×

மோகத்தைக் கொன்றுவிடு!

பொதுவாக மோகம்

என்பது சுயநல அடிப்படையில் எழுவது தான். தன் பிள்ளையை ஆரோக்கிய மானவனாக, கல்வி அறிவு மிகுந்த வனாக, நற்பண்புகள் நிறைந்தவனாக பெற்றோர் வளர்க்கிறார்கள் என்றால், தாம் வாழும் சமுதாயத்துக்கு ஒரு நல்ல குடிமகனை அவர்கள் வழங்குகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் உள்ளத்தில் ஒரு மூலையில், ‘இவன் பின்னாளில், நம் இயலாமைக் காலத்தில் நம்மைப் பராமரிப்பான்’ என்ற சுயநல எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

அவர்களால் தம் சொந்தப் பிள்ளையிட மிருந்து ஆதரவை, அரவணைப்பை எதிர்பார்க்காமல் இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். இது உறவுகளுக்கிடையேயான பாச மோகம் மட்டுமல்ல, நண்பர்களுக்கிடையேயான நட்பு மோகத்துக்கும் பொருந்தும். வயதான காலத்தில், உடல்நலம் தளர்ந்து, முற்றிலும் பிறர் தயவிலேயே வாழவேண்டிய முதியவர்கள், அந்நிலையில், ‘என்னை ஏன் இன்னும் இந்த உலகத்தில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய், இறைவா! என்னை உடனே அழைத்துச் சென்றுவிடு,’ என்று ஆற்றாமையால் பிதற்றுவார்கள்.

உண்மையிலேயே அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க யமன் அவர் எதிரே வருவானானால், முதியவர் அவனைத் தவிர்க்கவே முனைவார். ‘சரி, இதுவரை மகன் தன்னைக் கவனிக்கவில்லை, இனிமேலாவது கவனிக்காமல் இருப்பானா என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை, மோகம், அவர் மனசுக்குள் மரணிக்காமல் ஜீவித்திருக்கிறது. ஆகவே அப்போதும் அவர் தன் மகனைத்தான் நம்பியிருக்கிறார். அதாவது. இன்னும் வாழ விரும்புகிறார். தன் இயலாமையையும் மீறி வாழ விரும்புகிறார். தொடர்ந்து தன்னைத் தன் மகனோ அல்லது வேறு யாராவதோ காப்பாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்த்தலில் வாழ விரும்புகிறார்.

‘வாழ விரும்பவில்லை, ஆனால் எப்படி இறப்பது?’ என்பது நியாயமான கேள்வி. இறப்பு வரும்போது வரட்டும், அதுவரை யதார்த்தத்தை விட்டு விலக விரும்புவதாகச் சொல்லிக் கொள்வானேன்? இது, நாம் வசதியாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் எதிரொலிதானே?

வீட்டிற்குள்ளேயும் எல்லா சௌகரியங்களுடன் வாழ்கிறோம், நடைபாதையிலும் மக்கள் வாழ்கிறார்கள், மருத்துவமனைகளில் கோமா நிலையிலும் நோயாளிகள் வாழ்கிறார்கள் எல்லோருக்கும் ஒரே குறிக்கோள்: இறக்கும்வரை வாழவேண்டும்! அதுவரையிலான வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்ற எதிர்பார்த்தலில்தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறார்கள். இந்த எதிர்பார்த்தலில்தான் மோகம் ஒளிந்துகொண்டிருக்கிறது.

ஒரு வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்தந்த வயது விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இறைவனிடம் முறையிடுகிறோம். அவரும் நம் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், ஆனாலும் நமக்கு நம்பிக்கை பிறப்பதில்லை. சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமைய நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறது. ஆனாலும் அந்த வீட்டினுள்ளும் பலவகை வசதிகளை அடைய ஆசைப்படுகிறோம், அவையும் நமக்குக் கிடைக்கின்றன. ஆனாலும் மனசு அடங்குவதில்லை. மேலும், மேலும் எதிர்பார்க்கிறது.

