×

சுடர் திருவடி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பச்சிளம் குழந்தையின் பஞ்சு போன்று மெத்தென்று இருக்கும் பாதங்களின் தொடல் பேரானந்தத்தைத் தருகிறது. அவ்வாறெனில் சூட்சுமமாக இருக்கும் இறைவன் இறைவியின் திருவடித் தீண்டல் பரமானந்தத்தை அல்லவா தரும். அத்தீண்டலிலே அஞ்ஞானம் மறையும் மெய்ஞானம் துளிர்விடுகிறது. சுடர்விடும் அத்திருவடிகளைக் காண்பதே கோடி பலம் தரும். இது சாமானிய மனிதர்களுக்குச் சாத்தியமா என்கின்ற கேள்வி எழத்தான் செய்யும். இறை சிந்தனை மிகுகின்ற பொழுது உலக விவகாரங்களில் இருந்து நாம் விடுபடுகிறோம். ஒளிவெள்ளத்தில் மலர் தாமரையாக திருவடி தரிசனம் கிடைக்கும். அதனால், அகங்காரத்தை அழித்துவிட்ட துணிவும், பணிவும் மனிதனைப் பண்படுத்துகிறது. பாவநாச விமோசனியாக, பரமானந்தத் தேடலின் வழிகாட்டியாக சூட்சுமத் திருவடிகள் நம் முன்னே செல்ல நாம் பின்னே செல்கிறோம்.

எளிய பக்தனின் கதை

அளப்பரிய பக்தனாக இருந்த எளியவன் ஒருவன் தொலைதூரத்தில் இருக்கும் கடவுளின் கோயிலுக்குப் பயணமானான். பாதை தெரியாமல் தடுமாறிய பொழுது தானாகவே அவனது கால்கள் சீரான பாதையிலே செல்ல ஆரம்பித்தது. சற்று தொலைவு சென்றவுடன் தன்னிச்சையாக தன்னருகே பார்க்க இரண்டு காலடித் தடங்கள் தெரிந்தன. ஆஹா.. கடவுள் நம்முடனே வருகின்றான் என்னும் மகிழ்ச்சியுடன் இன்னமும் வேகமாக நடந்தான். சற்றுத் தொலைவு சென்றவுடன் பாலைவனம் வந்தது. பாலைவனத்தில் நடக்கின்ற பொழுது கடவுளின் காலடிகள் தெரிகின்றதா என்று பார்த்தான். ஏமாற்றமே மிஞ்சியது. கடவுளே இப்படிக் கொடுமையான வெயிலில் நான் நடக்கிற பொழுது என்னைக் கை விட்டுட்டியே உன் காலடித்தடங்களைக் காணவில்லை.

எனது காலடிகள் மட்டுமே தெரிகின்றது. இது சரியா?! என்றான். கடவுளின் குரல் வந்தது, ‘‘பக்தனே தெரிவது உன் காலடித்தடங்கள் அல்ல எனது காலடித்தடங்கள்’’ என்று. ஆக தனது பக்தனை இக்கட்டான தருணங்களில் இறைவன் தன் தோள் மீது வைத்துக் கொண்டு பயணிக்கிறான். இதுவே கடவுளின் கருணை. இறைவனின் நித்திய குணத்தை எளிமையாகப் புரிந்து கொள்ள இப்படி ஓர் கதை சொல்வார்கள்.

மாணிக்கவாசகர் பெற்ற பேறுஅமைச்சராக இருந்த மாணிக்கவாசகர் சிவபெருமானின் திருவடிகளைப் பற்றிப் பிடித்து சரணாகதி அடைந்து சிவ சிந்தனையின்றி வேறொன்றும் இல்லாமல் அடியவர் ஆனார். திருவாசகம் எனும் தித்திக்கும் வாசகத்தை இவ்வுலகிற்குத் தந்தருளினார். திருப்பெருந்துறையில் ஆலமரத்தடியிலே குருவாக வீற்றிருந்த சிவபெருமான் ஐந்து எழுத்து மந்திரமான நமசிவாயத்தை ஓதி கண்களால் நோக்கி தன் திருவடிகளை மாணிக்கவாசகரது தலைமேல் சூட்டி ஆட்கொண்டான். தனது ஆத்ம அனுபவத்தை மாணிக்கவாசகர் தனது பதிகத்திலேச் சொல்கின்றார். என்னையும் ஒருவனாக்கி இருங்கழல் வைத்த சேவக போற்றி திருவடியை என் தலை மீது வைத்து என்னை ஆட்கொண்டாய். மேலும், உன் திருவடிகளை பற்றிக்கொள்ளச் செய்தாய். என் பாவங்களையும் போக்கி அருளினாய் என்கின்றார்.

