×

அரிமேய விண்ணகர குடமாடுங்கூத்தன்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத்
தீவினைகள் போய் அகல, அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழுலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம்
பெரும் புகழ் வேதியர்வாழ் தரும் இடங்கள் மலர்கள் மிக கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அரு இடங்கள் பொழில்தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சமே
– திருமங்கையாழ்வாரின் எழில் மிகு பாசுரம்.

அரிமேய விண்ணகரத்தானைப் போற்றும் ஏற்றமிகு பாடல். இந்தத் தலத்தில் பெருமாள் திருமகளுடனும், நிலமகளுடனும் எழுந்தருளியிருக்கிறார். திருமகள் எப்படிப்பட்டவள்? குற்றத்தையும் குணமாகக் கருதும் பெருந்தன்மை படைத்தவள். நிலமகள்? பக்தனின் எத்தகைய குற்றத்தையும் எம்பெருமான் பொறுத்துக் கொள்ளுமாறு செய்யக்கூடியவள். இப்படி இரு தேவியருடனும் வீற்றிருக்கும் பரந்தாமன், அன்பர்களின் எல்லாவகையான கொடிய பாவங்களையும் போக்கவல்லவர். இவர் கோயில் கொண்டிருக்கும் தலம் எத்தகையது? வேதம் ஓதும் மறையவர்கள் நிறைந்த பகுதி. தாழை, செங்கழுநீர், தாமரை மலர்கள் பூத்துப் பரவி நிற்கும் குளங்களும், இனிய சோலைகளும் கொண்ட செழிப்பான தலம். இத்தகைய அரிமேய விண்ணகரமெனும் திருத்தலத்தில் காலடி எடுத்து வைத்தாலேயே அனைத்துப் பாவங்களும் ஒழிய, நன்மைகள் அணிவகுத்து நிற்கும்.

இந்தக் கோயில் நாயகனின் பெயர் குடமாடு கூத்தர். வித்தியாசமான இந்தப் பெயர் உருவான காரணம் அறிய, மிகப் பெரிய ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும். திருமங்கையாழ்வாரே ‘குன்றதனால் மழை தடுத்துக் குடம் ஆடும் கூத்தன்’ என்று வர்ணித்திருப்பதால், இந்தப் பெருமாள் குன்றைத் தன் சுண்டுவிரலால் தூக்கி நிறுத்தி, பெருமழையிலிருந்து கோகுலத்தையே காத்த கண்ணபிரான்தான் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த கருத்துக்கு ஆண்டாளும், ‘குன்று குடையாய் எடுத்தாய்,’ என்று கிருஷ்ணனை வியந்ததையும் ஆதாரமாகக் கருதலாம். நம்மாழ்வாரும் ‘குன்றம் ஏந்திக் குளிர் மழைகாத்தவன்’ என்று போற்றியிருக்கிறார். ஆண்டாளின் தந்தை, பெரியாழ்வாரோ, ‘குடங்கள் எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்லவன்,’ என்று பாடி, நெகிழ்கிறார். அதாவது குடங்களை வைத்துக் கொண்டு கூத்தாடுபவன் என்கிறார். இவரும் கிருஷ்ணனைத்தான் நினைக்கிறார். சக நண்பர்களையே ஏணியாக அமைத்து, வெண்ணெய்க் குடங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்த உறி மீது ஏறி, பிறகு ஒவ்வொரு குடமாக கீழிறக்கி, அவற்றிலிருந்து வெண்ணெய் எடுத்துண்டு, அந்தக் குடங்களையே சிரமீது வைத்துக் கூத்தாடியவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