காரணம், பிற்காலத்தில், நாம் உடலளவில் வலுவிழந்துவிடுவோம், அப்போதைய சூழலில் நம் விருப்பங்கள் நிறைவேறாமல் போய்விடக்கூடும் என்ற அவநம்பிக்கையும் கூடவே வளர்வதுதான். இவ்வளவு செய்த இறைவன் அந்த காலகட்டத்திலும் நம்மைக் கைவிட்டுவிட்டுவிட மாட்டான் என்ற நம்பிக்கை வளராததுதான் காரணம். இப்போதே சேர்த்து வைத்துக்கொண்டால், கற்பனையால் மட்டுமே கணிக்கக்கூடிய நம் எதிர்காலத்தில் நேரக்கூடியதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அசௌகரியங்களிலிருந்து மீண்டுவிடலாம் என்ற தப்புக் கணக்குதான் காரணம்.

மோகத்தைக் கொன்றுவிடு அல்லா
லென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு அல்லாலென்றன்

ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே!
பந்தத்தை நீக்கிவிடு அல்லாலுயிர்ப்
பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு அல்லாலிதைச்
செத்த வுடலாக்கு
இந்த பதர்களையே நெல்லாமென்

றெண்ணி இருப்பேனோ
எந்த பொருளிலுமே உள்ளே
நின்றியங்கி இருப்பவளே.
உள்ளம் குளிராதோ பொய்யாணவ
ஊன மொழியாதோ?
கள்ள முருகாதோ அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?

வெள்ளக் கருணையிலே இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே அனைத்திலு
மேவி இருப்பவளே!
– என்றார் மகாகவி பாரதியார்.

அனைத்திலும் மேவியிருப்பவளிடம் சரணாகதி அடைந்துவிட்டால், நாம் மோகத்தை வென்று விடலாம் என்பது அவருடைய நம்பிக்கை. கிருஷ்ணனும் இதைத்தான் சொல்கிறார். உன் அறிவின் ஆதாரமான என்னைப் புரிந்துகொள், என்னுள் ஐக்கியமாகிவிடு என்கிறார். ‘பொருட்களை உள்ளபடி காணாதிருப்பது மயக்கம். மெய்ஞ்ஞானம் உதயமாகுமிடத்தில் எல்லாப் பொருட்களும், உயிர்களும் ஒரே பரம்பொருளிடத்தில்தான் ஒன்றியிருக்கிறது என்பது பிரத்தியட்சமாகும்.

ஒன்றென உணர்வது ஞானம், பலவாகக் காண்பது அஞ்ஞானம்,’ என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.‘ஒரு இளைஞன் ஒரு பெண்ணைக்காதலிக்கிறான். அவளைத்தான் மணமுடிக்காவிட்டால், தான் இவ்வுலகில் வாழ்வதில் அர்த்தமேயில்லை, முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்,’ என்று சூளுரைக்கிறான். இப்படிச் சொன்ன பலர் அவ்வாறு தற்கொலை செய்துகொள்ளாமல், இன்னொரு பெண்ணை மணந்து கொண்டுவிடுகிறார்கள் என்பது ஒரு பக்கம்! ஆனால் தற்கொலை செய்து கொள்பவன், அவள் தனக்குக் கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற அவநம்பிக்கையில்தான் அவ்வாறு செய்கிறான். அதாவது, அவன் தன் காதலில் உறுதியில்லாதவனாக இருக்கிறான். அல்லது புறத்தோற்றக் கவர்ச்சியாக மட்டுமே அந்தக் காதல் இருந்திருக்கிறது.

அதேபோல தான் காதலிக்கும் பெண் இறந்து விடுகிறாள் என்றால், சிறிது காலத்துக்குப் பிறகு இவன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான், குடும்பம் நடத்துகிறான். இவனுடைய வாழ்க்கையில் எந்த ஆழ்ந்த நிபந்தனையும் இல்லை, தற்கொலை செய்துகொள்பவன் போல! ஒரு பெண் தனக்கு மனைவியாக வேண்டும் என ஒருவன் தீர்மானிப்பானானால், அவன் இந்தத் தோற்றக் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

தன் குடும்பம், தன் வாரிசுகள், ஒட்டுமொத்த எதிர்காலம் என்ற சிந்தனைச் சங்கிலி அவனுக்குள் தொடருமானால், அதற்கு அவனிடத்தில் பதில் இருக்குமானால், அது உண்மைக் காதலாக இருக்கமுடியும், இல்லாவிட்டால் அது வெறும் மோகம்தான்! ஆக, காதலிப்பதற்கும் ஞானம் வேண்டியிருக்கிறது! இதேபோலத் தான் சேமிப்பும். ‘பின்னால் என்னவாகுமோ!’ என்ற சந்தேகப் பயத்தின் ‘புத்திசாலித்தன’மான நடவடிக்கைதான் அது. தன் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான சௌகரியங்களுடன் கூடிய, சுகபோகமான வாழ்க்கைக்கான செலவைவிட அதிகம் சேமிப்பதும் மோகம்தான். வெளியே புழக்கத்துக்கு விடாமல் பூட்டிப் பூட்டி வைத்து, தினமும் அதை அழகு பார்க்கும் ‘கறுப்பு’ மோகம்!

