×

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

குறளின் குரல்

வாழ்க்கை என்பது எத்தனை உயர்வானது! பொன்னுக்கும் பொருளுக்கும் ஏங்கியா வாழ்க்கை நடத்துவது? மனத்தை அடக்கி உயரிய சிந்தனைகளோடும் நோக்கங்களோடும் எதன்பொருட்டும் சமரசம் செய்துகொள்ளாமல் வாழும் வாழ்க்கை அல்லவா பெருமிதம் மிக்கது? அத்தகைய வாழ்க்கை வாழ்வோருக்குரிய கம்பீரமும் நிம்மதியும் மற்றவர்களுக்குக் கிட்டுமா? வாழ்வில் உயர்வது என்பது வெறும் பொருளாலும் பதவியாலும் உயர்வதல்ல. மனத்தாலும் சிந்தனையாலும் உயர்வதே வாழ்க்கை. வாழ்க்கைத் தரம் உயர்வது என்பது உண்மையில் இதைக் குறிப்பதுதானே தவிர வெறும் பொருளாதார உயர்வைக் குறிப்பதல்ல.

நம் வாழ்க்கை முழுவதற்கும் தேவையான உயர்ந்த கருத்துகளைச் சொல்லும் வள்ளுவர், வாழ்வின் உண்மையான நோக்கம் என்ன என்றும் ஆராய்ந்திருக்கிறார். இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம் என திருக்குறளின் இரண்டு அதிகாரங்களின் தலைப்பிலேயே வாழ்க்கை என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது. வாழ்க்கை என்ற சொல்லையே அவர் தம் குறட்பாக்களில் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
(குறள் எண் 44)

சிறந்த வாழ்க்கை என்பது பழிக்கு அஞ்சி வாழ்வதுதான். மற்றவர் பழிக்காத வண்ணம் தன் வாழ்க்கையை ஒருவன் அறம்சார்ந்து பொருளீட்டி வாழவேண்டும். அவ்வாறு சேர்த்த பொருளை மற்றவர்க்குப் பகிர்ந்து அளித்துத் தானும் உண்ண வேண்டும். அப்படிச் செய்தால் அந்த வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
(குறள் எண் 83)

நாள்தோறும் வரும் விருந்தினரைப் போற்றிப் பேணுகின்றவனுடைய வாழ்க்கை ஒருநாளும் துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
(குறள் எண் 330)

நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீயவாழ்க்கை வாழ்பவர், முற்பிறப்பில் கொலை பல செய்து உயிர்களை உடம்பிலிருந்து நீக்கியவர் என்று அறிஞர் கூறுவர்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரி
முன்னர்வைத்தூறு போலக் கெடும்.
(குறள் எண் 435)

குற்றம் நேர்வதற்கு முன்னமே அது வராமல் காத்துக்கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் வைத்த வைக்கோல்போர் போல அழிந்துபோகும்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றக் கெடும்.
(குறள் எண் 479)

தன்னிடமுள்ள பொருள் வளத்தின் தன்மையை அறிந்து அதற்கு உட்பட்டு வாழாதவன் வாழ்க்கை எல்லா வளமும் உள்ளதுபோல் தோன்றினாலும் பின் ஏதும் அற்றதாய் அழிந்துவிடும்.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர் நிறைந்தற்று.
(குறள் எண் 523)

சுற்றத்தாரோடு கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை கரையில்லாத குளத்தில் நீர் நிறைவதைப் போலப் பயனற்றதாகிவிடும்.

இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
(குறள் எண் 856)

பிறருடன் மனவேறுபாடு கொள்வதால் வெற்றிபெறுவது இனியது என்று கருதுகின்ற வனின் வாழ்க்கை அழியாமல் இருப்பது சிறிது காலமே. அழிந்துபோவதும் சிறிது காலத்திற்கு உள்ளேயேதான்.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
(குறள் எண் 890)

மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் கொடிய பாம்போடு சேர்ந்து வாழ்வதைப் போன்றது.

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
(குறள் எண் 897)

பெரியோரைப் பேணி அவர் சொற்படி வாழும் வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கையாகும். பெரியோர் சீற்றத்தினை அதிகரிக்கும் வண்ணம் வாழ்ந்தால் அப்படிச் சீற்றமடையச்செய்தவரின் சிறப்பான வாழ்க்கையும் வானளவு பொருட்செல்வமும் நிலைக்காது.

