×

திருக்குறளில் வேள்வி!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் வேள்விகள் நிகழ்த்தும் ஆன்மிக மரபு தமிழகத்தில் தழைத்திருந்திருக்க வேண்டும். திருக்குறளில் பல்வேறு செய்திகளைப் பதிவு செய்யும் வள்ளுவர் வேள்வி குறித்தும் பதிவு செய்கிறார்.கூடவே அவிசொரிந்து வேள்வி நிகழ்த்துவதை விடவும் ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் இன்னும் சிறப்பு என்றும் அறிவுறுத்துகிறார். விருந்தோம்பலே கூட ஒரு வேள்விதான் எனவும் குறிப்பிடுகிறார்.வேள்வி குறித்த வள்ளுவரின் பதிவுகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

`அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.’
(குறள் எண் 259)

நெய் முதலிய பொருட்களைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விட, ஓர் உயிரைக் கொன்று உண்ணாதிருத்தல் நல்லது.

`செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றோரோ டொப்பர் நிலத்து.’
(குறள் எண் 413)

செவியுணவாகிய கேள்வி ஞானத்தைப் பெற்றிருப்பவர், இந்த உலகில் வாழ்பவரே என்றாலும் வேள்வித் தீயில் சொரியப்படும் நெய் முதலியவற்றை உணவாகக் கொள்ளும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

`இனைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.’
(குறள் எண் 87)

விருந்தினரைப் பேணுவதும் ஒருயாகமே. அந்த யாகத்தைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட இயலாது. வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

`பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.’
(குறள் எண் 88)

விருந்தோம்பல் என்னும் வேள்வியைச் செய்யாதவர்கள், செல்வத்தைச் சிரமப் பட்டுக் காத்து இப்போது எந்தத் துணையும் இல்லாமல் போனோமே என்று பின்னால் வருந்துவார்கள். இந்துமத ஆன்மிக மரபில் வேள்வி ஒரு முக்கியமான அங்கம். வருணன், வாயு, இந்திரன் முதலிய பற்பல தேவதைகளைத் திருப்தி செய்வதற்குத் தனித்தனி மந்திரங்களுடன் கூடிய தனித்தனி யாகங்கள் உள்ளன.

ஆனால் எல்லா யாகங்களிலும் அவி பொருள் என்ற தேவதைகளுக்கான நெய் முதலிய உணவை அக்கினியில்தான் போட வேண்டும். அக்னி தேவன் அந்தப் பொருட்களை உரிய தேவதைகளிடம் சேர்ப்பித்துவிடுவான்.இதுபற்றிக் கருத்துச் சொல்லும் பரமாச்சாரியார், `பல்வேறு முகவரிகள் எழுதப்பட்ட தபால்களை ஒரே தபால்பெட்டியில்தான் நாம் போடுகிறோம். என்றாலும் தபால்கள் தனித்தனியே உரியவர்களுக்குப் போய்ச் சேர்கிறதில்லையா? அதேபோல் தபால் பெட்டியாகத் தான் அக்னி செயல்படுகிறான்’ என அழகிய உவமையைச் சொல்லி விளக்குகிறார்.

இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் பல்வேறு யாகங்களைப் பற்றிப் பேசுகிறது. அதன் தொடக்கத்திலிருந்துஇறுதிவரை யாகச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.ராமபிரான் அவதரிப்பதற்கு முன் புத்திரப் பேற்றை வேண்டி தசரதரால் புத்திரகாமேஷ்டி யாகம் நிகழ்த்தப்படுகிறது.ராமன் அவதரித்த பின் தனது யாகத்தைக் காப்பதற்காக விஸ்வாமித்திரர் ராமனையும் லட்சுமணனையும் கானகம் அழைத்துச் செல்கிறார். ராம லட்சுமணர்கள் யாகத்திற்கு இடையூறு செய்த சுபாகுவை வதம் செய்கிறார்கள். மாரீசன் ராமனின் அம்புக்கு அஞ்சித் தப்பி ஓடுகிறான். ராம லட்சுமணர்கள் சீதாதேவியோடு வனவாசம் செல்லும்போது வனத்தில் உள்ள முனிவர்கள் தாங்கள் இயற்றும் யாகங்களுக்கு இடையூறு செய்யும் அரக்கர்களிடமிருந்து தங்களைக் காக்குமாறு அவர்களை வேண்டுகிறார்கள்.

யுத்த காண்டத்தில் இந்திரஜித் நிகழ்த்தவிருந்த நிகும்பலை யாகத்தைத் தடுத்து லட்சுமணன் இந்திரஜித்தை வதம் செய்கிறான்.ராமனுக்குப் பட்டாபிஷேகம் நிகழ்ந்த பிறகு ராமாயணத்தின் இறுதிப் பகுதியில் அயோத்தியில் நேர்ந்துள்ள பஞ்சத்தைத் தடுப்பதற்காக அஸ்வமேத யாகம் செய்கிறான் ராமன். மனைவியில்லாமல் யாகம் செய்யக்கூடாது என்பது விதி.

எனவே சீதை கானகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டதால் ராமன் ஒரு தங்கப்பதுமையை சீதை போல் உருவாக்கி அதை அருகே வைத்துக் கொண்டு அஸ்வமேத யாகம் செய்தான் என்கிறது ராமாயணம்.மகாபாரதத்திலும் யாகங்கள் வருகின்றன. மகாபாரதக் கதாநாயகியான திரெளபதியே பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் வளர்த்த யாகத் தீயிலிருந்துதான் தோன்றுகிறாள். பாஞ்சாலியுடன் திருஷ்டத்யும்னன் என்னும் அவள் சகோதரனும் யாகத் தீயிலிருந்து தோன்றினான் என்கிறது மகாபாரதம்.

