×

மானியத்துடன் மின்மோட்டார் பம்பு செட் வழங்கும் திட்டம்

கிருஷ்ணகிரி, மே 16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானியத்துடன் கூடிய மின்மோட்டார் பம்பு செட் வழங்கும் திட்டத்தில் பயனடைய, விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (5 ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில், புதிய மின் மோட்டார் பம்பு செட் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்த, அரசாணை பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள, பழைய திறனற்ற பம்ப் செட்டை மாற்ற விரும்புபவர்கள், தற்போதுள்ள டீசல் பம்ப் செட்டுகள், எலக்ட்ரிக் மோட்டார் பம்ப் செட்டுக்கு மாற்ற விரும்புபவர்கள் (மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் மட்டும்), மின் இணைப்பு பெற்ற விவசாயிகளால் புதிய ஆழ்துளை கிணறு, திறந்து வெளி கிணறு, குழாய் கிணறு அமைத்து, புதிய மின்மோட்டாரை பெறலாம்.

இத்திட்டத்தில் மின் மோட்டார்களை பெற, சென்னை தலைமை பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே மோட்டார் வாங்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ₹15 ஆயிரம், இதில் எது குறைவோ, அந்த தொகை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 2022-23ம் நிதியாண்டிற்கு பொது பிரிவு விவசாயிகளுக்கு 120 எண்களும், இந்து ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 30 எண்களும் என மொத்தம் 150 எண்கள், ₹22.50 லட்சம் மானியத்தில் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.

மேலும், 2022-23ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலவரைப்படம், சிறு விவசாயிகளுக்கான சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு எண் மற்றும் மின் இணைப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பிக்கும் விவசாயிகள் பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தின் கீழ், நுண்ணீர் பாசனம் அமைத்திருக்க வேண்டும். அல்லது அமைக்க விண்ணப்பித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 4 நட்சத்திர மதிப்பீட்டை கொண்ட பம்ப் செட் வாங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் (வேளர்ணமை பொறியியல் துறை), உதவி செயற்பொறியாளர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி, செல்வம், உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) உதவி செயற்பொறியாளர்அலுவலகம், ராயக்கோட்டை சாலை, சென்னத்தூர் அஞ்சல், சாணசந்திரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

The post மானியத்துடன் மின்மோட்டார் பம்பு செட் வழங்கும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்