மருந்தோ மற்றூன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து.
(குறள் எண் 968)

குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேரும்போது இறந்துபோகாமல் இந்த உடம்பைக் காப்பாற்றி வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தாக அமையாது. அவ்விதம் வாழ்வது இழிந்ததே ஆகும். வள்ளுவரின் வாழ்க்கைக் கோட்பாடுகள் நம்மை வசீகரிக்கின்றன. வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம் என்று எண்ணாமல் தேர்வில் தோல்வி அடைந்தவுடன் மனம் நொந்து உடனே தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பற்றி நாளிதழ்கள் அடிக்கடி செய்தி வெளியிடுகின்றன. கல்வியின் நோக்கமே ஒருவனின் தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான். வாழ வேண்டும் என்ற தன்னம்பிக்கையைத் தராத வெறும் தகவலறிவுக் கல்வியால் என்ன பயன்?

தன்னம்பிக்கையை வளர்க்கும் விவேகானந்தரின் சிந்தனைகளையும் அவரைப் போன்ற மற்ற சிந்தனையாளர்களின் எண்ணங்களையும் கல்வியில் பாடப் பகுதியாக வைத்தால் மாணவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தீரத்துடன் எதிர்கொள்ளும் மனோதிடத்தைப் பெறுவார்கள் அல்லவா?காதல்தோல்வியால் தற்கொலை என்ற செய்திகளும் அவ்வப்போது வருகின்றன. ஆணையோ பெண்ணையோ காதலிக்காமல் அவரவரும் தங்கள் சொந்த வாழ்க்கையைக் காதலித்தால் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றுமா? வாழ்வில் காதல் ஒரு பகுதிதானே தவிர காதலே வாழ்க்கையல்ல என்பதை இளைய தலைமுறைக்கு யார் எடுத்துச்சொல்வது?

தற்கொலை உணர்வு பற்றி இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் இரண்டு இடங்களில் பேசுகிறது.சுந்தரகாண்டத்தில், சீதாதேவி துயரத்தின் எல்லைக்கே செல்கிறாள். ராமபிரானைப் பற்றிய எந்தத் தகவலும் வராததால் மனதளவில் கடும் விரக்தி அடைகிறாள். தன்னைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் அரக்கியர் அனைவரும் உறங்கும் நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்கிறாள். மாதவிக்கொடி மூலம் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் மாதவிப் புதரை நோக்கி நடக்கிறாள்.

`போதுலா மாதவிப் பொதும்பர் எய்தினாள்’ என்கிறார் கம்பர். அப்போது மரத்தின் மேலிருந்து சீதாதேவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனுமன், சீதையின் எண்ணத்தை உணர்ந்து கொள்கிறான். `ராமபிரானின் தூதன் நான்’ எனச் சொல்லியவாறு சீதை முன் கைகளைத் தொழுதபடி அனுமன் தோன்றினான் என்கிறார் கம்பர்.

`கண்டனன் அனுமனும் கருத்தும்
எண்ணினான்
கொண்டனன் துணுக்கம் மெய் தீண்டக்
கூசுவான்
அண்டர் நாயகன் அருள் தூதன் யான்
எனாத்
தொண்டைவாய் மயிலினைத் தொழுது
தோன்றினான்.’

மிகச் சரியான நேரத்தில் `நான் ராமதூதன்’ எனக் கூறியவாறு சீதைமுன் அனுமன் தோன்றியதால் அவள் வாழ்க்கை காப்பாற்றப்படுகிறது.பரதன் வாழ்க்கையைக் காப்பாற்றுப வனும் அனுமன்தான். பதினான்கு ஆண்டு வனவாசம் முடியும் தறுவாயில் ராமன் இன்னும் அயோத்திக்குத் திரும்பாததை எண்ணி பரதன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்கிறான். நெருப்பு மூட்டி அதில் விழ முடிவு செய்து, விழுமுன் அந்த நெருப்புக்குப் பூசைசெய்யவும் தொடங்குகிறான். அந்த நேரத்தில் குன்று போல மாருதி அங்கு குதித்து வந்து பரதன் உயிரைக் காக்கிறான் என்கிறார் கம்பர்.

`என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோர் உடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு
குன்றுபோல் நெடு மாருதி கூடினான்.’

ஆக வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணம் சீதைக்கும் பரதனுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் வந்துள்ளது. அனுமனால் அவர்கள் வாழ்க்கை காப்பாற்றப் படுகிறது.
உயிர் விடுவதென முடிவுசெய்யும் தறுவாயில், சற்றுப் பொறுமை காத்தால் மிகச் சிறப்பான எதிர்காலம் அமையும் என்பதையே ராமாயணம், சீதை மூலமாகவும் பரதன் மூலமாகவும் சித்திரிக்கிறது.

