கிருஷ்ணகிரி, மே 12: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு “யானைகள் அருகில் உள்ளது, விழிப்புடன் இருக்கவும்” என வனத்துறை மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாயலத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் சுமார் 125 முதல் 150 எண்ணிக்கையிலான யானைகள் கூட்டம், கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி, ஜவளகிரி காப்புக் காடுகளில் நுழைந்து தேன்கனிக்கோட்டை, நொகனூர், ஊடேதுர்க்கம், சானமாவு, செட்டிப்பள்ளி மற்றும் மகராஜகடை காப்புக்காடுகள் வழியாக, ஆந்திரா மாநிலம் கவுண்டன்யா சரணாலயம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சரணாலயம் வரை சென்று, மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.
இவ்வாறு வந்து முகாமிட்டு செல்லும் யானை வட்டங்களில், சில யானைகள் தனித்தனியாக உள்ள சானமாவு, செட்டிப்பள்ளி, வேப்பனஹள்ளி, மகாராஜகடை உள்ளிட்ட காப்புக்காடுகளில் நிரந்தரமாக தங்கி, சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. மேற்படி யானை கூட்டங்கள், ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி மனித, கால்நடை உயிரிழப்புகள் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியும் வருகின்றன. இதனால், பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பொருட்டு, பயிர் சேதங்கள் ஏற்படும் விவசாய நிலங்களை வனப்பணியாளர்கள் உடனுக்குடன் தணிக்கை செய்து, அதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டும், தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
காப்புக்காட்டினை விட்டு வெளியில் வரும் யானை கூட்டங்களை, வனப்பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து, மீண்டும் அவைகளை பாதுகாப்பாக காப்புக்காடுகளுக்கு அனுப்பி உயிர் சேதம் மற்றும் பயிர் சேதங்கள் ஏற்படாவண்ணம் கட்டுப்படுத்தி வருகின்றனர். மேலும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலமும், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் வாயிலாகவும், வனக்குழு தலைவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களின் செல்போன் மூலமும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வனப்பணியாளர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது, ஓசூர் வனக்கோட்டத்தின் 7 வனச்சரகங்களிலும் பரவலாக யானைகள் நடமாட்டம் உள்ளது. காப்புக்காடுகளை ஒட்டியுள்ள மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உடனுக்குடன் யானைகளின் நடமாட்டத்தை தெரிந்து, பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு, அவர்களின் செல்போன் எண்களை வன அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். அவ்வாறு சேகரிக்கும் செல்போன் எண்களுக்கு இணையதளம் மூலம் வனத்துறையால் “யானைகள் அருகில் உள்ளது. விழிப்புடன் இருக்கவும்” என தமிழில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. வன அலுவலர்களிடம் செல்போன் எண்கள் வழங்காமல் விடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட வன அலுவலர்களை தொடர்பு கொண்டு, தங்கள் செல்போன் எண்களை வழங்கி, யானைகள் நடமாட்டம் குறித்த குறுஞ்செய்தியை பெற்று, பாதுகாப்பாக இருக்க மாவட்ட வன உயிரின பாதுகாவலர் கார்த்திகேயனி கேட்டுக்கொண்டுள்ளார்.
The post வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு யானை நடமாட்டம் குறித்து குறுஞ்செய்தி அனுப்பி விழிப்புணர்வு appeared first on Dinakaran.
