×

குழந்தைக்கு தொட்டில் இடுதல்

குழந்தைக்கு எப்படிப் பெயர் சூட்ட வேண்டும் என்பதை சென்ற இதழில் பார்த்தோம். அடுத்து, குழந்தையை தொட்டிலிட வேண்டும். பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் மூன்றாம் திருமொழி. ‘மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனை யசோதை தொட்டில் கட்டி, தாலாட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

கட்டில் மெத்தையில் படுக்க வைத்தால் குழந்தை உருண்டு விழ வாய்ப்புண்டு. இரவில் பெரியவர்களுடன் மெத்தையில் உறங்கினால் அவர்கள் தூக்கத்தில் புரண்டு தவறுதலாகக் குழந்தையின் மீது அழுத்திவிட நேரலாம். இந்தச் சிக்கல்களைத் தவிர்க்கவும் குழந்தைகளின் சிறப்புத் தேவைகளுக்காகவும் அவர்களைத் தொட்டிலில் இடுகிறார்கள். தொட்டிலிடும் பழக்கம் துவங்கியது பற்றிய ஒரு கட்டுரை படித்தேன். இயற்கையியலாளர் அழகேஸ்வரி ஒரு காரணத்தைச் சொன்னார்.

நம் ஆதிப் பெண்கள் விவசாய நிலத்தில் உழைத்தபோது, பிரசவித்த பெண்கள் ஓரிரு நாட்களில் வீட்டு வேலைகளை செய்யத் தொடங்கி விடுவார்கள். வீடும், விவசாய நிலமும் சேர்ந்தே இருக்கும். வரப்பில் இருக்கும் மரத்தில் தன் புடவையைத் தொட்டிலாகக் கட்டி குழந்தையை தூங்க வைத்துவிட்டு, வயல் வேலைகளை கவனிப்பது வழக்கம். இடையில் குழந்தை பசியில் சிணுங்கினால் அங்கேயே பால் கொடுத்து விட்டு வேலையைத் தொடர்வார்கள். இப்படித்தான் இந்த தொட்டில் பழக்கம் துவங்கியது.

குழந்தையைத் தொட்டிலில் போடுவது அற்புதமான விஷயம். பொதுவாக குறிப்பிட்ட காலம் வரை, தாயின் அரவணைப்பு குழந்தைக்குத் தேவைப்படும். அதனால், அவள் எப்பொழுதும் தன்னுடைய மார்பில் அணைத்து கொண்டுதான் குழந்தையைத் தூங்க வைப்பாள். ஆனால், அவளுக்கும் ஒரு இடைவெளி வேண்டும் அல்லவா? அப்பொழுது மிகப் பாதுகாப்பாக குழந்தையை, மூச்சுத் திணறலின்றி, சிறிய அசைவுகளுடன் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக ஒரு பாதுகாப்பான தூங்கும் இடம் வேண்டும்.

குழந்தை நலுங்கக் கூடாது என்பதற்காக, வீட்டில் மான் கொம்பில் பாரம்பர்ய தொட்டிலைக் கட்டுவதும் வழக்கம். இதற்காகவே ஒவ்வொரு வீட்டிலும் அந்தக் காலத்தில் மான் கொம்பு வைத்திருந்தார்கள். தூங்கும் குழந்தையை காத்து, கருப்பு அண்டக் கூடாது என்பதற்காக தொட்டிலின் கீழே இரும்பு மற்றும் சீமாறு ஆகியவற்றை போட்டு வைப்பதும் வழக்கமாக இருந்தது. பெரும்பாலும் இப்பொழுது பெயர் சூட்டு விழாவையும், தொட்டில் இடும் விழாவையும் ஒரே நாளில் வைத்துக் கொள்ளுகின்றார்கள். இது தவறில்லை. அவரவர்கள் வசதிப்படி வைத்துக் கொள்ளலாம்.

இதில் கவனிக்க வேண்டியது, எந்தெந்தச் சடங்குகளுக்கு எந்தெந்த நாளில் செய்ய வேண்டும்? எந்தெந்த நட்சத்திரங்களில் செய்ய வேண்டும் என்பதைமிக முக்கியமாகப் பார்க்க வேண்டும். இயன்ற அளவு அதை அனுசரிப்பது நல்லது. நாம் நம்முடைய ஜாதகத்துக்கு பலன் பார்ப்பதை விட, நல்ல நேரங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது, அதுவே நமக்கு நல்ல பலன்களைத் தரும் என்பதை மறந்து விடக்கூடாது. காரணம் ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள்.

ஒரு சுபமான நேரத்தை கணித்து, அவசரமில்லாமல் ஒரு காரியத்தை, பெரியவர்களுடைய ஆசிர்வாதத்தோடு அனுமதியையும் பெற்றுச் செய்யும் பொழுது, அந்தக் காரியம் வெற்றியடையும். நல்லபடியாக நடக்கும். அதனால்தான் மந்திரத்தின் ஆரம்பத்திலேயே அனுமதி கேட்பது என்ற ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். பெரியோர்களிடமும், வேதம் சொல்லும் வல்லவர்களிடமும் நாம் அனுமதி கேட்பது சிறந்தது.

அதைப்போலவே எந்த ஒரு சடங்காக இருந்தாலும் அதை விநாயகர் பூஜையோடு தொடங்குவதும் வைணவர்களாக இருந்தால் விக்வக்சேனர் ஆராதனத்தைச் செய்வதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தச் சடங்காக இருந்தாலும், அந்தச் சடங்கு விக்னம் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டை நடத்தி விட்டு, அதற்குப் பிறகுதான் மேலே செல்வார்கள். பஞ்சாங்கம் என்பது இன்னென்ன காரியத்திற்கான விசேஷமான நாளை தேர்ந் தெடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதைவிட மிக முக்கியமானது ஒன்றுண்டு.

ஒருநாள் சுப நாளாக இருந்தாலும் அது எல்லாருக்கும் சுப நாளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளிலே பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு நட்சத்திரத்திலே பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு லக்னத்தில் பிறந்திருக்கிறோம். நாம் வைக்கக்கூடிய நேரம் நமக்கு எதிரான நேரமாக தோஷமான நேரமாக இருந்தால் கஷ்டம்தான் வரும். அதைப்போல நாம் வைக்கக்கூடிய நட்சத்திரம், நம்முடைய நட்சத்திரத்திற்கு பொருத்தம் இல்லாத நட்சத்திரமாக இருந்தால் காரியங்களில் தடைகள் ஏற்படும்.

எனவே, குழந்தைக்கு தொட்டிலிடுதல், பெயர் சூட்டுதல், அன்னம் ஊட்டுதல் முதலிய சடங்குகளை முறையாகச் செய்யும் பொழுது நல்ல நாள், நேரமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். ஏதோ ஒரு காரண காரியத்திற்காக அந்த நாள் நன்றாக இல்லாமல், அதே நேரம் செய்து தீர வேண்டிய நாளாக இருந்தால், அது தோஷமான நாளாக இருந்தாலும், அதிலேயே சுப ஹோரை இருக்கக்கூடிய ஒரு காலமாக தேர்ந்தெடுத்து, நாளின் தோஷத்திற்கான பரிகாரங்களையும் தக்கவர்களிடம் கேட்டு செய்துவிட்டு, அந்த செயலைத் தொடங்குவது நல்லது.

குழந்தை பிறந்து 10, 12 மற்றும் 16வது நாளில் பெயர் சூட்டுவதற்கான சடங்கை மேற்கொள்வது நல்லது. திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ஜாதகக் கட்டத்தில் எட்டாமிடம் சுத்தமாக இருக்கும் சுபமான லக்னங்களில், துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி மற்றம் திரயோதசி ஆகிய திதிகளில், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று வருமாறு பார்த்து குழந்தைக்கு நாமகரணம் சூட்டுவது நல்லது.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ஸ்திர ராசிகள் சிறந்தவை. குழந்தை பிறந்த 10, 12, 16, மற்றும் 22ம் நாளில் தொட்டிலில் இடுவது வழக்கம். இதற்கு ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, நட்சத்திரங்களும் துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் ஏதேனும் ஒன்றும் வருமாறு நாளைத் தேர்வு செய்யவேண்டும். அந்த நாளுக்கு சுபகோள்கள் பார்வையுள்ள லக்னமும் எட்டாமிட சுத்தமும் முக்கியம்.

வெள்ளி அல்லது பொன் அரை ஞாண் கயிற்றை புண்ணியாஹவசனம் செய்யும் நாளன்று அல்லது ஐந்தாவது மாதத்தில் கட்டலாம். அவ்வரை ஞாணுடன் கருகமணி, செப்புக்காசு கட்டினால், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுப திதிகள், சுப லக்னத்தில் அரைஞாண் கயிறு அணிவித்தால், குழந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கும். எருக்கஞ் செடியின் நாரினால், அரைஞாண் கயிறு கட்டினால், குழந்தை அடிக்கடிப் பாலைக் கக்குவது நிற்கும்.

இதற்கடுத்து குழந்தைக்குச் செய்ய வேண்டிய மிக முக்கியமான சடங்குகள் முடி இறக்குதல், காது குத்துதல். இது ஆன்மிகத்தோடு இணைக்கப்பட்ட விஷயமாக இருந்தாலும், இதிலும் அறிவியல் ரீதியான மற்றும் ஆரோக்கிய ரீதியான பல அம்சங்களும் உண்டு. முன்னோர்கள் கடைபிடித்த இத்தகைய சடங்குகளின் முக்கியத்துவத்தை நாம் அறியாமல் இருக்கிறோம். இந்தச் சடங்குகளின் நன்மைகளைத் தெரிந்து கொண்டால் எல்லாச் சடங்குகளையும் ஆர்வத்தோடு நடத்துவோம்.

(தெரிந்து கொள்வோம்)

தொகுப்பு: தேஜஸ்வி

The post குழந்தைக்கு தொட்டில் இடுதல் appeared first on Dinakaran.

Tags : Periyazwar ,Thirumozhi ,
× RELATED மெய்யத்து அனந்தசாயி