×

மக்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வுகாண வேண்டும்

நாமக்கல், மே 11: நாமக்கல் நகராட்சியில் மக்கள் பிரச்னையில் முக்கியத்துவம் வழங்கி, உடனடியாக தீர்வுகாண வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை, அமைச்சர்கள் தலைமையில் 3 மாதத்துக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று மாலை நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் கலாநிதி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், நாமக்கல் நகராட்சியில் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், முடிக்கப்பட்ட பணிகள் விவரம், நடைபெற்று வரும் பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை இந்தியா திட்டம், 15வது நிதிக்குழு மானிய நிதி திட்டம், மூலதன மானிய நிதி திட்டம், உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை, பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ள பணிகள், ஒப்பந்ததப்புள்ளிகள் கோரப்பட்டுள்ள பணிகள், கருத்துரு மற்றும் முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டுள்ள பணிகள் ஆகியவை குறித்து அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: நாமக்கல் நகர்மன்றத்தில் உள்ளாட்சி நிர்வாகிகள் பொறுப்பேற்று ஓராண்டு ஆகிறது. கடந்த ஓராண்டில் நாமக்கல் நகராட்சியில் பல்வேறு திட்டங்களின் கீழ் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. நடைபெற்று வரும் திட்டபணிகளை, அதிகாரிகள் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், தங்கள் வார்டில் உள்ள பிரச்னைகளை அதிகாரிகளுடன் அமர்ந்து பேசி, தீர்வு காணவேண்டும். மக்கள் தான் நமக்கு எஜமானர்கள். அவர்களிடம் அன்பாக பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும். அதிகாரிகளும் சுறுசுறுப்பாக பணியாற்றி, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.

நாமக்கல் நகராட்சியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சுகாதாரமான குடிநீரை தங்கு தடையின்றி வழங்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். நாமக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.ஆய்வு கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் பூபதி, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சுகுமார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஜெய்சங்கர், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, நகரமைப்பு கட்டட ஆய்வாளர் சீனிவாசன், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் 36 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் வார்டில் நடைபெற்று வரும் பணிகள், மக்கள் எதிர்பார்ப்புகள் குறித்து பேசினார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். அப்போது அதிகாரிகள் கூறிய பதிலை கேட்ட அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்பி ஆகியோர் மக்கள் பிரச்னைகளை விரைவாக முடிக்க வேண்டும்.சிக்கலான பிரச்னை என்றால், உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.

The post மக்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வுகாண வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Municipality ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்