×

சுகாதாரமின்றி உள்ள கடம்பர்கோயில் படித்துறை தூய்மை பணி மேற்கொள்ளப்படுமா?

 

குளித்தலை ஜூலை 28: வரும் ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் குளித்தலை கடம்பர் கோயில் காவிரி ஆற்று படித்துறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலையில் சிவாலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும் காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும் சிவ ஸ்தலங்களில் ஒன்றாக உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில் உள்ளது. குளித்தலை காவிரி ஆறு, கடம்பன் துறையிலிருந்து ஆடி மாத திருவிழா காலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் காவிரி ஆற்றில் நீராடி பால்குடம், தீர்த்த குடம், காவடி எடுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது. ஆடி 18 அன்று புதுமண தம்பதிகள் புத்தாடை உடுத்தி, படித்துறையில் வணங்கி, ஆற்றில் நீராடுவது வழக்கமாக உள்ளது. திருச்சி அம்மா மண்டபத்துக்கு அடுத்தபடியாக குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதும் வழக்கம். இத்தனை சிறப்பு வாய்ந்த கடம்பன் துறை தற்போது சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. வரும் ஆகஸ்ட் 3ம் தேதி, ஆடி 18 விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. முன்பெல்லாம் ஆடி 18 காலத்தில் காவிரி கரை வரை தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும். தற்போது ஆற்றின் உள் பகுதியில் மட்டும் தண்ணீர் செல்கிறது. வரும் நாட்களில் தண்ணீர் கூடுதலாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழா நெருங்கி வரும் நிலையில் காவிரி ஆற்று படித்துறை பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு, விழாவை சிறப்பாக கொண்டாட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post சுகாதாரமின்றி உள்ள கடம்பர்கோயில் படித்துறை தூய்மை பணி மேற்கொள்ளப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kadampur ,Kulithalai ,Adiperku festival ,Kulithalai Kadambara ,Kadambar ,
× RELATED கடம்பூர் மலைச் சாலையில் மூங்கில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு