×

மெய்யத்து அனந்தசாயி

`திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில்,
உளைந்திட்டெழுந்த மதுகைடவர்கள்
உலப்பில் வலியால் அவர்பால் வயிரம்
விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர்
பரவஅவர் நாளொழிந்த பெருமான்…’

எனப் பாடி மதுகைடவர் எனும் அரக்கர் இருவர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.கல்ப காலத்தின் முடிவில் உலகனைத்தையும் ஒரு கடலாக்கி காத்தல் கடவுளாம் திருமாலை யோக நித்திரையில் ஆழ்த்தினாள் மாயாசக்தி. அச்சமயம் மதுகைடபர் என்ற அரக்கர்கள் கையில் கதை ஏந்தி மாயத்துட்பட்ட மாயனையும், பிரம்மன் முதலாய தேவர்களையும் கொல்லத் துணிந்து அங்கு தோன்றினர். மாலவனின் உந்திக் கமலத்துதித்த பிரம்மதேவன் தேவியை நோக்கி, தேவி உலகைப் படைத்துக் காத்து அழிக்கும் வல்லமை பெற்ற பெருமான் உன் மாயையால் உறங்குகிறார். பெருமானை விட்டு நீ அகன்று செல்வாய். நித்திரை நீங்கி அவர் விழிக்கட்டும். அல்லல் தரும் இவ்வரக்கர்களை அழிக்கட்டும். அருள்பாலிப்பாய் என்று பிரார்த்தித்தார். நான்முகனின் வேண்டுகோளை ஏற்று நித்ராதேவி திருமாலை விட்டு நீங்கினாள்.

பெருமான் விழித்தார். பின்னர் அரக்கரை அழித்தார். அவ்வரலாறு மார்க்கண்டேய புராணத்தில் விவரிக்கப்பெறுகின்றது. திருமாலின் திருவுருவங்களை நின்றான், அமர்ந்தான், கிடந்தான் என மூவகை வடிவங்களில் போற்றுவது வைணவ மரபாகும். திருப்பாற்கடலில் அரவணைமேல் பள்ளி கொள்பவனாக அவனைப் போற்றும் வைணவர்கள் பல திருக்கோயில்களில் கிடந்த கோலப் பெருமானாகப் போற்றுவதையே சிறப்பாகக் கொண்டனர். திருமழிசை ஆழ்வார்,

“நாகத்து அணைக் குடந்தை வெஃகா திருஎவ்வுள்
நாகத்துஅணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து
அணைப்பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தனாவான்’’
– என்று பரவிப் போற்றுவார்.

எனவேதான், திருவரங்கத்தில் தொடங்கி, கரம்பனூர், அன்பில், புள்ளப்பூதங்குடி, திருப்பேர்நகர், ஆதனூர், சிறுபுலியூர், குடந்தை இந்தளூர், தில்லை, கவித்தலம், வெள்ளியங்குடி என்ற சோழநாட்டுத் தலங்களிலும், திருமெய்யம், திருப்புல்லாணி, திருப்புளிங்குடி, திருக்கோளூர் என்னும் பாண்டி நாட்டுத் தலங்களிலும், திருவனந்தபுரம், திருவட்டாறு, வித்துவக்கோடு என்னும் மலை நாட்டுத் தலங்களிலும், திருவெஃகா, திருஎவ்வுள், கடல்மல்லை என்னும் தொண்டை நாட்டுத் தலங்களிலும், திருப்பிரிதி என்னும் வடநாட்டுத் தலத்திலும் திருமால் அனந்தன் என்னும் பாம்பின்மேல் கிடந்தவனாகத் திகழும் திருவடிவங்களையே நாம் காண்கின்றோம். எனவேதான், அக்கோல வடிவுடைய பெருமானை அனந்தசயனன் என்றும் அனந்தசாயி என்றும் அழைத்துப் போற்றுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் (திருமயம்) மலையில் உள்ள பாண்டியர் படைப்பான குடைவரை கி.பி.8-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப் பெற்றதாகும். கருவறையின் பின்புறச் சுவர் வானமண்டலமாகக் காட்சியளிக்க, அங்கு தேவர்களும், முனிபுங்கவர்களும், சூரிய சந்திரர்களும், பஞ்சாயுதப் புருடர்களும் கதிகலங்கி கீழே துயிலும் பெருமானை நோக்கியவாறு உள்ளனர். பெருமானின் உந்திக் கமலத்தில் அமர்ந்திருக்கும் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்க நித்ராதேவி பெருமானைவிட்டுப் பிரிந்து வானில் பறந்து செல்கிறாள். கீழே நிலமகளும் கருடனும் கைகூப்பியவாறு அமர்ந்து அங்கு நிகழ்வதை உற்று நோக்குகின்றனர்.