முகமது நபி அவர்கள் இரவில் உறங்கப்போகுமுன் தான் அன்று சம்பாதித்தையெல்லாம் பிறருக்கு தானமாகப் பிரித்துக் கொடுத்துவிடுவார். தனக்கென்றோ, சேமிப்பாகவோ, நாளைய சாப்பாட்டுக்காகவென்றோ ஒரு காசுகூட வைத்துக்கொள்ளமாட்டார். ‘ஏனிப்படி செய்கிறீர்கள்?’ என்று உடன் இருப்பவர்கள் பதறுவார்கள். ‘நாளைக்கு நான் இருக்கவேண்டும் என்பது இறைவனின் விருப்பமானால், நாளைக்கு எனக்குத் தேவையானதை இறைவன் அளிப்பான்’ என்று பதிலளிப்பார் நபிகள்.

அதாவது. தன் அன்றையைத் தேவைகளைப் பூர்த்தி செய்தது போக மிச்சமுள்ள பணத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துவிடுவ தாகிய இவருடைய பரோபகாரத்தில் இறைவன் குடிகொண்டிருக்கிறான், இவர் மூலமாக பிறருக்கும் தன் அருளை வழங்குகிறான் என்றுதானே பொருள்? ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் எல்லாவற்றையும் துறந்துவிட்ட துறவி அல்ல அவர். தினமும் சம்பாதிக்கிறார், தினமும் அதை அப்படியே துறந்துவிடுகிறார். அது அவரால் சாத்தியமாகியிருக்கிறது. இறைவனும் அவர் மூலமாகத் தன் பிற மக்களின் பராமரிப்புப் பணியை விஸ்தரிக்கிறார்!

‘வேண்டும்’ என்ற மோகத்தைவிட, ‘வேண்டாம்’ என்ற துறவு மனோநிலைக்கு ஞானம் வேண்டும். இந்த ஞானத்தின் ஆதாரமே பரந்தாமன்தான் என்பதை உணரும்போது யாருக்குமே மோகத்தை வெல்வது என்பது எளிதாகிவிடும்.

அபி சேதஸி பாபேப்ய ஸர்வேப்ய பாபக்ருத்தம
ஸர்வம் ஞானப்லவேனைவ வ்ருஜினம் ஸந்த்ரிஷ்யஸி (4:36)

‘‘பாபிகளிலேயே நீ மகாபாபியாகவே இருந்தாலும், உன்னால் அந்தப் பாபங்களையெல்லாம் ஞானத்தெப்பம் மூலமாகவே கடந்துவிட முடியும்.’’தெரிந்து செய்தல், தெரியாமல் செய்தல் என்ற வகைகளில் நாம் பாப மூட்டை களின் பாரத்தை ஏற்றிக்கொண்டிருக்கிறோம். தெரிந்து செய்தல் குற்றமாகவும், தெரியாமல் செய்தல் மன்னிப்புக்கும், ஆறுதலுக்குட்பட்டதாகவும் நாமே சட்டம் வகுத்துக்கொள்கிறோம். கல்விச்சாலையில் கிட்டும் பாட அறிவைவிட, வாழ்க்கையில் பட்ட அறிவு அதிகப் படிப் பினையைத் தரும் என்பார்கள். அனுபவத்தால் கிட்டும் அறிவு வலி மிகுந்திருப்பதாலேயே இந்தப் படிப்பினை நம்மை நேராக்கும்.

ஒரு கட்டத்தில் நம் தவறுகளை உணர்ந்து நம்மைத் திருத்திக்கொள்ளும் முயற்சிதான் நமக்கு ஞானத்தை ஊட்டும். ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?’ என்ற சொற்றொடர் தொடர்ந்து மனசாட்சி உறுத்துவதைத்தான் குறிப்பிடுகிறது. இந்த உறுத்தல் ஞானத்துக்கு வழிகாட்டும். சிறைச்சாலையும் அதற்காகத்தான் இருக்கிறது. அங்கே தனிமையில் தான் செய்த பாபங்களை நினைத்து, நினைத்துப் பார்த்து இனி எந்தச் சூழலிலும், எந்த நிர்ப்பந்தத்திலும், எந்தப் பாபத்தையும் செய்யக்கூடாது என்ற மனவுறுதி ஏற்படுகிறது என்றால் அதுவே ஞானம் பெறும் வழி.

