×

சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியை முன்னிட்டு மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு

சென்னை: சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியை முன்னிட்டு, நாளை அதிகாலை 3 மணி முதல் 11 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி நாளை அதிகாலை 4 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த மாரத்தான் நிகழ்வானது 4 பிரிவுகளில் நடைபெறும் (5 கி.மீ, 10 கி.மீ, 21.1 கி.மீ, 42.2 கி.மீ). அனைத்து பிரிவுகளும் அண்ணா நினைவிடம், மெரினா கடற்கரையில் தொடங்கி தீவுத்திடல் மைதானத்தில் முடிவடையும். இதனால் வாகன ஓட்டிகள் வழக்கமான பாதையில் செல்வதற்கு பதிலாக மாற்றுப் பாதையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் அதிகாலை 3 மணி முதல் 11 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

* ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் பாரீஸ் கார்னர், என்.எப்.எஸ் சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி அண்ணாசாலையில் வெலிங்டன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* வாலாஜா சந்திப்பில் இருந்து அண்ணா சிலை சந்திப்பு வரை உள்ள வலதுபுற சாலை இருவழிப் பாதையாக செயல்படும்.

* அண்ணா சிலையில் இருந்து வாலாஜா சாலை செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவ்வழியே செல்லும் வாகனங்கள் பெரியார் சிலை மற்றும் பாட்டா சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* பாரதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை மற்றும் லாய்ட்ஸ் சாலையிலிருந்து காமராஜர் சாலை செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஐஸ்அவுஸ் சந்திப்பு மற்றும் ரத்னா கபே-வில் இருந்து திருப்பி விடப்பட்டு டாக்டர் நடேசன் சாலை செல்ல அனுமதிக்கப்படும்.

* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை கூட்டுசாலை காரணீஸ்வரர் பக்கோடா தெரு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு காரணீஸ்வரர் பக்கோடா தெரு வழியாக டாக்டர் நடேசன் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* மியூசிக் அகாடமியில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு வி.எம்.சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ராமகிருஷ்ணா மடம் சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* அண்ணாசாலையில் வரும் கனரக வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து அண்ணாசிலை செல்ல அனுமதி இல்லை. ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து பின்னி சாலை மற்றும் மார்ஷல் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியை முன்னிட்டு மெரினா கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Marina Beach Road ,International Artists Memorial Marathon ,Chennai ,International Artist Memorial Marathon ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?