×

மணிப்பூர் வன்முறை அண்டை மாநிலங்களுக்கு பரவுவதால் ‘மெய்டீஸ்’ மக்களே மிசோரமை விட்டு வெளியேறுங்கள்!: போராளிகள் அமைப்பு விடுத்த அறிக்கையால் பதற்றம்

அஜ்வால்: மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் அண்டை மாநிலங்களுக்கும் பரவுவதால், மிசோரஃமில் வசிக்கும் மெய்டீஸ் மக்கள் தங்களது மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு போராளிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மணிப்பூரில் இரண்டு இன குழுக்களுக்கு இடையே மே 3ம் தேதி முதல் நடக்கும் வன்முறை சம்பவங்களால் இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானனோர் படுகாயமடைந்தனர்.

தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரங்கள் அரங்கேறி வருவதால், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். ராணுவம், மாநில அரசின் போலீசார் பாதுகாப்பில் இருந்தும், மணிப்பூரில் பதற்றங்கள் குறையவில்லை. கடந்த சில தினங்களுக்கு மணிப்பூரில் வசிக்கும் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் கண்டனங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மணிப்பூர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான அசாம், மிசோரமிலும் மெய்டீஸ் இன மக்கள் வசிக்கின்றனர். மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து அண்டை மாநிலங்களிலும் மெய்டீஸ் மக்களுக்கு எதிராக சிலர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அந்த மாநிலங்களிலும் வன்முறை பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து மிசோரமில் உள்ள முன்னாள் போராளிகள் அமைப்பு (PAMRA) வெளியிட்ட அறிவிப்பில், ‘மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, அண்டை மாநிலமான மிசோரமில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த மெய்டீஸ் இன மக்கள், இனிமேல் மிசோரமில் வசிப்பது பாதுகாப்பானதாக இருக்காது.

காட்டுமிராண்டித்தனமான, கொடூரமான செயல்களால் மெய்டீஸ் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மிசோரமில் வசிக்கும் மெய்டீஸ் மக்கள், தங்களது பாதுகாப்பு கருதி மணிப்பூருக்கே திரும்பி செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சி லால்தென்லோவா கூறுகையில், ‘பாதுகாப்பு கருதி மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இது ஒன்றும் கட்டளையோ, எச்சரிக்கையோ அல்ல. மிசோரமில் வசிக்கும் மெய்டீஸ் சமூக மக்களின் பாதுகாப்பை கருதியே அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்த அறிவுறுத்தல்கள் யாவும், மணிப்பூரைச் சேர்ந்த மெய்டீஸ் மக்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற இடங்களிலிருந்து வந்தவர்களுக்கு அல்ல’ என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து மிசோரம் உள்துறை ஆணையரும், செயலாளருமான எச் லாலெங்மாவியா கூறுகையில், ‘அண்டை மாநிலத்தில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, மிசோரம் காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஜோரம்தங்காவும், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். மெய்டீஸ் மக்கள் மிசோரமை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசு ேகட்டுக் கொண்டுள்ளது’ என்றார்.

The post மணிப்பூர் வன்முறை அண்டை மாநிலங்களுக்கு பரவுவதால் ‘மெய்டீஸ்’ மக்களே மிசோரமை விட்டு வெளியேறுங்கள்!: போராளிகள் அமைப்பு விடுத்த அறிக்கையால் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Manipur ,Ajwal ,Meites ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...