×

இலிங்க புராண தேவர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒருமுறை பிரம்மனும், திருமாலும் பெரும் அகந்தையுற்றனர். படைத்தல், காத்தல் ஆகிய இரு தொழில்களுக்கும் தாங்களே காரணம் என்பதால் அவர்தம் ஆணவம் மேலோங்கியது. தங்களுக்குள் பெரியவன் யாவன் என்பதில் போட்டியிட்டனர். தங்கள் இருவரைக் காட்டிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா உயர்ந்தோன் ஒருவன் உளன் என்னும் எண்ணம் இருவருக்கும் எழவில்லை. நான்முகனும், மாலவனும் இதுகுறித்து வாதித்துத் தம்முட் கலகம் விளைவிக்கத் தொடங்கியதும், அவ்விருவர் நடுவே பேரொளிப் பிழம்பொன்று தோன்றியது. அதன் அடியும் முடியும் கண்ணுக்கு எட்டாதவாறு எல்லை கடந்து உயர்ந்து நின்றது. அதை ஆராயத் தொடங்கியவர்கள், அதன் அடிமுடி காணாதவர்களாய் திகைத்துத் தளர்வுற்றனர். இவை இரண்டிலொன்றைக் கண்டு முதலிற் திரும்புகின்றவரே மற்றவரைக் காட்டிலும் உயர்ந்தவர் என முடிவு கொள்வோம் எனக் கூறிப் புறப்பட்டனர்.

பிரம்மன் அன்னப்பறவையின் உருக்கொண்டு ஒளிப்பிழம்பின் உச்சியைத் தேடி உயரப் பறந்தான். மாலவனோ அடியினைக் காணும் அவாவுடன் பன்றி (ஏனம்) வடிவந்தாங்கி நிலத்தை அகழ்ந்துகொண்டே கீழே சென்றான். அடியும் முடியும் காணவொண்ணாதவாறு அவ்வனற்பிழம்பு விளங்குவதைக் கண்டு தேட ஆற்றலற்றவராய், செயலிழந்து திரும்பி வந்தனர். அவர்களின் ஆணவம் அவிந்து அடங்கியது. பரமேட்டி ஒளிப்பிழம்பாய்த் திகழ்ந்த நெடுந்தூணிலிருந்து (சோதி வடிவாய பெரும் இலிங்கத்திலிருந்து) தம் திருக்காட்சியைக் காட்டியருளினார். மாலவனும், நான்முகனும் கரம்கூப்பிப் போற்றினர். இந்நிகழ்ச்சியை இலிங்கபுராணம் விளக்கமுற உரைக்கின்றது.திருநாவுக்கரசு பெருமானார் ஐந்தாம் திருமுறையில் 95-ஆம் பதிகமாக ‘‘இலிங்க புராணத் திருக்குறுந் தொகை’’ எனும் தலைப்பில் பதினொரு பாடல்களைப் பாடியுள்ளார்.

அப்பதிகம் முழுதும் மாலவனும், நான்முகனும் அடிமுடி தேடிய வரலாறு கூறி நிறைப் பாடலாக,

செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்
‘‘இங்கு உற்றேன்’’ என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே

என்று பாடி இலிங்க உருவினுள் தன் உருவைக் காட்டிய புண்ணியமூர்த்தியின் திருக்கோலத்தை நமக்குக் காட்டுகின்றார். சோதி வடிவாய் இலிங்கத்தினுள் தன் உருக் காட்டும் மூர்த்தியின் சிற்ப வடிவங்களை ‘‘லிங்கோத்பவர்’’ என சிற்ப ஆகம நூல்கள் குறிக்கும். முற்காலப் பாண்டியர் குடைவரைக் கோயிலான புதுக்கோட்டை மாவட்டம், திருமெய்யம் (திருமயம்) சிவாலயத்திலும், இராஜசிம்ம பல்லவன் எடுத்த காஞ்சி கயிலாச நாதர் ஆலயத்திலும் காலத்தால் தொன்மையான இலிங்கோத் பவர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

திருமெய்யமுடைய மகாதேவர் கோயிலில் குடைவரையாக உள்ள பகுதியில் ஒருபுறம் சிவலிங்கத் திருவுருவம் இடம்பெற்றுள்ள கருவறையும், அதற்கு நேர் எதிரே குடைவரைச் சுவரில் லிங்கோத்பவர் திருவடிவமும் காணப்பெறுகின்றன. அரைச் செதுக்குருவமாய்த் திகழும் நெருப்பு வடிவமான நெடுந்தூணின் அடிப்பகுதி தரையிலும், மேற் பகுதி கூரையாக விளங்கும் மலைப் பகுதியிலும் பொதிந்து அடிமுடி காணவொண்ணாதவாறு திகழ்கின்றது.

