விழுப்புரம், ஜூலை 7: விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டுரோடு பகுதியில் விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கடந்த 19ம் தேதி தொழிற்சாலையிலிருந்து பல லட்சம் மதிப்புள்ள வேளாண்மை பொருட்கள் லாரி மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான 50 வகையான இடுபொருட்கள், ரசாயன கலவைகள் திருடு போனது. இது குறித்து தொழிற்சாலையின் பெட்டக பொறுப்பாளர் இந்தாய்செரீன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையோரம் லாரி நின்றிருந்தபோது தார்ப்பாய் பிரிக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து நடத்திய விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன்(49). ரியாஸ்(45). நெய்வேலி டவுன்ஷிப்பைச் சேர்ந்த கோவிந்தராஜ்(24) ஆகியோர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே லாரியில் போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை கிழித்து வேளாண் இடுபொருட்களை திருடி சரக்கு வாகனங்களில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.16 லட்சம் ரொக்கபணம் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்பிலான வேளாண் இடு பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post வேப்பூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியிலிருந்து பல லட்சம் வேளாண் இடுபொருட்கள் திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.
