திருப்போரூர், ஜூலை 23: அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் மூலம் கழிவுநீர் அகற்றப்படுவதாக புகார் வந்ததன்பேரில், அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தார். திருப்போரூர் பேரூராட்சி, கண்ணகப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்களை வைத்து கழிவுநீர் அகற்றப்படுவதாக, சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. மேலும், மின்னஞ்சல் மூலம் தேசிய தூய்மை பணியாளர்கள் நலவாரியத்திற்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்பேரில், தேசிய தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் வெங்கடேசன் நேற்று கண்ணகப்பட்டு கிராமத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம், கழிவுநீர் தொட்டியில் நிரம்பும் மனித கழிவுகளை அகற்றும் பணியில் இயந்திரங்களை பயன்படுத்தாமல், ஏன் மனிதர்களை பயன்படுத்தி கழிவுநீரை அகற்றும் பணியை செய்தீர்கள் என்று தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், இரவு நேரத்தில் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டதால் வேறு வழியின்றி, மனிதர்களை வைத்து கழிவுநீரை அகற்றியதாகவும், இனி இயந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவதாகவும் உறுதியளித்தனர். பின்னர் தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உள்ளாட்சி நிர்வாகங்கள், உரிய தொகையை பெற்றுக்கொண்டு கழிவுநீர் அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும், அதை மீறி மனிதர்களை குழிக்குள் இறக்கி கழிவுகளை அகற்றுவது சட்டப்படி குற்றம்.
இதுகுறித்த விழிப்புணர்வு பதாகைகளை அந்தந்த குடியிருப்புகளில் முன்பு வைக்க வேண்டும், இனி தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் மலக்குழிகளில் மனிதர்களை இறக்கி சுத்தப்படுத்தும் நிலை ஒழிக்கப்பட வேண்டும், தமிழக முதல்வர் தலைமையில் இதற்கான ஆய்வுக்கூட்டம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாகவே கழிவுகளை அகற்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது,’’ என்றார். ஆய்வின்போது செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், போலீஸ் எஸ்பி சாய்பிரணீத், மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம்ஜேம்ஸ், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post மனிதர்கள் மூலம் கழிவுநீர் அகற்றுவதாக புகார் தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.
