×

நலங்கள் அருளும் நவகோடி நாராயணப் பெருமாள்; செண்பகம் மலர்களை சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும்..!!

தமிழ்நாட்டிலே, வேறு எங்கும் இல்லாத வகையில், பெருமாள், ‘நவகோடி நாராயணர்’ என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பினும் சிறப்பு என மெய் சிலிர்க்கின்றனர் பக்தர்கள். கோவையிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊர் அமைந்துள்ளது. ‘கோயில்களின் கிராமம்’ என்றழைக்கப்படும் பகுதி இது. திரும்பிய திசையெங்கும் ஆன்மிக மணம் வீசும் வகையில் அற்புதத் தலங்கள் பல உள்ளன.

இப்பகுதியில் பெருமாள் ‘நவகோடி நாராயணன்’ என்ற திருநாமத்தில் எழுந்தருளியுள்ளார். வைணவப் பெரியவரான ராமாநுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து, துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாதமுனிகள் தொடங்கி குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் ஸ்ரீராமாநுஜர். இவர் காலத்தில் வைணவத்தின் மறுமலர்ச்சி தொடங்கியது என்றே வரலாறு குறிப்பிடுகிறது.

இத்தலப்பெருமாள், நவகிரக தோஷங்களை நிவர்த்தி செய்வதால், ‘ நவகோடி நாராயணன்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ராமாநுஜர் பெருமாளை இத்திருநாமத்தில் முதன்முதலில் அழைத்ததால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். நவகோடி ரிஷிகளும் வழிபட்ட நாராயணர் இவர் என்ற கூற்றும் இங்கு உண்டு. தமிழ்நாட்டிலே, வேறு எங்கும் இல்லாத வகையில், பெருமாள் நவகோடி நாராயணர் என்ற திருநாமத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பினும் சிறப்பு என மெய் சிலிர்க்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். இதன் காரணமாக 108 திவ்ய தேசங்களுக்கு இணையாக இத்தலமும் திகழ்வதாகக் கூறுகின்றனர்.

இக்கோயிலில் கல்வெட்டு ஒன்று உள்ளது. ஆனால் இக்கல்வெட்டுச் சிதலமடைந்த நிலையில் இருப்பதால் கோயில் வரலாறு பற்றி சரியாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை என்கின்றனர். இருப்பினும், இத்தலம் சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழைமை வாய்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர் அனுமானிக்கின்றனர்.

கோவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலையும், புற நகர்ப் பகுதியில் உள்ள இக்கோயிலையும் அரசர்களும் வீரர்களும் போர்ப் பாசறையாகப் பயன்படுத்தியுள்ளனர். திப்புசுல்தானின் படைவீரர்கள் ஸ்ரீரங்கப் பட்டிணத்திலிருந்து திண்டுக்கல் செல்லும்போது, இக்கோயிலில் முகாமிட்டிருந்தனர் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இக்கோயிலைச் சுற்றியும் மிகப் பெரிய கோட்டை இருந்ததாகவும் பிற்காலத்தில் சிதைந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் அமைப்பானது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பில் உள்ளது. இத்திருத்தலத்தின் உள்ளே நுழையும்போது, மகாமண்டபத்தில் கருடாழ்வார் பெருமாளைத் தரிசனம் செய்த நிலையில் இருக்கிறார். கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கும் பெருமாளின் தோற்றம் கண்களைக் கொள்ளைக் கொள்ளச் செய்கிறது. மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறையிலேயே ராமாநுஜரும் எழுந்தருளி இருப்பது அபூர்வக் காட்சி என்று வியக்கின்றனர் பக்தர்கள்.

திருச்சுற்றுப் பிராகாரத்தில் ஆஞ்சநேயர் அருள் வழங்குகிறார். பெருமாளிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகள், உடனே நிறைவேறுவதாகக் கூறுகின்றனர் பக்தர்கள். மேலும், இங்கு வந்து வழிபட்டு ஜாதக தோஷங்கள், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை உள்ளிட்ட குறைகள் நிவர்த்திப் பெற்று பலன் அடைந்தவர்கள் ஏராளம்.

செண்பகம், மல்லிகை போன்ற மலர்களை பெருமாளுக்குச் சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாத சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி போன்ற விசேஷ நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இத்தனை அருமை பெருமைகளைக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனை தரிசிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் இங்குள்ள பெரியோர்கள். இறைவனின் அன்பையும் அருளையும் வேண்டும் பக்தர்கள் ராமாநுஜர் வழிபட்ட இத்திருத்தலத்துக்கு வந்து நலமும் வளமும் பெற, இவ்வூர் பெருமக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

The post நலங்கள் அருளும் நவகோடி நாராயணப் பெருமாள்; செண்பகம் மலர்களை சூட்டி வழிபட்டால் நினைத்தது நடக்கும்..!! appeared first on Dinakaran.

Tags : Nawakodi Narayana Perumal ,Chrébhagam ,Tamil Nadu ,Trinam of Perumal ,Navakodi Narayanar ,Suti ,Chenbakam ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...