×

செங்கல்பட்டு ராட்டிண கிணறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

செங்கல்பட்டு, ஜூன் 4: செங்கல்பட்டு ராட்டிண கிணறு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது. சென்னையை போல் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதி செங்கல்பட்டு. செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினம்தோறும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெறுவது வழக்கம். இங்கு சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் தங்களது பொருட்களை சாலையில் வைத்து ஆக்கிரமித்துள்ளன. மேலும், சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, சுப முகூர்த்த நாட்கள், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் செங்கல்பட்டு நகரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. செங்கல்பட்டு ராட்டிண கிணறு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மதுராந்தகம், திண்டிவனம், வந்தவாசி, உத்திரமேரூர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு மார்கமாக வரும் பேருந்துகள் இங்கு நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இங்கு எதிர் எதிரே பேருந்துகள் சாலையிலேயே நின்று செல்வதால், இதர வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பேருந்துகள் சாலையில் நின்று செல்வதை தவிர்க்கும் வகையிலும், செங்கல்பட்டு ராட்டிண கிணறு பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.மேலும், மழைநீர் கால்வாய்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

The post செங்கல்பட்டு ராட்டிண கிணறு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Ratina Kinaru ,Highways Department ,Chengalpattu ,Chengalpattu Rattina Kenaru ,Dinakaran ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...