நெடுந்தூணின் இருமருங்கும் தீச்சுடர்கள் ஒளிவிட்டு எரிகின்றன. தழல் வடிவாக விளங்கும் தூணின் நடுவே காணப்பெறும் வெட்டுப் பகுதியினுள் இரு கரமுடையவராக சிவபெருமான் தன் உருக் காட்டி நிற்கின்றான். அவரது சடைமுடியின் மேற்பகுதியும், முழங்காலுக்குக் கீழ் உள்ள கால்பகுதியும் இலிங்கத் தூணுள் மறைந்துள்ளன. இச்சிற்பமே இலிங்கபுராண தேவர் சிற்பப்படைப்புக்களுள் மிகத் தொன்மையானதாகும்.

காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் காணப்பெறும் லிங்கோத்பவர் திருமேனி தனிச்சிறப்புடையதாகும். இலிங்கத்தூண் உருவத்தின் உள்ளிருந்து பெருமான் எட்டுக் கரங்களோடு தன் எழிலார்ந்த திருமேனியை மாலவனுக்கும், பிரம்மனுக்கும் காட்டுவதாக உள்ளது. சடாமகுடத்தில் பிறைச்சந்திரன், நீள்செவிகள், பட்டையான புரிநூல், இடுப்பாடை, அணி கலன்கள் ஆகியவை அழகுக்கு அழகூட்ட பாம்பு, மழு, திரிசூலம், நீர்ப்பாத்திரம் ஆகியவற்றை கைகளில் தரித்தவராக பெருமானின் திருமேனி காட்சியளிக்கின்றது.

முற்காலப் பாண்டியர், பல்லவர் சிற்ப மரபை ஒட்டி பின்தோன்றிய சோழர், பிற்காலப் பாண்டியர், விஜயநகரர், நாயக்ககால சிவாலயக் கருவறைகளின் பின்புறக் கோஷ்டங்களில் இலிங்கோத்பவர் சிற்பங்கள் இடம்பெற்றன. அத்தகைய சிற்பப் படைப்புகளில் இலிங்க பாணத்தின் நடுவே திகழும் வெட்டுப் பகுதியினுள் மான், மழு ஆகியவற்றை தன் மேலிரு கரங்களில் ஏந்தியவண்ணம் கீழ் வலது கரத்தால் அபயம் காட்டி, கீழ் இடது கரத்தைத் தொடைமீது இருத்தியவராக, அடிமுடி மறைத்த நிலையில் சிவபெருமான் திகழ்வார்.

அப்பாணத்தின் மேற்பகுதியில் அன்னமாகவோ, அன்னத்தின்மீது அமர்ந்தவராகவோ, அல்லது விண்ணில் பறப்பவராகவோ நான்முகனின் வடிவமும் பாணத்தின் அடிப்பகுதியில் வராகமுகம் (பன்றிமுகம்) மனித உடலோடு நான்கு அல்லது இருகரம் உடையவராகத் திருமால் பூமியைத் தோண்டி கீழே செல்லும் வடிவமும் இடம்பெற்றிருக்கும். இலிங்கத்தின் வெட்டுப்பகுதியின் விளிம்பு முழுவதும் எரியும் தீச்சுடர்கள் வரிசையாகக் காணப்பெறும். இலிங்கபுராண தேவராகத் திகழும் இச்சிற்பம் இடம்பெற்றுள்ள கோஷ்டத்தின் இருமருங்கும் பிரம்மனும் திருமாலும் நின்று போற்றும் எழிலுரு வடிவங்கள் இடம்பெற்றிருக்கும்.

