×

ஏன் பார்க்க வேண்டும் திருமணப் பொருத்தம்?

குருவருளால் குருவின் பார்வை பெறும்போது திருமண பாக்கியம் கிட்டுகிறது. செவ்வாய் தோஷ ஜாதகத்திற்கும், காள சர்ப்ப தோஷ ஜாதகத்திற்கும் அதே அமைப்புள்ள ஜாதகத்தைப் பார்த்து சேர்க்கும்போது, தோஷம் நீங்குகிறது. இதற்குப் பிறகுதான் பொருத்தம் பார்க்கிற கட்டத்திற்கு வரவேண்டும். பொருத்தங்கள் சரியாக அமைந்து விட்ட பிறகு, இனிதே செய்யலாம் திருமணத்தை. ‘‘பொண்ணுக்கு ராட்சச கணம்ங்கறாங்க. என் பையன் மனுஷ கணம். ராட்சசனையும் மனுஷனையும் சேர்க்கலாங்களா. ஒத்துப் போவாங்களா. என் பையனை அவ கைக்குள்ள வச்சுப்பாளே’’ என்று சில பெற்றோர் பதறியபடி வருவார்கள். ‘‘ஆறு பொருத்தம் இருக்கு. பரவாயில்லை, பண்ணிடலாம்னு பெரியவங்க சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க’’ என்று பொருத்தங்களை தாங்களே பார்த்துவிட்டு ஒரு ஆலோசனைக்காக என்னிடம் வருவதுண்டு. ‘‘ரொம்ப பார்க்காம, முக்கியமான பொருத்தம் மட்டும் இருக்கான்னு சொல்லுங்க. குழந்தை பிறக்கணும். சண்டை போடாம ஒத்துமையா இருக்கணும். அதுக்கான பொருத்தம் மட்டும் இருக்கான்னு பார்த்தா போதும். இந்த இடத்தை முடிச்சிடலாம்னு இருக்கோம்’’ என்று முடிவெடுத்த பிறகு தர்மசங்கடமான நிலையில் என்னை நிற்க வைப்பார்கள்.

‘‘என் பையன் லவ் பண்ணிட்டான். இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. கடைசியாக அவங்களுக்குள்ள பொருத்தம் இருக்கான்னு பார்த்து சொல்லிடுங்களேன். நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம்’’ என இக்கட்டான நேரத்திலும் வருவார்கள். ஒரு விஷயம் மட்டும் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அடிப்படையாக, பொருத்தம் என்பது மிக முக்கியம் என்பதை அறிந்திருக்கிறார்கள். ஓரளவுக்காவது பொருந்திவந்தால்தான் திருமண வாழ்க்கை இனிக்கும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதற்குள் சொல்லப்படும் விஷயங்கள் மட்டும் அவர்கள் அறிந்திராதவையாக இருக்கிறது. அதையும் தெரிந்து கொண்டால் பொருத்தம் பார்ப்பதில் பொதிந்திருக்கும் விஷயங்கள் எத்தனை முக்கியம் என்பது புரியும். பொருத்தம் என்பது என்ன? ஏன் அதைப் பார்க்க வேண்டும்? பொருத்தம் பார்க்கும் விஷயத்திலும் பெண்ணுக்குத்தான் ஜோதிடத்தில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய நட்சத்திரத்தைக் கொண்டுதான், ஆணுடைய நட்சத்திரத்தோடு அது பொருந்தி வருகிறதா என்று பார்ப்பர். சிலருக்கு உப்புமாவும், பூரியும் பிடிக்கும். ஆனால் அவர்கள் குடல் அதை ஏற்றுக் கொள்ளாது. மீறி சாப்பிட்டால் உபத்திரவங்கள்தான் அதிகரிக்கும். அதுபோலவே எல்லா நட்சத்திரங்களும் எல்லோருக்கும் பொருந்தாது. அவற்றுள்ளும் வெவ்வேறு குண வேறுபாடுகள் உண்டு. ‘அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்குமா’ என்று எளிமையாகக் கேள்வி கேட்கிறார்கள் அல்லவா!

