×

இயற்கை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் வேளாண் இணை இயக்குனர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை: இயற்கை முறை விவசாய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என வேளாண் இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.ஹரகுமார் தெரிவித்திருப்பதாவது: ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பது அங்கக விவசாய சாகுபடியாகும். அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச்செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகின்றன. நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால், மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யமுடியும். மக்களின் உடல் நலத்தை காக்கவும், மண்வளம், இயற்கை வளம் காப்பதற்கும், நீடித்த நிலையான வேளாண்மையினை உறுதிப்படுத்தவும் தமிழக அங்கக வேளாண்மை கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாரச் 14ம் தேதி வெளியிட்டார்.

இயற்கை விவசாயம் செய்யும் தன்னார் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, மற்ற விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது. நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், அக்ரிஸ்நெட் வலை தளத்தில் வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக்கட்டணம் ₹100 செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். வெற்றிபெறும் 3 விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை குடியரசு தினத்தன்று முதல்வர் வழங்க உள்ளார். முதல்பரிசு ₹2.5 லட்சம் மற்றும் ₹10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், இரண்டாம் பரிசு ₹1.5 லட்சம் மற்றும் ₹7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், மூன்றாம் பரிசு ₹1 லட்சம் மற்றும் ₹5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான வழிமுறைகள் குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post இயற்கை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் வேளாண் இணை இயக்குனர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai District ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீரின்றி...