குடம் உடைத்த கூத்தனோ என்றும்கூட யோசிக்க வைக்கிறது, இந்தத் தலத்தின் புராணம். அது என்ன? காஸ்யப முனிவருக்கு விநதை, கத்ரு என இரு மனைவியர். விநதைக்கு அருணன், கருடன் என இரு பிள்ளைகள். கத்ருவுக்கோ கார்க்கோடகன் முதலான பல பாம்புப் பிள்ளைகள். சக&களத்தி விரோதம் கத்ருவிடம் அதிகமாகவே இருந்தது. அவள் விநதையை அடிமைப்படுத்த நினைத்து, ஒரு திட்டம் தீட்டினாள். இந்திரனின் குதிரையாகிய உச்சைஸ்ரவஸ், தூய வெண்ணிறம் கொண்டது. அந்தக் குதிரையின் வால் பகுதி மட்டும் கறுப்பானது என்றாள் கத்ரு. ஆனால் அந்தக் குதிரையை ஏற்கெனவே பார்த்திருந்த விநதை, அதை மறுத்து, அந்த குதிரை முற்றிலும் வெண்மை நிறம் என்று வாதிட்டாள். மனதுக்குள் கறுவிக்கொண்ட கத்ரு, தன் மகனான கார்க்கோடகன் என்ற கருப்பு நிற பாம்பினை அழைத்து, உச்சைஸ்ரவஸ் வாலை சுற்றிக்கொள்ளச் சொன்னாள். அவனும் அப்படியே செய்ய, வானில் பறந்து சென்ற அந்த குதிரை, கறுப்புநிற வாலைக் கொண்டதாகத் தெரிந்தது. தன் தோல்வியை விநதை ஒப்புக்கொள்ள, கத்ரு அவளை அடிமைப்படுத்தினாள்; அடுத்தடுத்து பெருந்துன்பத்துக்கு ஆளாக்கினாள். அந்தக் கொடுமை பொறுக்கமுடியாமல் விநதை, தன்னை விடுவிக்குமாறு கத்ருவிடம் கேட்டபோது, அவள், தேவருலகத்தில் இருக்கும் அமிர்த குடத்தை எடுத்துவந்து தன்னிடம் கொடுத்தால், தான் அவளை விடுவித்துவிடுவதாகச் சொன்னாள். விநதையின் மகனான கருடன், தான் அந்த சவாலை நிறைவேற்றிவைப்பதாகவும், தாய்க்கு விடுதலை வாங்கித் தருவதாகவும் சொல்லி, தேவருலகம் சென்றான். அங்கே எதிர்ப்பட்ட தாக்குதல்களை சமாளித்து, இந்திரனின் கருணையால் அமிர்த குடத்தைப் பெற்று தன் இருப்பிடம் திரும்பினான்; தாயின் அடிமைத் தளையை உடைத்தெறிந்தான்.

சாகா வரமும், சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் அந்த அமிர்தத்தைப் பருக நினைத்த கத்ரு, அந்தக் குடத்தைத் தர்ப்பைப் புல் இருக்கை மீது வைத்துவிட்டு நீராடச் சென்றாள். அதுவரை அவளை கவனித்துவந்த மாயாவி என்ற அரக்கன், குடத்தில் இருப்பது அமிர்தம் என்பதைப் புரிந்துகொண்டு, அதனை அப்படியே கவர்ந்து சென்றுவிட்டான். அந்த அமிர்தத்தை உண்டால் தான் பராக்கிரமசாலியாகி, ஈரேழு உலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்ற பேராசையில் திளைத்தான். இந்தச் சம்பவங்களைப் பெருமாள் கவனித்து வந்தார். அசுரன் அமிர்த கலசத்தைக் கைப்பற்றிய இந்த கட்டத்தில் தன் தலையீடு மிக முக்கியம் என்பதை உணர்ந்தார். தன் சார்ங்கத்தை (வில்லை) எடுத்தார். அம்பைத் தொடுத்தார். ஏவினார். அது பாய்ந்து சென்று, அமிர்த குடம் பற்றியிருந்த அசுரனின் கரத்தைத் துண்டித்தது. அதனால் குடம் வீசியெறியப்பட்டு, பலாச வனத்தில் அருள் புரியும் அரிமேய விண்ணகரப் பெருமாளின் பாதங்களைச் சரணடைந்தது. உடைந்து அமிர்தம் வெளியே பெருகிப் பரவியது. இவ்வாறு அமிர்த குடத்தை உடைத்த கூத்தனாகத் திருமால் திகழ, அந்தக் குடத்தை எடுத்து ஆனந்தக் கூத்தாடினார் இந்த விண்ணகரப் பெருமாள். இதனாலும் இவர் குடமாடுங் கூத்தர் என்றழைக்கப்பட்டிருக்கலாம். உடைந்த குடம் வெளிப் படுத்திய அமிர்தம் ஒரு குளமாகி தற்போதும் அமிர்த புஷ்கரணியாக விளங்குகிறது. அரிமேய விண்ணகரம் என்று கேட்டால் பெரும்பாலும் அந்த ஊர் மக்கள் குழம்பிவிடுகிறார்கள். குடமாடும் கூத்தன் கோயில் என்று விசாரித்தால் உடனே தம் கரம் நீட்டி வழி காட்டுகிறார்கள்.

ராஜகோபுரத்தைக் கடந்து கோயிலினுள் சென்றால், கருவறை மண்டபத்தின் விதானத்தில் தசாவதாரக் காட்சிகள் ஓவியங்களாகப் பரிணமிக்கின்றன. திருமங்கையாழ்வார் ஓவியமும் அவற்றுடன் இடம் பெற்றிருக்கிறது. பெரிய திருவடி எதிரே வணங்கி நிற்க, குடமாடு கூத்தர் தன் தனிச் சந்நதியில் திருக்கோலம் காட்டுகிறார். அருகே அமிர்த குடவல்லித் தாயார் தனி சந்நதியில் அருள் பொங்கும் விழிகளோடு, தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை அவர்கள் வரும்போதே உணர்ந்துகொண்டது போலவும் அவற்றை அப்போதே களைந்துவிட்டதுபோலவும் புன்முறுவல் பூத்தபடி காத்திருக்கிறாள். அமிர்தத்துக்கு ஒப்பான அந்த அருள் அவளது விழிகளில் பொங்கித் ததும்புகிறது. இந்தக் கோயிலின் ஒரு தனிச் சிறப்பு, ஆண்டாள் சந்நதிதான். திருநாங்கூர் திவ்ய தேசங்களில் வேறெங்கும் ஆண்டாளுக்கு சிலையோ, தனி சந்நதியோ இல்லை என்கிறார்கள். இன்னொரு சிறப்பு, சக்கரவர்த்தித் திருமகனுக்கான சந்நதி. சீதை, லட்சுமணனுடன் எழில் தோற்றம் காட்டுகிறார் இவர். இந்த மூலவருக்கு முன்னால் அதே தோற்றத்தில் பஞ்சலோக உற்சவரும் ஒளி சிந்தி மிளிர்கிறார். இந்த ஆலயத் தலபுராணத்திலும் சரி, கைக்குக் கிடைத்த சில குறிப்புகளிலும் சரி, இந்த ராமரைப் பற்றி எந்த விவரமும் இல்லை. ஊர்ப் பெரியவர்களை விசாரித்தபோது, இப்போது ராமர் சந்நதி இருக்கும் பகுதி பிராகாரமாக இருந்ததாகவும், பொதுவாகவே எந்த ஒரு பெருமாள் தலத்திலும் கருடாழ்வார் இருப்பதுபோல, ஆஞ்சநேயர், ஆண்டாள், ராமர் சந்நதிகளும் இடம்பெறுவது சம்பிரதாயம் என்பதால், அந்த வகையில் இந்த ராமர் சந்நதியும் இடம் பெற்றிருக்கலாம் என்றும் தெரிவித்தார்கள். ஆனால், எனக்கென்னவோ இந்த ஆலய புராணத்தோடு இந்த ராமரும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. மாயாவி என்ற அசுரனை திருமால் வதம் செய்தாரே, அப்போது அவர் பயன்படுத்திய ஆயுதம், சார்ங்கமும், அம்பும். வில், அம்பு என்றாலே ராமாவதாரம்தான் நினைவுக்கு வரும். ஆகவே இந்தப் பகுதியில் அமிர்த கலசத்தை அம்பால் உடைத்து, இங்கே அமிர்தம் பரவிடக் காரணமாக இருந்த அந்த வில்&அம்புக்கும் மரியாதை செய்யும் பொருட்டே இங்கே ராமர் சந்நதி உருவாகியிருக்குமோ என்று தோன்றுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த சந்நதியில் அனுமன் இல்லை! சதுர்புஜ கோபாலன் என்ற திருநாமத்தில் இத்தல உற்சவர் திகழ்கிறார். உதங்க மாமுனிவருக்கு அருள் செய்த பகவான், இந்த கோபாலன். ஒருமுறை உதங்க முனிவரும் அவரது மனைவியார் பிரபையும், கங்கையில் நீராடியபோது, எதிர்பாராத விதமாக மனைவி ஆற்றின் வேகத்தோடு அடித்துச் செல்லப்பட்டுவிட, அந்த துக்கம் தாளாமல் வருத்தம் கொண்டிருந்தார் முனிவர். திருநாங்கூருக்கு அவர் திரும்பியதும், அவருக்கு கோபாலகிருஷ்ணராக தரிசனம் தந்த பெருமாள், அவரைத் தேற்றினார். பிறவி எடுத்தோர் அனைவரும் என்றாவது ஒருநாள் இறப்பையும் சந்திக்க வேண்டியதும் பகவத் கிருபைதான் என்பதையும், அப்படி கங்கை நதியில் மூழ்கிப்போன அவரது மனைவி பிரபை, பெறுதற்கரிய பெரும் பேறான வைகுந்தத்தை அடைந்துவிட்டாள் என்றும் சொல்லி ஆறுதல்படுத்தினார். இந்த கோபால கிருஷ்ணன், எந்த நியாயமான இழப்பையும் கண்டு வருந்தாத தெளிவான மனநிலையை பக்தர்களுக்கு அளிக்கவல்லவர். சிறு பிரச்னைக்காகவும் சிதறி விடும் மென்மனம் கொண்டவர்கள் இந்த கோபாலகிருஷ்ணனை தரிசித்தால் அனைத்துத் துன்பங்களும் சிதறி ஓடிவிடும். குடமாடுங் கூத்தன், தன் பேரன்பால், தன் பக்தர்கள் அனைவரையும் அரவணைத்துக் காக்கும் பெற்றியை அவன் தரிசனம் கண்டு உணர்ந்துதான் புரிந்துகொள்ள வேண்டும்.