அதுபோலத்தான் நட்சத்திரங்களும் விதம்விதமான முறையில் இயங்குகின்றன. தங்களுக்குள் பிடித்த, பிடிக்காத விஷயங்களைக் கொண்டிருக்கின்றன. ‘ஒரே வயித்துல பொறந்தவங்கதான்… ஆனா ஒரு விஷயத்துலயாவது ஒத்துப் போறாங்களா’ என்று கேட்பதில்லையா. ஒரு தாய் வயிற்றில் ஒன்றாகக் கருவாகிப் பிறந்த இரு உயிர்களான இரட்டையர்கள்கூட வெவ்வேறு விதமாகத்தானே இருக்கிறார்கள். இயற்கையின் நியதியே இப்படித்தான். ‘தன்னுடன் சேரத் தகுதியை உடையது. தகுதி பெறாதது’ என்று நட்சத்திர பரியந்தம் முரண்பாடுகள் ஏராளம் உள்ளன. இந்த முரண்பாடுகள் இல்லையெனில் காலதேவனின் லீலைகள் நடைபெறாது.

என் பாட்டனார் காலத்தில் இருபத்தோரு பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. என் தந்தையார் கனகசபை பரமசிவம் அவர்கள் பத்து பொருத்தங்கள் போதும் என்றார். ஆனால் இப்போது, ‘ஆறு பொருத்தங்கள் சிக்கல் இல்லாமல் இருந்தால் திருமணத்தை முடியுங்கள்’ என்கிறேன். காரணம், காலத்தின் மாற்றம். இன்னொன்று… காலம் தவறிய, வயது அதிகமான வரன்கள் அதிகமாகி வருவது. விரைந்து திருமணம் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. ‘பையன் செட்டில் ஆகறதுக்கே முப்பத்தஞ்சு வயசாயிடுச்சு’ என்கிறபோது என்ன செய்ய முடியும்.

இருபத்தேழு நட்சத்திரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றின் குணநலன்களை அடிப்படையாக கொண்டு மூன்றாக இப்படி பிரித்துக் கொள்ளலாம். முதலில் ‘டேக் இட் ஈஸி ஸ்டார்ஸ்’ என்று இருக்கும் நட்சத்திரங்களாக பரணி, ரோகிணி, திருவாதிரை, ஆயில்யம், ஹஸ்தம், கேட்டை, மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி போன்றவை விளங்குகின்றன. அடுத்து ‘சீரியஸ் ஸ்டார்’களாக அஸ்வினி, புனர்பூசம், பூரம், மகம், உத்திரம், கன்னிச் சித்திரை, அனுஷம், அவிட்டம், மிதுன மிருகசீரிஷம், கிருத்திகை போன்றவை இருக்கின்றன. டேக் இட் ஈஸியாகவும் இல்லாது, மிகவும் சீரியஸாகவும் இல்லாமல் ‘நியூட்ரல் ஸ்டார்’களாக மிதுன மிருகசீரிஷம், பூரம், துலாச் சித்திரை, விசாகம், பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி என்று தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. இதைத்தான் ராட்சசம், சாத்வீகம், தாமசம் என்று மூன்றாக ஜோதிடம் பிரித்து வைத்துள்ளது. அந்தந்த அலைவரிசை கொண்ட நட்சத்திரத்தோடு அவற்றைச் சேர்க்க வேண்டும் என்பதே பொருத்தம் பார்த்தலின் அடிப்படை.

‘டேக் இட் ஈஸி நட்சத்திரக்காரர் ஜோக் அடித்தால் அதே நட்சத்திரக்காரர் வயிறு வலிக்க கொஞ்சம் கூடுதலாக விழுந்து சிரிப்பதைப் பார்க்கலாம். சீரியஸ் ஸ்டார் உள்ளவர்கள் இப்படி சிரிப்பதில்லை. ‘சார்… அவருக்கு ஆயிரம் வேலை இருக்கும். உங்களை மாதிரி எப்போ பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்க முடியுமா என்ன’ என்று அவர்கள், தங்களைப் போன்றவர்களுக்கு சப்போர்ட் செய்வதைப் பார்க்கலாம். ‘வீட்டுக்குப் போயிட்டேன்னா ஆபீஸ் பத்தி நினைச்சுக்கூட பார்க்க மாட்டேன். எவ்ளோ டென்ஷன் இருந்தாலும் சரிதான்னு எல்லாத்தையும் ஆபீஸ்லயே மூட்டை கட்டி வச்சுடுவேன்’’ என்று நியூட்ரல் ஸ்டார் இருப்போர் தங்களுக்குள் சொல்லி வைத்தாற்போல் பேசுவதைக் கவனித்திருக்கிறீர்களா? நம் முன்னோர்கள் இதுபோல சிறிய விஷயங்கள் முதல் பெரிய காரியங்கள் வரை நட்சத்திரங்களை அலசி ஆராய்ந்து பொருத்தங்களாக வைத்திருக்கின்றனர்.