நித்ராதேவி அகன்றதால் பெருமான் விழித்த நிலையிலேயே சலனமின்றிப் படுத்துள்ளார். அவரைக் கதையால் தாக்க ஓடிவந்த மதுகைடபர் இருவரையும் கண்ட ஆதிசேடனாம் ஐந்தலை அரவு கடுங்கோபமுற்று நச்சுக்காற்றையும், நெருப்புப் பந்துகளையும் தன் வாய்களிலிருந்து வேகத்தோடு உமிழத் தொடங்கியது. அந்த அரவு உமிழ்ந்த தீப்பந்துகள் அனைத்தும் ஒளிரும் தீ நாக்குகளுடன் வானமண்டலம் முழுதும் பரந்து காணப்பெறுகின்றன. தீச்சுவாலைகள் அனைத்தும் மதுகைடபர்களை நோக்கிச் செல்வதாலும், கீழ்க்கோடியில் வானமண்டலத்திலிருந்து கீழே இறங்கியவாறு சூரியன் அவர்கள்மீது அனலைப் பாய்ச்சுவதாலும் அரக்கர் இருவரும் அலறித் துடித்து ஓடுகின்றனர்.

கைடபன் வந்த வழியே வேகமாக ஓட முயன்றாலும் சூட்டின் தகிப்பால் தலையைத் திருப்பி அலறுவதோடு கைகளை உயர்த்தி நடுக்கத்தை வெளிப்படுத்துகிறான்.
அவனுக்குப் பின்னே வேகமாக ஓட முனையும் மதுவின் உடல் வெப்பம் தாளாமல் வில்போல் வளைகின்றது. அவன் இடக்கரமோ முதுகுச்சூட்டைத் தடுக்க முனைகிறது. வலக்கரமோ தாங்கிய கதையைக் கீழே நழுவவிடுகிறது. அவர்கள் அலறி ஓடும் வேகத்தைப் பறக்கும் சடை முடிகளும், பாயும் கால்களும் தெற்றெனக் காட்டி நிற்கின்றன.

பொதுவாக நெருப்புக்கோளங்களை வானில் தூக்கி எறிந்தால் கோளங்கள் முன் செல்ல அதிலிருந்து புறப்படும் தீ நாக்குகள் பின்னே வால் போன்று திகழும். ஆனால், இங்கு பாம்பு தன் நீண்ட உடலிலிருந்து அழுத்தமான காற்றோடு உமிழும் தீக்கோளங்களில் இருந்து புறப்படும் தீ நாக்குகள் முன்னோக்கியே (மது கைடபர்களை நோக்கிய நிலையிலேயே) வானில் பறந்து செல்கின்றன.

அதிவேகமான காற்றோடு செலுத்தப்படுகின்ற தீக்கோளங்களில் மட்டுமே முன்னோக்கி தீநாக்குகள் இருக்க முடியும். இந்த அறிவியல் நுட்பம் இக்கலைப்படைப்பில் வெளிப்படுவதைக் காணும்போது மெய்யத்தில் நிற்கும் நாம் மெய்சிலிர்ப்போம் என்பது உண்மையே.உலகக் கலை வரலாற்றில் அனல் தகிப்பால் அலறி நடுங்கி ஓடுதல் என்ற மெய்ப்பாட்டை இத்தனை உயிரோட்டத்தோடு வெளிப்படுத்தக்கூடிய படைப்பு பிறிதொன்றில்லை என்பது உறுதி. கடல் மல்லையில் தல சயனம், ஜல சயனம் ஆகியவற்றைக் கண்டு அங்கு பாட விழைந்த திருமங்கை ஆழ்வார், ‘‘தண்ணார்ந்த வார்புனல் மெய்யமென்னும் தடவரை மேல் கிடந்தானை’’ என்று குறிப்பிடுவது, திருமெய்யத்து குடைவரையில் தான் நேரில்கண்ட இக்காட்சியின் வெளிப்பாடு என்பதறியலாம்.

குலசேகர ஆழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில்,

“வாயோர் ஈரைஞ்ஞூறு தூதங்களார்ந்த
வாளையுடம்பினழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிகவோங்கும் பரந்த தன்கீழ்

காயாம்பூ மலர்ப் பிறங்க லன்ன மாலைக்
கடியரங்கத் தரவணையிற் பள்ளிகொள்ளும்
மாயோனை மனத்தூணே பற்றி நின்றென்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே’’

– என்ற பாடல்தான் திருமெய்யத்துச் சிற்பப் படைப்பை உருவாக்கிய சிற்பிக்கு தியான சுலோகமாகத் திகழ்ந்திருக்க வேண்டும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post மெய்யத்து அனந்தசாயி appeared first on Dinakaran.

Tags : Anantasai ,Thirumozhi ,Madhukaidavar ,God ,Meiyattu Anantasai ,
× RELATED குழந்தைக்கு தொட்டில் இடுதல்