×

கரியமாணிக்கம் பகுதியில் பதற்றம் முன்விரோதத்தில் கோஷ்டி மோதல்

புதுச்சேரி, மே 12: நெட்டப்பாக்கம் அருகே உள்ள கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த ரஜினிகுமார் என்பவருக்கும், நரேந்திரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஜினிகுமார் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கரியமாணிக்கம்- தவளக்குப்பம் சாலையில் ஒன்று திரண்டனர். பிறகு உடனே அப்பகுதியில் நரேந்திரன் தலைமையில் மற்றொரு கும்பல் ஒன்று திரண்டது. இதையடுத்து இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நெட்டப்பாக்கம் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் அவர்களை மறித்து விட்டு கலைந்து போகுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் சமரசம் ஆகாமல் ஒருவரையொருவர் கற்கள், தடி உள்ளிட்டவைகளால் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

உடனே போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த கும்பல் போலீசாரையும் கற்கள், தடி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன், தலைமை காவலர் பிரதீஷ், காவலர் காளிதாஸ் உள்ளிட்ட போலீசார் பலத்த காயமடைந்தனர். போலீஸ் வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. பிறகு சிறிது நேரத்தில் போலீசார் குவிக்கப்பட்டு கலவரக்காரர்களை துரத்தி அடித்தனர். உடனே அங்கிருந்தவர்கள் நான்கு புறமும் சிதறி ஓடினர். இந்த கலவரத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டனர். இதில் அப்பகுதியை சேர்ந்த ரஜினிகுமார் (34), பெரியாண்டவர் (42), கிருஷ்ணகுமார் (35), கிருஷ்ணராஜ் (30), நரேந்திரன் (35), விநாயகமூர்த்தி (37), சத்தியமூர்த்தி (23), பாரதிராஜா (33), கதிரவன் (27), வீரன் (37), பாக்கியராஜ் (35), பவாணிசங்கர் (21), நரேஷ் (27) மற்றும் சிலர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குபதிந்து ஒவ்வொருவராக கைது செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post கரியமாணிக்கம் பகுதியில் பதற்றம் முன்விரோதத்தில் கோஷ்டி மோதல் appeared first on Dinakaran.

Tags : Kariyamanikkam ,Puducherry ,Rajinikumar ,Narendran ,Nettapakkam ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு