×

மேன்மை அருளும் மூலை அனுமார்

தஞ்சாவூர்

பரம பக்தனாக விளங்கிய அந்த ஸ்தபதி, தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினால் பெருமை கொண்டார் என்றாலும், சற்றே குழப்பமும் அடைந்தார். தஞ்சையில், வடமேற்கு மூலையில் வாஸ்து மற்றும் ஆகம விதிப்படி ஒரு கோயில் கட்ட முடிவு செய்தார். அதில், எந்த வடிவில் ஆஞ்சநேயருக்கு சிலை உருவாக்குவது? அவருக்குப் பல வடிவங்கள் உண்டே! இந்தத் தலத்தில் எந்த மாதிரியான விக்ரகத்தை அமைப்பது பொருத்தமாக இருக்கும்? என தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர ஸ்தபதியால் இயலவில்லை.

ஒருநாள் ஸ்தபதியின் கனவில் தோன்றிய ராமபிரான், ‘என் அவதார காலத்தில் ஆஞ்சநேயர் செய்த அற்புதங்கள் ஏராளம்; அவற்றில் எனக்கு பிடித்தது சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து, லட்சுமணன் முதலான என் அன்பிற்கினியவர்களை மூர்ச்சை தெளிவித்து உயிர் பிழைக்க வைத்ததுதான். அத்தகைய சாதனையைச் செய்த ‘சஞ்சீவி மலை தாங்கி’ ஆஞ்சநேயர் உருவத்தை உருவாக்கி பிரதிஷ்டை செய்’ என்று ஆணையிட்டார். இதன்படி தனக்கு இப்பொறுப்பை அளித்த தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மனால் (கிபி.1739-1763) மூலை அனுமார் கோயில் கட்டப்பட்டது. தஞ்சை அரண்மனை நூலகத்து நாடி ஆவணங்களில் இந்த சம்பவத்துக்கான ஆதாரங்கள் உள்ளன.

பிரதாப சிம்மன், மூலை அனுமார் என்ற பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தார். ஒருசமயம், எதிரிப் படையினர் நாட்டை முற்றுகையிட்டபோது, இந்த மூலை அனுமாரை மனமுருகி வேண்டிக்கொள்ள, ஆஞ்சநேயர் அருளால் வானர சேனைகள் உருவாகி, எதிரிப் படையை ஓட ஓட விரட்டின. மன்னன் தன் இறுதி நாட்களில், பிரதாப வீர ஆஞ்சநேயருடன் ஐக்கியமானதாகச் சொல்வார்கள். தஞ்சையில் நான்கு ராஜவீதிகள் உள்ளன. இந்த மூலை அனுமார் கோயிலானது வடமேற்கு மூலையில், கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது.

மூலை அனுமார் சந்நதி கிழக்கு நோக்கியும், திருமுகம் வடக்கு பார்த்தும், திருக்கரம் தெற்கு பார்த்தும் அருள்புரியும் வகையில் அற்புதமாக அமைந்துள்ளது. அனுமாரின் இதயக் கமலத்திலேயே ராமபிரான் எழுந்தருளியுள்ளார் என்பதால், மூலை அனுமார் கோயிலில் ராமபிரானுக்கு என தனிச் சந்நதி இல்லை. முகலாய படையெடுப்பின்போது காஞ்சிபுரத்தில் இருந்த பங்காரு காமாட்சி அம்மன், தஞ்சை நோக்கி பயணப்பட்டாள்.

அம்மனுக்கு அந்தக் காலத்தில் தஞ்சையில் எவரும் அடைக்கலம் தர பயந்தார்கள். அப்போது மூலை அனுமார், தன்னுடைய திருத்தலத்தில் அம்மனுக்கு அடைக்கலம் அளித்தார். ராமபக்தர்கள் கனவில் தோன்றி, பங்காரு காமாட்சி அம்மனுக்கு தன் திருக்கோயிலுக்கு அருகிலேயே தன் நேரடி கண்காணிப்பில் இருக்கும் வகையில் கோயில் கட்ட ஆணையிட்டார் என்பார்கள். இன்றும் தஞ்சை பங்காரு காமாட்சி அம்மனை தரிசனம் செய்பவர்கள், மூலை அனுமாரை வழிபட்டு செல்லும் வழக்கம் உள்ளது.

மூலை அனுமார் கோயிலின் ராஜகோபுரத்தில் பிள்ளையார், முருகன், ருக்மிணி – பாமா சமேத கிருஷ்ணன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. புதிதாக திருமணமான தம்பதிகளும், குழந்தைப் பேறுக்காக வேண்டுபவர்களும் இச்சிலைகளை வணங்கி வழிபட்டால் அப்பேறு விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை. மேற்கில் நரசிம்ம மூர்த்தி, லட்சுமியுடன் கருணை வடிவாகக் காட்சி தருகிறார். தெற்கே சங்கர நாராயணன். அரியும் சிவனும் ஒன்றே என்று விளக்கும் இந்த சிற்பம், பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறது.

வடக்கு முகத்தில், யோக நிலை ஆஞ்சநேயரின் கற்சிற்பம். தியானம் கைக்கூடாதவர்கள், மனம் ஒரு நிலைப்படாதவர்கள், நினைவாற்றல் பலவீனம் உள்ளவர்கள், இவரை வழிபட்டு நன்மை பெறுகிறார்கள். வடக்கு முகத்தில் பல்வேறு தியான நிலையில் அனுமார் அருள்பாலிக்கிறார். ராவணன், தான் சிம்மாசனத்தில் அமர்ந்துக் கொண்டு ராமதூதனான ஆஞ்சநேயருக்கு ஆசனம் தராமல் அவமானப்படுத்தினான். இதனால், வெகுண்ட அனுமன் தன் வாலை சுருட்டி, அடுக்குகளாக்கி ராவணனுக்கும் மேலான உயரத்தில் அமர்ந்தார் என்கிறது ராமாயணம். அந்தக் காட்சியை சிற்ப வடிவாக தெற்குப் பிராகாரத்தில் கண் குளிரக் காணலாம்.