பள்ளியில் படிக்கும்போது அறுபது நண்பர்கள் புடைசூழ இருப்பீர்கள். கல்லூரி வரும்போது இருபது பேர் இருந்தால் அதிகம். திருமணத்தின்போது அதில் ஐந்து பேர் நட்போடு வந்தால் ஆச்சரியம். நிறைய பேரிடம் எவ்வளவு பேசினாலும், பழகினாலும், கடைசி வரை அந்தரங்கமாகப் பேசுவதும், பழகுவதும், விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதும் ஓரிருவராகத்தான் இருக்க முடியும். அதிலும் இறுதி வரை வருவது வாழ்க்கைத்துணை என்று வரும் ஒருவர் மட்டுமேதான். அப்படிப்பட்ட துணையை எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியுமா என்ன? பழகிப் பார்த்து நண்பர்களைப் புரிந்து கொள்ளலாம்; பிடிக்கவில்லை எனில் விலகிக் கொள்ளலாம். ஆனால், வாழ்க்கைத்துணையாக வரும் ஆணிடமோ, பெண்ணிடமோ ‘பழகிப் பார்க்கிறேன்; பிடித்தால் மணம் செய்து கொள்கிறேன்’ என்று கூறமுடியுமா? அதனால்தான் பொருத்தத்தை நட்சத்திரங்களின் அடிப்படையில் வைத்தார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல வேலையில் சேர்ந்து, கை நிறைய சம்பளத்தோடு வாழ வேண்டுமென்றுதான் ஆரம்பப் பள்ளியிலேயே ஜாக்கிரதையாக சேர்க்கிறோம். அதுபோலத்தான் இணக்கமான தோழமையோடு பழகி, நல்லது கெட்டதுகளில் பரஸ்பரம் பங்கெடுக்கும் நல்ல வாழ்க்கைத்துணையைத் தேடுகிறோம். உயிர் உன்னதமானது. போனால் திரும்பி வராதது. அந்த உன்னதமான உயிர் நிலைபெற்றிருக்கும் உடலும் உயர்வானது. ஈருயிர் சேர்ந்து ஓருடலாக இறுதி வரை இணக்கமாக வாழ்வதற்குத்தான் பிள்ளைக்கும், பெண்ணுக்கும் பொருத்தம் பார்க்கிறார்கள். ஏன் இவ்வளவு சொல்கிறேன் என்றால், பாதியோடு மண வாழ்க்கை முடித்துக் கொள்ளும் தம்பதியர் இப்போது அதிகமாகி வருகிறார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதுபோல மணவாழ்க்கை மாறிவிட்டிருக்கிறது. அதை முன்னரே தடுப்பதற்கு இது உதவும்.