‘நடந்ததெல்லாம் நடந்ததாகவே இருக்கட்டும்,’ அதை போஸ்ட்மார்டம் செய்ய வேண்டாம், செய்தாலும் எந்தப் பயனும் இல்லை, செய்யப்பட்ட அந்தச் செயலை இனியும் திருத்த முடியாது, அதனால் பாதிக்கப்பட்டவர்களின் அப்போதைய வலியையும், நஷ்டத்தையும் சரி செய்ய முடியாது, ஈடுகட்ட முடியாதுதான். ஆனால், அதே செயல் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள முடியும். இதுதான் ஞானம்!

அதாவது, தெளிவடைவது. எது சரி, எது தவறு என்ற உண்மை புரிபடுவது. எந்தப் புண்ணியம் செய்தால், பாவம் செய்ததால் உண்டான நஷ்டத்தை சரிசெய்ய முடியும் என்றும் சிந்திக்கத் தொடங்குகிறோம். அதாவது, பிராயசித்தம் தேடுகிறோம். இப்படி சிரமப்படுவதற்கு பதிலாக அந்தப் பாவத்தையே செய்யாதிருந்திருக்கலாம். முடிவதில்லை. உணர்வுபூர்வமாக வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பிறகு பாபங்கள் செய்வதைத் தவிர்க்க முடிவதில்லை. உயிர் வாழ்தலுக்காகவே செய்யவேண்டிய ஒரு செயலாகப் பாபம் அமைந்துவிடுவது, தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனால், ஒரு ஞானியின் செயல், பாப தன்மையிலிருந்து பெரிதும் விலகியிருக்கிறது. அவனுடைய எந்தச் செயலும் யாரையும் பாதிப்பதில்லை.

அது தன்னையே பாதிப்பதானாலும் அவன் அதைப் பொருட்படுத்துவதில்லை. இதனால்தான் உன் பாபங்களிலிருந்து நீ கரையேற உனக்கு ஞானத் தெப்பம் அவசியம் என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன். ஏனென்றால், ஞானமில்லாதவர்கள் தம் கர்மங்களை முறை தவறி செய்துவிட்டு அதை பாபங்களாக்கிக் கொள்கிறார்கள். ஞானியரோ, அதேபோன்ற கர்மத்தை முறையாகச் செய்து அதைப் புண்ணியமாக்கி விடுகிறார்கள். அதுமட்டுமல்ல, அந்த கர்ம பந்தத்திலிருந்தும் அவர்கள் விடுபட்டு நிற்கிறார்கள்.

ஞானம் கிட்டுவதற்காக வயதாகட்டும் என்று பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதும், எந்த வயதிலும் அதை அடையமுடியும். திருஞானசம்பந்தருக்கு மூன்று வயதிலேயே அது கிட்டியது; திருநாவுக்கரசருக்கு சற்று முதிய வயதில்தான் கிட்டியது. அந்த ஞானமே அவ்விருவரையும் இணைத்தது, வயது வித்தியாசம் பாராத நட்பாக்கியது.பாபத்திலேயே புண்ணியமும் அடங்கியிருக்கிறது.

இது என்ன விந்தை? ஆமாம், ஒரு கர்மா செயல்படுத்தப்படும்போது அதன் பக்க விளைவுகள் மற்றும் பின்விளைவுகளைப் பொறுத்தே அது பாப காரியமா அல்லது புண்ணிய காரியமா என்று நோக்கப்படுகிறது. ‘பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ என்று திருக்குறள் சொல்வதுபோல, சில புண்ணிய நோக்கங்களுக்குப் பாப கர்மாக்கள் வழிகோலுவதுமுண்டு. ஆனால், பொதுவாக பாவம் என்பது இருள் போன்றது. அது விலக, இரவு முடிந்து பகல் விடியட்டும் என்று காத்திருத்தல் தேவையில்லாதது. ஒரு சிறு ஒளி அந்த இருட்டை விரட்டிவிடும்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

The post மோகத்தைக் கொன்றுவிடு! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!