எப்படிப் போவது: திருமணிமாடக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ளது, அரிமேய விண்ணகரம். முன்கூட்டியே திட்டமிட்டுக் கொண்டு சீர்காழியிலிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ அமர்த்திக் கொண்டு, இக்கோயிலுக்கு வரலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9 முதல் 11 மணிவரையிலும், மாலை 3.30 முதல் 5.30 மணிவரையிலும்.

முகவரி: அருள்மிகு குடமாடுங்கூத்தப் பெருமாள் திருக்கோயில், நாங்கூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609106.
தியான ஸ்லோகம்
தேவோமேய வியத்புரே கட நடஸ்தீர்த்தம் தநுஷ் கோடி ஜம்
நாம் நாதஸ்ய வதூ: ஸுதா கடலதா தத் வ்யோமயா நோத்தமம்
உச்சை ச்ருங்க முதங்க தாபஸ பல ப்ரத்யக்ஷ ரூப:புர:
பாராவார முக: பராத்பர ஹரிச் சாஸீநதி வ்யாக்ருதி:

The post அரிமேய விண்ணகர குடமாடுங்கூத்தன் appeared first on Dinakaran.

Tags : Arimeya Vinnakara Kudamadungoothan ,
× RELATED மாணவர்கள் கல்வியில் மேம்பட என்ன செய்யலாம்?