×

முசிறியில் வளர்ச்சி திட்ட பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

 

முசிறி, ஜூன் 12: முசிறி நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் சுமார் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் உள்கட்டமைப்பு வசதிகள் சுமார் ரூ.60 லட்சத்தில் நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இதேபோல் நகராட்சி அலுவலக கட்டிடம் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் கட்டப்பட்டு வருகிறது. இரு கட்டிடங்களையும் தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். பணிகளை விரைந்து முடித்திடவும், தரமாக செய்யவும் உத்தரவிட்டார். அப்போது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல பொறியாளர் பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் நிர்வாக இயக்குநர் நகராட்சி அலுவலகத்தில் வந்து கோப்புகளை ஆய்வு செய்தார். தண்ணீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி, நகர்மன்ற தலைவர் கலைச்செல்வி, நகராட்சி பொறியாளர் சம்பத்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் சையதுபீர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post முசிறியில் வளர்ச்சி திட்ட பணிகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Musiri ,Municipal Executive Director ,Ponnaiah ,Dinakaran ,
× RELATED முசிறி, தொட்டியம், தா.பேட்டையில் வரத்து வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை