×

பாரதியார் பல்கலை. பேராசிரியர்கள் அசத்தல் செங்காந்தள் செடியில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு: ஒன்றிய அரசு காப்புரிமை வழங்கியது

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியை சாரதாதேவி மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியர் குருசரவணன் ஆகியோர் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் நானோ துகள்களை உருவாக்கியதற்காக ஒன்றிய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது. இது குறித்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நானோ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்படும் பல்வேறு வகையான உலோக நானோ துகள்கள் புற்றுநோய் சம்பந்தப்பட்ட சிகிச்சை அளிக்கும் முறைகளில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த நிலையில் இயற்கை முறையில் செங்காந்தள் தாவர கிழங்கின் சாற்றினை கொண்டு வெள்ளி நானோ துகள்களை கண்டறியும் ஆராய்ச்சியை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சாரதாதேவி மற்றும் குருசரவணன் மேற்கொண்டனர். இவர்கள் ஒரே சீரான அளவு மற்றும் வடிவம் கொண்ட வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்தனர்.  இதற்கான காப்புரிமைக்காக ஒன்றிய அரசின் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் கடந்த 2020ல் விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் 31ம் தேதி இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் லொவ்லினா லிட்டில் பிலோவர், பதிவாளர் முருகவேள் ஆகியோர் பேராசிரியர்களை பாராட்டினர். பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமை மையத்தின் முயற்சியால் கடந்த 6 ஆண்டுகளில் 32 காப்புரிமைகளை பதிவு செய்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து பேராசிரியர்கள் சாரதா தேவி மற்றும் குருசரவணன் ஆகியோர் கூறியதாவது: தற்போது உள்ள புற்றுநோய் மருந்துகள் புற்றுநோய் பாதிக்காத செல்களையும் அழிக்கின்றன. ஆனால் செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து வெள்ளி நானோ துகள்களை புற்றுநோய் பாதித்த செல்களால் எளிதில் உட்கிரகிக்கப்படுகிறது. இதன்மூலம் புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எளிதில் கண்டறிந்து அழிக்கின்றன. இதன்மூலம் புற்றுநோயை குணப்படுத்த இந்த துகள்கள் உதவுகிறது. மற்ற செல்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. இதற்கான ஆராய்ச்சியை கடந்த 2015ல் துவங்கினோம். 2018ல் இதனை கண்டுபிடித்தாலும் அனைத்து தகவல்களையும் திரட்டி 2020ல்தான் காப்புரிமைக்கு விண்ணப்பித்தோம். முதலில் எலிக்கு செலுத்தி வெற்றி அடைந்துள்ளோம். மனிதர்களின் பயன்பாட்டிற்கு இந்த நானோ துகள்களை கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்கும் என்றனர்.

The post பாரதியார் பல்கலை. பேராசிரியர்கள் அசத்தல் செங்காந்தள் செடியில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு: ஒன்றிய அரசு காப்புரிமை வழங்கியது appeared first on Dinakaran.

Tags : Bharatiyar University ,Union Govt. Coimbatore ,Saradadevi ,Department of Biochemistry ,Coimbatore ,Guru Saravanan ,Department of Botany ,Union government ,Dinakaran ,
× RELATED போகி பண்டிகை கொண்டாட்டத்தால்...