புதுடெல்லி: கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மணிப்பூர், மும்பை மற்றும் குஜராத் ஆகிய ஏழு மாநில உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை அனுப்பி வைத்துள்ளது. உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்பு கொலிஜியம் ஆகும். இந்த நிலையில் காலியாக உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மணிப்பூர், மும்பை, குஜராத் ஆகிய ஏழு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் பெயர்களை ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து கொலிஜியத்தின் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சுனிதா அகர்வாலை குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருக்கும் ஆஷிஸ்-ஜே-தேசோயை கேரளா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியான சுபாசிஸ் தலபத்ராவை, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்,
டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான சித்தார்த் மிருதுளை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான திராஜ் சிங் தாகூரை ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான தேவேந்திரகுமார் உபாத்யாவை மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அலோக் அரேதியை தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஏழு மாநில புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் பொறுப்பு ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஏழு மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம்: அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.
