிகள் வேகத்தடைகளில் ஏறி இறங்குவதால் ஏற்படும் அதிர்வில், கயிற்றால் கட்டப்பட்ட கட்டுகள் விலகி சாலையில் கொட்டுகிறது. இந்த கரும்புகளை லாரி ஓட்டுனர்கள் அலட்சியப்படுத்தி அப்படியே சாலையில் போட்டுச்செல்கின்றனர். கரும்புகள் சாலையில் கொட்டி கிடப்பது, விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த கரும்புகளை ஆலை நிர்வாகமோ, நெடுஞ்சாலைத்துறையோ அப்புறப்படுத்துவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு இழப்பும், வாகன நெரிசலும் ஏற்படுகிறது. சாலையில் கரும்பு கிடப்பது இருளில் தெரிவதில்லை. இதனால் அடுத்து வரும் வாகனங்கள் ஏறி விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சாலையில் கரும்புகள் கொட்டினால் அதை உடனடியாக அப்புறப்படுத்தும் பணியில் ஆலை பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் நெடுஞ்சாலைத்துறையோ, காவல்துறையோ உடனுக்குடன் கரும்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அதிக பாரமேற்றி வரும் கரும்பு லாரிகளால் அபாயம் appeared first on Dinakaran.