இணையார் திருவடி என் தலை மேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்

என்று தனது நிலைப்பாட்டை விவரிக்கின்றார்.

ஆக, இறைவனின் திருவடிகளைப் பற்றியதால் பரமானந்த நிலையை மாணிக்கவாசகர் பெற்றார். அனுபவத்தை திருவாசகத்தில் பாடுவதால்தான் திருவாசகத்தின் உருக்கம் உயரிய சரணாகதிச் சிந்தனையைத் தருகின்றது.

ஆடும் பொற்பாதம் பாடிய அணங்கு

சிவபக்தியுடன் அழகுப் பெண்ணாக வலம் வந்தவள் புனிதவதி. பரமதத்தனை மணந்தாலும் சிவ பக்தி சற்றும் குறையவில்லை. சிவபெருமானின் திருநடனத் திருவடி மட்டுமே கண் முன் இருந்தது. ஒரு நாள் தனது கணவன் வெளியூரிலிருந்து கொண்டு வந்து கொடுத்த இரண்டு மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாருக்கு பசியாற அமுதிடும் போது உடன் இக்கனியையும் பரிமாறினாள். மதியம் உணவுக்கு வந்த கணவன் உணவுடன் ஒரு கனியை உண்டான். மற்றுமொரு கனியையும் கேட்க என்ன செய்வது என்று புரியாமல் சிவபிரானிடமே கேட்டாள் புனிதவதி. கனி தந்தான் இறைவன். அக்கனியை உண்ட கணவன் தித்திப்பு அதிகமாக உள்ளதே ஏது இது என்று வினவினான்.

உள்ளதைச் சொன்னாள் பத்தினி. எங்கே மீண்டும் ஒன்று வாங்கு என்றான். பத்தினியும் கையேந்த வான் மழைத்துளியாய் மாம்பழம் வந்து கையில் விழுந்தது. பயந்து போனான் பரமதத்தன். இவள் பெண்ணல்ல தெய்வத்திருவே பெண்ணாக வந்துள்ளது என்று ஒதுங்கினான். பின் வேறு திருமணமும் செய்து குழந்தை பெற்று, அப்பெண் குழந்தைக்கு புனிதவதி என்றே பெயரிட்டான். விவரம் அறிந்த புனிதவதி சிவ திருப்பாதங்களையே மனதில் கொண்டு திருநடனத்தை தரிசித்து அழகு உருவம் விடுத்து பேய் உருவம் தாங்கி காரைக்கால் அம்மையானாள்.

ஐயனின் திருப்பாதம் பட்ட திருக்கயிலையிலே தன் பாதம் வைக்க அஞ்சி தலையால் நடந்து திருக்கயிலை ஏறினாள் அம்மை. பேயுரு தாங்கி தலையால் நடந்து வரும் அம்மையைப் பார்த்து அம்மையே என்று அழைத்தான் அம்மையப்பனும், ஆதி அந்தமுமில்லா இறைவன்.அங்கணன் அம்மையே என்று அருள் செய்ய அப்பா என்று பங்கயச் செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார் என்று பாடுகிறார் பெரிய புராணத்தில் சேக்கிழார். அவரது திருவடிகளை மனதில் நினைத்து அம்பலத்தாடுவானின் நடனத்திற்காகவே தனது பதிகங்களை மெய்யுருக்கத்துடன் பாடினார் அம்மையார். நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க வேண்டும் என்கிறாள் காரைக்கால் அம்மையார்.

அவர் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம் முழுவதும் சிவபெருமானின் திருவடி ஊன்றி ஆடும் நடனத்தையேச் சொல்லுகிறது. மேலும், தில்லை அம்பலத்தில் ஆடும் நடராசனின் எடுத்த பொற்பாதம் காண்பதற்காகவே எனக்கு இன்னும் மனிதப் பிறவி வேண்டும் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். ஆக, திருவடியின் பேரொளியே இறை அருளாக எங்கும் நிறைந்துள்ளது. இதனை நாம் உணர்ந்து கொள்ளவே ஞானியர்கள் தங்கள் அருள் படைப்புகளை படைத்தனர்.

