×

தரகம்பட்டி அருகே மைலம்பட்டியில் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு: கடைகள் அகற்றம்

தோகைமலை, ஜூலை 9: தரகம்பட்டி அருகே மைலம்பட்டியில் சுமார் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து உள்ள கடைகளை அதிகாரிகள்பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். தரகம்பட்டி அருகே உள்ள மைலம்பட்டி பகுதி முக்கிய மையப்பகுதியாக இருந்து வருகிறது. நெடுஞ்சாலைகள் இணையும் மைலம்பட்டி வழியாக திருச்சி, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்ட பகுதிகளை இணைக்கக்கூடிய பகுதிகளாகவும், கடவூர், கிருஷ்ணராயபுரம், தோகைமலை, குளித்தலை ஆகிய ஒன்றியங்களின் குக்கிராமங்களை இணைக்கக்கூடிய முக்கிய பகுதியாகவும் இருந்து வருகிறது. இதனால் மைலம்பட்டி வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

மேலும் மைலம்பட்டி கடைவீதி அருகே அரசுக்கு சொந்தமான கோமாளிக்குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தில் மழை காலங்களில் வரும் மழைநீர் தேங்கி நிற்பதால் மைலம்பட்டி பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மைலம்பட்டி கடைவீதி அருகே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து குளத்தின் கரை பகுதியில் கடைகள் அமைக்க தொடங்கி உள்ளனர். தற்போது சுமார் 10 கட்டிடங்கள் அமைத்து நிரந்தரமாக கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் பாளையம் திருச்சி, கரூர் மணப்பாறை, குளித்தலை வையம்பட்டி நெடுஞ்சாலை இணையும் மைலம்பட்டி கடைவீதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்து வந்தது.

மைலம்பட்டியில் கோமாளி குளத்தின் கரை பகுதியில் ஆக்கிரமித்து உள்ள கட்டிடங்களை அகற்றி, வாகன விபத்துகளை தடுக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து மைலம்பட்டியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கலெக்டர் கடவூர் தாசில்தார் முனிராஜிற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மைலம்பட்டியில் கோமாளி குளத்தின் கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை தாங்களாகவே அகற்றி கொள்வதற்கு, முறைப்படி வருவாய்துறை மூலம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு காலம் தாழ்த்தியதால் நேற்று கடவூர் தாசில்தார் முனிராஜ் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிரடியாக அகற்றினர். இதில் கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் ஷாஜகான், மைலம்பட்டி ஆர்ஐ நெப்போலியன், விஏஓ முத்துச்சாமி. புழனிச்சாமி, நர்மதா உள்பட வருவாய்த்துறை, ஊராட்சி துறை பணியாளர்கள் உடனிருந்தனர். தரகம்பட்டி அருகே மைலம்பட்டியில் சுமார் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து உள்ள கடைகளை அதிகாரிகள் அகற்றியதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

The post தரகம்பட்டி அருகே மைலம்பட்டியில் 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு: கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Mailambatti ,Dharagambatti ,Thokaimalai ,Mylampatti ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே மின்சாரம் தாக்கி பலியான மயில் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு