×

சின்னாளபட்டி பகுதியின் நீண்ட நாள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ₹6.50 கோடியில் சாலை விரிவாக்க பணி ‘டாப் ஸ்பீடு’ அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மக்கள்

நிலக்கோட்டை, ஆக. 3: சின்னாளபட்டியின் முக்கிய சாலைகளில் ரூ.6.50 கோடியில் சாலை விரிவாக்க பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வழங்கிய அமைச்சருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியாக உள்ளது. சுங்குடி சேலை உற்பத்தி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களான பீரோ, கட்டில் உற்பத்தி என வளர்ந்து வரும் தொழில் நகரமாகவும், வியாபார நகரமாகவும் உள்ளது. காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உட்பட சிறந்த பள்ளி கல்லூரி நிலையங்கள் நிறைந்த பகுதி என்பதால் திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரமாகி வருகிறது.

இதனால் திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் இருந்து நகர் பகுதியில் உள்ள பஸ்நிலையம் மற்றும் கீழக்கோட்டை, சீவல் சரக்கு வழியாக செம்பட்டி செல்லும் குறுகலான சாலையில் சமீபகாலமாக போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் உத்தரவின் பெயரில் ரூ.6.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு மடங்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வெகு நாட்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் இனி நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். மேலும் சாலை விரிவாக்கபணிக்கு உத்தரவிட்ட அமைச்சருக்கு இப்பகுதி வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் என பலரும் நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து சின்னாளப்பட்டி திமுக பேரூர் செயலாளரும் சமூக செயல்பாட்டாளருமான மோகன்ராஜ் கூறுகையில், மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகர் பகுதிகளில் ஒன்றான சின்னாளப்பட்டி நகரில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இதனால் சின்னாளபட்டி பிரிவான தேசிய நான்கு வழிச்சாலையில் இருந்து பூஞ்சோலை வழியாக பேருந்து நிலையம் செல்லும் வழியிலுள்ள விவி மஹால்வரை ஐந்து மீட்டர் அளவுள்ள மிகவும் குறுகலான பிரதான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதனை அடுத்து கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த வாக்குறுதியின் படி 6.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கித்தந்து உடனடியாக சாலை விரிவாக்க பணிகளை செய்ய உத்தரவிட்டார், இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் கண்ணன் மற்றும் உதவி பொறியாளர் பரத் ஆகியோரது நேரடி பார்வையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சிமென்ட் வடிநீர் கால்வாயுடன் சிறிய பாலங்கள் மற்றும் இணைப்பு கால்வாயுடன் இரண்டு மடங்கு அகலமாக சுமார் பத்து மீட்டர் தார்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தார் சாலையிலிருந்து சிமென்ட் வடிநீர் கால்வாய் வரையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுவதால் நீண்ட அகலமான நவீன உயர்தரசாலையாக மாற்ற மேற்பார்வையாளர் அருள்சாமி தலைமையில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. என்றார்.

The post சின்னாளபட்டி பகுதியின் நீண்ட நாள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ₹6.50 கோடியில் சாலை விரிவாக்க பணி ‘டாப் ஸ்பீடு’ அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,Minister ,Nilakottai ,Dinakaran ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...