இன்று திரைத்துறை சார்ந்தும் பலரின் வாழ்க்கை நடக்கிறது. `வாழ்க்கைப்படகு, வாழ்வே மாயம், வாழ்க்கை, வாழ்க்கை வாழ்வதற்கே, வாழ்ந்துகாட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், வாழ நினைத்தால் வாழலாம், வாழ்க்கை அலைகள், வாழ்ந்து காட்டுவோம், வாழ்க்கைச் சக்கரம், வாழ்ந்து பார்க்கலாம் வா’ என்றிப்படிப் பல தமிழ்த் திரைப்படங்கள், தலைப்பிலேயே வாழ்க்கையைத் தாங்கியுள்ளன.

`பலே பாண்டியா!’ திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பி. சுசீலா, டி.எம். செளந்தரராஜன் பாடிய கண்ணதாசன் பாடலொன்று `வாழ நினைத்தால் வாழலாம்’
என்கிறது.

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்தி வா…
வாழ நினைப்போம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணிபோலே
காலம் முழுதும் நீந்துவோம்.

வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் எனக் கற்றுத் தருகிறது ஒரு திரைப்பாடல். `சுமைதாங்கி’ படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில், பிபி னிவாஸ் குரலில் ஒலிக்கும் அந்த கண்ணதாசன் பாடல், வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வையையே மாற்றி நமக்கு ஆறுதலும் உற்சாகமும் தருகிறது. பாடலின் சில வரிகள் இதோ:

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா…
வாழ்க்கை என்றால் அதில் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.

ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் பிணி, மூப்பு, சாக்காடு எனும் மூன்றையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உண்மையை புத்தர் கண்டறிந்து தெரிவித்திருக்கிறார்.
பிணியே வராத மனிதர் யாருமில்லை. ஒரு காய்ச்சலாவது வராதவர் என்று உலகில் ஒருவர் இருக்கமுடியுமா?

அதுபோலவே மூப்பு. வயோதிகம் வருகிறதோ இல்லையோ ஒவ்வொருவரும் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் மூப்படையவே செய்கிறார்கள். இயற்கையின் அருளும் இருக்குமானால் அவ்விதம் தொடர்ந்து மூப்படைந்து வயோதிகராகவும் வாழ்கிறார்கள்.சாக்காடு என்கிற இறப்பை உலகில் யாரும் தவிர்க்க இயலாது. வாழ்க்கையின் நிறைவு அதுதான். `பார்மீதில் நான் சாகாதிருப்பேன் கண்டீர்!’ என்ற பாரதியும் இறந்துதான் போனார்.

அவர் புகழுடம்போடு வாழ்கிறார் என்று வேண்டுமானால் நாம் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், எலும்பும் சதையுமான உடம்போடு நிலைத்து வாழ்தல் என்பது யாருக்கும் இயலக்கூடியதல்ல. `இந்த உடல் என்பது வாழையிலை மாதிரி. வாழையிலையில் உணவு சாப்பிடுவது மாதிரி, நம் வாழ்வில், இந்த உடலென்னும் இலையில் எத்தனையோ உணர்வுகளைச் சாப்பிடுகிறோம்.

சாப்பிட்டு முடித்த பிறகு வாழையிலையைத் தூக்கிப் போடத் தானே வேண்டும்? எல்லா அனுபவங்களையும் அடைந்த பின்னர் இந்த உடலென்னும் வாழையிலையையும் தூக்கி வீச வேண்டியதுதான்!’ என்கிறார் ரமண மகரிஷி.ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. நல்லதையே நினைத்து நல்லதையே செய்து வாழ்வாங்கு வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும். அப்படி வாழ வள்ளுவர் வகுத்துத் தந்த கையேடுதான் திருக்குறள்.

ஆசி வேண்டுவோரை `நீடூழி வாழ்க!’ என வாழ்த்தும் மரபிருக்கிறது. ஊழிக்காலம் என்று சொல்லப்படும் பன்னெடும் காலம் வரை வாழ்க என்ற பொருளைக் கொண்டது இந்த வாழ்த்து. திருக்குறள் தெரிவிக்கும் அறக்கருத்துகளைப் பின்பற்றும் எல்லோருமே நீடூழி வாழலாம். வள்ளுவரின் ஆசி அவர் கருத்துகளின்படி நடப்பவர்களுக்கு என்றும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை! appeared first on Dinakaran.

Tags : Valluvar ,Kural ,
× RELATED திருக்குறளில் வேள்வி!