இன்னொரு விதமாகவும் என்னிடம் வருவார்கள்… ‘‘பொண்ணு பார்க்க லட்சணமா இருக்கு. பயோடேட்டாவ பார்த்தா ஆச்சரியமா இருக்கு. எல்லாத்துலயும் நம்பர் ஒன் ரேங்க். கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகி கைநிறைய சம்பாதிக்கறா. பையனுக்கும் பிடிச்சுருக்கு. நாங்களும் உட்கார்ந்து பேசினோம். ஆனா, நீங்க பொருத்தம் இல்லைன்னு சொல்றீங்க. எங்களுக்கு என்ன பண்ற துன்னு தெரியலை. ரெண்டுங்கெட்டானா இருக்கோம்’’ என்று ஆவலோடும், தவிப்போடும் பேசுவார்கள். பயோடேட்டாவையும் ஸ்டேட்டஸையும் பார்த்து பிரமிக்காதீர்கள். ஊரே வியக்க திருமணம் செய்தவர்கள் அதிவேகமாகப் பிரிந்து சென்றதையும் பார்த்திருக்கிறேன். காலணா காசு இல்லாமல் வெறும் பொருத்தங்களை நம்பி ஜெயித்துக் காட்டிய தம்பதியரையும் அறிவேன். காசும், பணமும் இப்போது பெரிதாகத் தெரியலாம். அதெல்லாம் கடந்து செல்லும் மேகம் போல நிலையற்றது. ஆனால், நட்சத்திரப் பொருத்தங்கள் உடும்புப்பிடி போன்றவை. எத்தனை வளைத்தாலும் உடையாதது. நீங்கள் பார்ப்பது பயோடேட்டாவை. ஆனால் நட்சத்திரங்கள் பார்ப்பது, இறுதி வரை வரும் வாழ்க்கையை. ‘‘சொந்த வீடு கொடுக்கறாங்க. வசதியான சம்பந்தம். எப்பவும் கஷ்டம் வராது’’ என்று முடிவெடுக்கிறார்கள். ‘‘அருமையான ஜோடிப் பொருத்தம். இவங்களும் பணக்காரங்க… அவங்களும் இவங்களுக்கு இணையானவங்க…’’ என்று ஊரார் பெருமை பொங்க பேச வேண்டுமென்று அவசரப்படாதீர்கள். எல்லாம் இருப்பது நல்லதுதான். ஆனால், இயற்கை இந்த சேர்க்கையை அனுமதிக்கிறதா… அதாவது நட்சத்திரங்கள் ஒத்துப் போகிறதா என்று பார்ப்பது முக்கியம்.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, மனைவியும் கணவனும் ஒருவர் மீது இன்னொருவர் அன்பு செலுத்துவது. அப்படி ஆசைப்படும் துணையை அடைவதற்குத்தான் கோயில்கள். மோட்சத்திற்கு மட்டுமல்ல இறைவன். மணமாக வேண்டுமே என்று ஆசைப்படுவோருக்கும் சேர்த்துத்தான் ஆலயங்கள். அப்படி பொருத்தமான ஜாதகங்கள் அமையவும் கோயில்கள் உள்ளன. இறைவனும், இறைவியும் திருமணக் கோலத்தில் அருளும் எல்லா தலங்களுமே நல்ல வரனை அருளும் வல்லமை பெற்றவை. ‘தாயே, உனக்கு அமைந்த கணவரைப் போன்று எனக்கும் அருளுங்கள்’ என்று பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், அகத்தியர் எந்தெந்த ஆலயத்தில் எல்லாம் சிவன் – பார்வதி திருமணக் கோலத்தை தரிசித்தார் என்று பார்த்து தரிசியுங்கள். பொதுவாக எல்லோரும் திருமணஞ்சேரி சென்று வேண்டுவார்கள். அதோடு வேதாரண்யம், கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநல்லூர், மதுரை மீனாட்சியம்மன், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் என்று இதர தலங்களுக்கும் செல்லலாம். ஏனெனில் வேதாரண்யம், திருநல்லூர், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயங்களில் சிவலிங்கத்திற்குப் பின்னால் சிவனும் பார்வதியும் சேர்ந்து அமர்ந்து கல்யாணக் கோலத்தில் காட்சி கொடுப்பார்கள். வேதாரண்யம் அகத்தியருக்கு சிவபார்வதி திருமணக் காட்சி கிடைத்த தலமாகும். மேலே சொன்ன தலங்களில் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். நல்ல வரன் அமைந்து மணவாழ்க்கை சிறப்பதை உணர்வீர்கள்.

மாற்றம் தரும் மந்திரம்
ஆண்கள் திருமணம் ஆவதற்கு
சொல்ல வேண்டிய
மந்திரம்…
கந்தர்வ ராஜோ விஸ்வாவசு
மமாபிலிஷித கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா
பெண்கள் திருமணம் ஆவதற்கு
சொல்ல வேண்டிய
மந்திரம்…
காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்யதீஸ்வரி
நந்தகோபஸுதம் தேவி பதிம் மே குரு தே நமஹ

The post ஏன் பார்க்க வேண்டும் திருமணப் பொருத்தம்? appeared first on Dinakaran.

Tags : Mars ,
× RELATED வெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப்படும்: இஸ்ரோ அறிவிப்பு