×

மதுரை திருப்பரங்குன்றத்தில் ரயில் தண்டவாளம் அருகே 2 வாலிபர்கள் கொலை?: உடல்களை மீட்டு போலீசார் விசாரணை

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் முகம் சிதைந்த நிலையில், இரண்டு வாலிபர்களின் உடல்களை மீட்ட ரயில்வே போலீசார், அவர்கள் விபத்தில் இறந்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என விசாரித்து வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றத்தில், ரயில்வே சுரங்கப்பாதையின் மேல் பகுதியில் தண்டவாளம் அருகே, முகம் சிதைந்த நிலையில் இரண்டு பேர் இறந்து கிடந்தனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரண்டு உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர்கள் 30 வயது மதிக்கத்தவர்களாக இருந்தனர். இருவரின் முகங்களும் இடது பக்கம் மட்டும் சிதைந்த நிலையில் இருந்தது. உடலில் வேறு காயங்கள் இல்லை. உடல்கள் கிடந்த இடத்தின் அருகே இருந்த சிமெண்ட் தூணில் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. இருவரில் ஒருவரது மார்பில் நாகேஸ்வரி என்றும், வலது கையில் அபிராமி எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. மேலும், மற்றொருவரின் பாக்கெட்டில் திருநெல்வேலி அரசு பஸ் டிக்கெட் இருந்தது.

ரயில்வே டிஎஸ்பி பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் விசாரணையில், ‘இறந்தவர்களில் ஒருவர் மதுரை பொன்மேனியைச் சேர்ந்த முனியாண்டி மகன் சுரேஷ் (31) என்பதும், அவர் மீது ஏற்கனவே மதுரை எஸ்.எஸ்.காலணி காவல்நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. உடலில் பச்சை குத்தியவரின் விவரம் குறித்து விசாரிக்கின்றனர். சென்னை அல்லது கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்களா? அல்லது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கீழே விழுந்து விபத்தில் சிக்கி பலியானரா அல்லது தண்டவாளத்தின் அருகே அமர்ந்து மது அருந்தியபோது விபத்தில் சிக்கினார்களா என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மதுரை திருப்பரங்குன்றத்தில் ரயில் தண்டவாளம் அருகே 2 வாலிபர்கள் கொலை?: உடல்களை மீட்டு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiruparangundram, Madurai ,Tiruparangunram ,Tiruparangunram, Madurai ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் தண்டபாணி...