மரக்காணம், ஜூலை 14: மரக்காணம் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 3,500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. உப்பு உற்பத்தியில் தமிழகத்தில் மரக்காணம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் துவங்கும் உப்பு உற்பத்தி தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வரை நடைபெறும். இப்பகுதியில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இத்தொழிலை நம்பி இங்கு சுமார் 2 ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம்போல் உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது. வழக்கத்திற்கு மாறாக கோடை வெயிலும் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தியும் அமோகமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மீண்டும் உப்பு உற்பத்தி துவங்க குறைந்தது 10 நாட்களுக்கு மேலாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
The post மரக்காணம் பகுதியில் உப்பளங்களில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு appeared first on Dinakaran.