இந்த சிற்பத்தை உளமாற தரிசனம் செய்பவர்களுக்கு, பதவி உயர்வும், அவரவர் தகுதிக்கேற்ற நிரந்தரப் பணியும் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். மூலை அனுமார் கோயில் நுழைவாயிலின் இருபுறமும் வானர சேனை தளபதிகள் இருவர் துவார பாலகர்களாக காட்சி அருள்கிறார்கள். பொதுவாக, வைணவத் திருத்தலத்தில் வேப்பமரம் இருப்பது இல்லை. ஆனால், இத்திருக்கோயிலில் வேப்பமரம் உள்ளது. ராமஜபத்தை எப்போதும் கேட்பதற்காகவே அம்மன் வேப்பமரமாக இங்கு எழுந்தருளி இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

வேப்பமரத்தின் அடியில், நாகதேவதைகள் சிலைகளாக நிறைந்துள்ளனர். இங்கு உள்ள நாகரை வழிபட்டால் ராகு, கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். கருவறைக்கு வடபுறம் யோக நிலையில் உள்ள ஆஞ்சநேயரை பிரதாப சிம்மனும் அவர் மகனும் வணங்கி நிற்பது போன்ற சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டு மாடங்களைக் குடைந்து உருவாக்கிய குடவரைச் சிற்பங்களாக விளங்குகின்றன. யோக ஆஞ்சநேயரை வியாழக்கிழமை மற்றும் பவுர்ணமி தினங்களில் வழிபடுதல் சிறப்பு என்கிறார்கள். யோக ஆஞ்சநேயரை தொடர்ந்து 18 வாரம் வழிபட்டால் நினைவாற்றல் நிலைத்து நிற்கும் என்று நம்பப்படுகிறது.

தியானம் மற்றும் யோகம் கைகூடப் பெறாதவர்கள் யோக ஆஞ்சநேயரை வழிபட்டு நலம் பெறலாம். இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றலும் கிடைக்குமாம். மூலை அனுமாரை விதவிதமாக அலங்காரம் செய்து மகிழ்கிறார்கள் பக்தர்கள். காய்கறிகளாலும், முற்றிலும் எலுமிச்சம் பழங்களாலும் அலங்காரம் செய்வது மட்டுமன்றி, இனிப்புப் பண்டமான, பல வண்ண ஜாங்கிரியாலும் அவர் அலங்கரிக்கப்படுகிறார்! தான் குழந்தையாக இருந்தபோது தன் தாயின் மடியில் படுத்திருப்பது போன்ற ஆஞ்சநேயரின் சிற்பம், பார்க்கப் பரவசமூட்டுகிறது.

பிரதாப வீர ஆஞ்சநேயர் என்ற இந்த மூலை அனுமாரின் உத்தரவுப்படியே, பழங்கால ஓலைச்சுவடிகள், நூல்கள், குறிப்புகள், புராணங்கள் இவற்றை பேணிக்காத்து நூலகம் ஒன்றை அமைத்ததாகவும் அதுவே இப்போதைய தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் என்றும் சொல்கிறார்கள். அனுமார் சந்நதி விதானத்தில் 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல புடைப்புச் சிற்பம் உள்ளது. இதன் கீழ் அமர்ந்துதான் திருவையாறு தியாகராஜ சுவாமிகள் ராமநாம ஜபம் செய்து அனுமனை வழிபட்டாராம். இந்த ராசி மண்டலத்தின் கீழ் நின்றபடி அனுமனை மனம் கசிந்து வணங்கும் பக்தர்களுக்கு, கோள்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்குகிறது என்கிறார்கள்.

சூரிய, சந்திரனை பாம்பு (ராகு/கேது) கவ்விப்பிடிக்க வருவது போன்ற சிற்பத்தின் கீழ் நின்று பிரார்த்தனை மற்றும் அர்ச்சனை செய்தால் சூரிய – சந்திர கிரகண தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூல நட்சத்திரத்தைப்பற்றி தவறான எண்ணங்களை பலரும் கொண்டு இருக்கிறார்கள். (பெண் மூலம் நிர்மூலம் என்பது மாதிரி) ஆனால், மூல நட்சத்திரம் ஆஞ்சநேயர் அவதார நட்சத்திரமாகும். அந்த நாளில் சுப விசேஷங்களை மேற்கொள்ளலாம்; மூலை அனுமாரை தரிசனம் செய்து வாழ்க்கையில் வளம் பெறலாம்.

இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும், அமாவாசை அன்று 18 முறை அனுமாரை மவுனமாக வலம் வருவது நற்பலன்களை அளிக்கும். மனவேதனைகள் நீங்கும்; உடல் பிணிகள் தீரும்; சத்ரு, கடன் தொல்லைகள் எளிதில் விலகும். மூலை அனுமார் மங்களங்கள் நல்க காத்திருக்கிறார்; போய் வாருங்கள். காலை 6 முதல் 11 மணி மற்றும் மாலை 4 முதல் 8.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். கோயில் முகவரி: அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், மேல ராஜ வீதி, தஞ்சாவூர். தொலைபேசி: 9943381527

தொகுப்பு: ரித்விக்

The post மேன்மை அருளும் மூலை அனுமார் appeared first on Dinakaran.

Tags : Anumar ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...