சிவஞான கண்டராதித்தரின் தேவியும், மதுராந்தக உத்தம சோழனின் தாயாருமான செம்பியன் மாதேவியார் சோழர்களின் கோயிற்கலை மரபுக்கு புதிய பரிமாணத்தை அளித்தவராவார். பல கற்கோயில்களையும், எண்ணற்ற செப்புத் திருமேனிகளையும் தோற்றுவித்த அத்தேவியார் கும்பகோணம் மயிலாடுதுறை நெடுவழியில் உள்ள குத்தாலத்திற்கு அருகமைந்த ஆனாங்கூரில் அகத்தீச்சரம் எனும் அற்புத ஆலயத்தை எடுத்து சிவப்பணி புரிந்துள்ளார். அவ்வாலயத்தின் மேற்குதிசை கோஷ்டத்தில் இடம்பெற்றுள்ள இலிங்க புராண தேவர் (அண்ணாமலையார்) சிற்பம் ஈடு இணையற்ற ஓர் அரிய படைப்பாகும். செம்பில் வார்த்தெடுத்த செப்புத் திருமேனியை ஒத்த இச்சிற்பப் படைப்பில் இலிங்கத்தின் நடுவே சிவபெருமான் திகழ மேலே அன்னத்தின்மீது ஒரு முகத்துடன் பிரம்மனும், கீழே வராகராக திருமாலும் அடிமுடி காண முயலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கோஷ்டத்தின் இருமருங்கும் திருமாலும், நான்முகனும் பரமனைப் போற்றி நிற்கின்றனர். மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் தேவியரான அபிமானவல்லியார் தஞ்சை இராஜராஜேஸ்வரமுடையார் திருக்கோயிலில் இலிங்கபுராண தேவர் என்ற செப்புத் திருமேனி ஒன்றினை எடுத்ததோடு, அதற்கென அணிகலன்களையும் அளித்த செய்தி அக்கோயிற் கல்வெட்டில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. இலிங்கபுராணத் தேவர் என்ற பெயரில் அமைந்த அத்தகையதொரு செப்புத் திருமேனி வேறு எந்த ஆலயத்திலும் இருந்ததாக அறிய முடியவில்லை. அரிய இத்திருமேனி பற்றி அக்கல்வெட்டு பின்வருமாறு கூறுகின்றது.

‘‘ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீராஜராஜதேவர் தேவியார் அபிமாந வல்லியார் உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் கோயிலில் யாண்டு இருபத்தொன்பதாவது வரை எழுந்தருளுவித்த செப்புத் திருமேனி உடையார் கோயிலில் முழத்தால் அளந்தும் ரத்தினங்கள் சரடு நீக்கி தக்ஷிணமேரு விடங்கன் எனும் கல்லால் நிறை எடுத்துங் கல்லில் வெட்டின பீடத்திற்கு மேல்சிரோவர்த்தனையளவுஞ்செல்ல இருபத்தொரு விரலெய் ஆறுதோரை உசரத்து ஒரு முழமேய் பதினொரு விரலெ இரண்டு தோரைச் சுற்றில் எழுந்தருளுவித்த லிங்கபுராண தேவர் திருமேனி ஒருவர்.

இவரோடுந் தோற்றமாகச் செய்து நின்ற ஜங்கைக்கு மேற்கேசாந்தத் தளவுஞ் செல்லப் பன்னிரு விரலே நாலு தோரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தம் உடையராகக் கனமாகச் செய்த திருமேனி ஒருவர். லிங்கத்தோடுங் கூடச்செய்த ஏழுவிரல் உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தம் உடையராகக் கனமாகச் செய்த ப்ரம்ஹர் ஒருவர். லிங்கத்தோடுங்கூடச் செய்த ஏழுவிரல் உசரத்து நாலு ஹஸ்தம் உடையராகக் கனமாக வராகமுகத்தோடுஞ் செய்த விஷ்ணுக்கள் ஒருவர். இருமுழமே பதினால் விரலே நான்கு தோரை சுற்றில் அறுவிரலே நான்கு தோரை உசரத்து பத்மபீடம் ஒன்று. இதனோடுங்கூடச் செய்த மூவிரலே நான்கு தோரை நீளத்து ஒருவிரலேய் நான்கு தோரை அகலத்து ஒருவிரல் உசரத்து கோமுகம் ஒன்று.

இவர்க்குக் குடுத்தன

தாழ்வடம் ஒன்றிற்கோத்த புஞ்சை முத்து நானூற்று முப்பதினால் நிறை கழஞ்சரையே இரண்டு மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு கால் தாழ்வடம் ஒன்றிற் கோத்த புஞ்சை முத்து எண்ணூற்றெண்பத்தெழினால் நின்ற முக்கழஞ்சரைக்கு விலை காசு அரை.’’

மிகத் துல்லியமான அளவீடுகளுடன் குறிக்கப்பெறும் இலிங்கபுராணத் தேவர் எனும் இச்செப்புத் திருமேனி தற்போது தஞ்சைப் பெரியகோயிலில் காணப்பெறவில்லை என்றாலும், இக்கல்வெட்டின் துணைகொண்டு அளவீடுகளோடு மீண்டும் அதனை ஓவியமாக நாம் வரைந்து போற்றி மகிழலாம்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post இலிங்க புராண தேவர் appeared first on Dinakaran.

Tags : Brahman ,Tirumal ,
× RELATED அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்