* ஆட்டம், பாட்டம், விளையாட்டுடன் கொண்டாட்டம்
* அமைச்சர் ராஜேந்திரன், வெளிநாட்டினர் பங்கேற்பு
சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆட்டம், பாட்டம், விளையாட்டுகளுடன் நடந்த இவ்விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வெளி நாட்டு மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கும், உழைப்பிற்கும் நன்றி கூறும் திருநாளாகவும், சமூக வேறுபாடுகளை மறந்து ‘‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’’ என்ற உயரிய தமிழர் சிந்தனையை, நடைமுறையில் வெளிப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது. இந்த பொங்கல் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும், சமத்துவத்தை கடைபிடிக்கும் விதமாகவும் பொங்கல் விழாவை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழ் மற்றும் தமிழர் கலாசாரம், பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொங்கல் விழா காலங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத்துறையால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தவகையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சுற்றுலாத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, சமத்துவ பொங்கலிட்டார். இதில், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், நேபாளம், ஆப்பிரிக்கா, சூடான், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர்.
இச்சமத்துவ பொங்கல் விழாவையொட்டி, கலெக்டர் அலுவலக வளாகம் வாழை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பாரம்பரிய பொருட்கள், அழகிய வண்ணமிகு கோலங்கள், தோரணங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாரம்பரியமிக்க பரதநாட்டியம், செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அரசு அலுவலர்கள் பங்கேற்ற உறியடி, கயிறு இழுத்தல், லக்கி கார்னர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இச்சமத்துவ பொங்கல் விழாவில் சுவையான பொங்கல் செய்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. குறிப்பாக, ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி 5 மண் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் சேலத்தில் தங்கியிருந்து படித்து வரும் வெளிநாட்டு மாணவ, மாணவிகளை மாட்டு வண்டியில் ஏற்றி கலெக்டர் அலுவலகத்தை சுற்றி வந்தனர். முன்னதாக அவர்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன், மாலை அணிவித்து மகிழ்வித்தார்.
இந்த சமத்துவ பொங்கல் விழாவானது, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுகாதாரப்பணிகள், கழிவு மேலாண்மை, மரம் நடுதல், சுய உதவிக்குழுவினருக்கு இடையே கோலப்போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்விழாவில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பொன்மணி, மாநகராட்சி துணைமேயர் சாரதாதேவி, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷாலினி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஜானகி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
