×

குள்ளஞ்சாவடி அருகே பரபரப்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தாய்மாமன் மீது வழக்கு

நெய்வேலி, மே 12: குள்ளஞ்சாவடி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தாய்மாமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடந்தையாக இருந்த தாயார் மற்றும் தாத்தா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த பொய்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாதன் மகன் தமிழ்ச்செல்வன் (25). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது சகோதரியின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டதால் சகோதரி மற்றும் அவரது 17 வயது மகள் ஆகியோரை பராமரித்து வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி கிராம மக்கள் முன்னிலையில் தமிழ்செல்வன், தனது சகோதரி மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பற்றி கடலூர் மாவட்ட சமூக நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி தகவலை உறுதிப்படுத்திக்கொண்டனர். பின்னர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமூக நலத்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதுகுறித்து ஆய்வாளர் விஷ்ணுபிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுமியை திருமணம் செய்த தமிழ்ச்செல்வன், அவரது தந்தை செல்வநாதன், சகோதரி அலமேலு ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குள்ளஞ்சாவடி அருகே பரபரப்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தாய்மாமன் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Kullanjavadi ,Neyveli ,
× RELATED மகன் தூக்குபோட்டு தற்கொலை