×

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: பில்லூர் அணை நீர்மட்டம் 84.50 அடியாக உயர்வு

காரமடை: தொடர் மழையின் காரணமாக கோவை பில்லூர் அணையின் 84.50 அடியாக நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டமும், அதிகரித்து வருகிறது. 100 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று குந்தா பகுதியில் 10 மிமீ, கெத்தை பகுதியில் 4 மிமீ, பரளி பகுதியில் 5 மிமீ, அவலாஞ்சியில் 89 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,751 ஆயிரம் கன அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 84.50 அடியாக உள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அணையில் இருந்து மின் உற்பத்திக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுவதால், பவானி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ததும்பி செல்கிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத நிலை உள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: பில்லூர் அணை நீர்மட்டம் 84.50 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Billur Dam ,Karamadah ,Goa Billur Dam ,
× RELATED கோவை பில்லூர் அணையில் இருந்து 3,000 கன அடி...