தாய் மாமனும் மருமகனும்

பெருமாள் தன் திருவடிகளை அடியவர்க்கு உணர்த்தும் விதமாக பரஞ்சுடராய் எழுந்தருள பொய்கையாழ்வார் கடும் இருளிலே பெருமாளின் அழகிய திருப்பாதம் கண்டு திருவடிக்கே சூட்டினேன் சொல் மாலை என்று பாடினார். தான் உணர்ந்த திருப்பாதத்தின் அகப்பூரிப்பை திருவந்தாதிப் பாசுரங்கள் மூலம் பாடுகிறார். கள்வனாக இருந்த திருமங்கையாழ்வாரோ, மனித உருவில் வந்த திருமாலின் திருப்பாதத்தில் அணிந்திருந்த பொன்னால் ஆன மிஞ்சியை தன் பற்களால் கடித்து இழுக்கின்றார். அப்போது நாராயணா என்னும் சூட்சம மந்திரத்தை திருமால், திருமங்கை ஆழ்வாருக்குப் போதித்தார். அது சமயம் திருவடியின் பேரழகில் ஆழ்ந்து திருமங்கையார் திருவடிகளைப் பற்றிய போது, தன் உருவம் காட்டி மகிழ்வித்தார் திருமால்.

இனி அழகன் முருகனின் திருவடி அருளைப் பார்ப்போம்காவடியை முருகப் பெருமானின் திருவடிகளாகவே நினைத்து எடுக்கின்றனர். இக்கட்டான தருணத்திலே அஞ்சுகின்ற பொழுது அஞ்ச வேண்டாம் என தன் அழகிய பாதங்களைக் காட்டி அடியவர்களுக்கு அருள்பாளிக்கின்றான் முருகப்பெருமான். அதற்கு நன்றி செலுத்தும் வண்ணமாக முருகப்பெருமானின் அழகிய காவடியாக எடுத்து மகிழ்கின்றனர் முருகபக்தர்கள். அம்பாளின் கருணைத் திருவடிகளும் அவ்வாறே அருள் பாலிக்கிறது.

அம்பிகையின் செஞ்சுடர் திருவடி

அண்ட பிரம்மாண்ட நாயகியாக நின்று ஏகத்தையும் இயக்கக்கூடிய ஆற்றல்மிகு சக்தியாக, நித்திய கன்னியாக தனிப்பெரும் அழகுத் திருவுருவமாக நிற்கின்றாள் அம்பிகை. அவளின் மின்னு பொற்பாதம் தரிசிப்பவர்க்கெல்லாம் சரணாலயமாக விளங்குகிறது. வெண் பஞ்சினை ஒத்த மென்மையான திருவடிகளில் மின்னும் நவரத்தினம் கொண்ட சிலம்பணிந்து மெல்லவே தன் அடியவர்களிடம் வந்து மேன்மை மிகு அருளைத் தருபவள் அம்பிகை. அந்த அணுக்கமே அம்பாள் உபாசகர்களை வசீகரம் மிக்கவர்களாக மாற்றுவதுடன் பெரும் சவால்களையும் சமாளிக்கும் வலிமையும் பெற்றவர்களாக மாற்றுகின்றது.

ஆக, குழந்தையின் மென்மையையும் சுகத்தையும் எப்படி உணருகின்றோமோ அவ்வாறே இறைவ, இறைவியின் திருவடித் தீண்டலை உணர்தலே பேரானந்தம். அந்தப் பேரானந்தத்தைப் பெற மனதில் உள்ள தீய சக்திகளை கழுவேற்றுவோம். கரை சேருவோமாக. திருவடி தரிசனம் காண்பது என்பது மனதளவில் பக்குவப்படும் பொழுது அருள்மிகு பரம்பொருளே தன்னைக் காட்டுவிக்கும். அந்த காட்டுவித்தல் நிகழட்டும். இனியது இனிதே தழைக்கட்டும்.

தொகுப்பு: மகேஸ்வரி சற்குரு

The post சுடர் திருவடி appeared first on Dinakaran.

Tags : Thivadi ,Flame ,
× RELATED சாலையோரங்களில் பூத்து குலுங்கும்...