மலயத்துவஜ பாண்டியனுக்கும் அவன் மனைவி காஞ்சனமாலைக்கும் மகப்பேறு இல்லாதிருக்கவே, அவர்கள் புத்திரப் பேறு வேண்டி வேள்வி நிகழ்த்தினார்கள். அந்த வேள்வித் தீயிலிருந்து ஒரு சிறுமி வெளிப்பட்டாள். அவளே தடாதகைப் பிராட்டி என அறியப்படும் மீனாட்சி.அவள் மூன்று மார்புக்குறிகளுடன் தோன்றியதாகவும் தன்னை மணமுடிப்ப வரைப் பார்த்ததும் அவள் நடுவில் இருக்கும் மார்பகம் மறைந்துவிடும் என அசரீரி அறிவுறுத்தியதாகவும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னனைப் பற்றிச் சங்கப்பாடல்கள் பேசுகின்றன. அவன் வேதநெறிப்படி அமைந்த பற்பல யாகங்களைச் செய்தவன் என்று அவனைப் புலவர்கள் போற்றி யுள்ளனர். தொன்றுதொட்டு வருகின்ற மூத்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவன் முதுகுடுமி என அழைக்கப் பட்டான்.அவனைப் புகழ்ந்து பாடிய புலவர்களில் முக்கியமானவர் நெட்டிமையார். நெடுந்தொலைவில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கி அறியும் இயல்புடையவர் என்பதால் அவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் அவ்வை துரைசாமிப்பிள்ளை. கண்ணிமை நீண்டு இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

பஃறுளி ஆற்று மணலை விடவும் கூடுதலான ஆண்டுகள் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வாழவேண்டும் என வாழ்த்துகிறார் நெட்டிமையார். அப்படி வாழ்த்தும் வகையிலான அவன் சிறப்புத்தான் என்ன?

பற்பல யாகங்கள் புரிந்த அவன் அறநெறிப்படித்தான் போர்புரிவானாம். போர் தொடங்குவதற்கு முன் பசுக்கள், பார்ப்பனர்கள், பெண்கள், பிணியுடையவர்கள், பிதுர்க் கடன் இயற்றும் வகையில் ஆண் மக்களைப் பெறாதவர்கள் ஆகியோரைப் போர் நிகழும் இடத்திலிருந்து விலகியிருக்குமாறு அறிவித்துவிட்டுத்தான் அவன் போர்க்களம் புகுவான் என்கிறது அந்தப் பாடல்:

`ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன்
இறுக்கும்

பொன்போல் புதல்வரைப் பெறாஅதீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்
என

அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு
நிழற்றும்

எம்கோ வாழிய குடுமி தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வியிரயர்க்கு ஈந்த
முன்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.’
(புறநானூறு 9)

மகாகவி பாரதியாரின் தெய்வப் பாடல்கள் வரிசையில் `வேள்வித் தீ` என்ற தலைப்பிலேயே ஒரு பாடல் உள்ளது. அது யாகங் களில் வளர்க்கப்படும் நெருப்பின் மகிமை குறித்துப் பேசுகிறது. ரிஷிகளும் அசுரர்களும் மாறி மாறிப் பேசுவதான உத்தியில் எழுதப்பட்டுள்ளது அந்தப் பாடல்.

ரிஷிகள்

எங்கள் வேள்விக் கூட மீதில்
ஏறுதே தீ தீ – இந்நேரம்
பங்கமுற்றே பேய்கள் ஓடப்
பாயுதே தீ தீ!
அசுரர்:
தோழரேநம் ஆவிவேகச்
சூழுதே தீ தீ- ஐயோநாம்
வாழவந்த காடு வேக
வந்ததே தீ தீ! ………

ரிஷிகள்:

எங்கும் வேள்வி அமர ரெங்கும்
யாங்கணும் தீ தீ! – இந்நேரம்
தங்கும் இன்பம் அமர வாழ்க்கை
சார்ந்து நின்றோமே!
வாழ்க தேவர் வாழ்க வேள்வி
மாந்தர் வாழ்வாரே – இந்நேரம்
வாழ்க வையம் வாழ்க வேதம்
வாழ்க தீ தீ!

வேள்வியில் அக்கினிக்கு ஆகுதியாகச் சமர்ப்பிக்கப்படும் பொருள் புனிதப் பொருள் என்கிற வகையில் அதை ஓர்உவமையாக பாரதியார் எடுத்தாண்டிருக்கிறார்.பாஞ்சாலி சபதம் காப்பியத்தில் பாஞ்சாலியைச் சூதாட்டத்தில் பணயப் பொருளாக வைத்து ஆடும் காட்சி வருகிறது. உன்னதமான வேள்விப் பொருளைப் புலைநாய்க்கு உணவாக வைப்பதைப்போல் பாஞ்சாலி கவுரவர் சபையில் பணயம் வைக்கப்பட்டாள் எனக் கல்லும் கசிந்துருகும் வகையில் கவிதை படைக்கிறார் மகாகவி.

“வேள்விப் பொருளினையே – புலைநாயின்முன்
மென்றிட வைப்பதைப் போல்
நீள்வட்டப் பொன்மாளிகை – கட்டிப் பேயினை
நேர்ந்து குடியேற்றல்போல்
ஆள்விற்றுப் பொன்வாங்கியே – செய்த பூணையோர்
ஆந்தைக்குப் பூட்டுதல்போல்
கேள்விக்கொருவர் இல்லை – உயிர்த் தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கினான்.
செருப்புக்குத் தோல்வேண்டியே – இங்கு கொல்வாரோ
செல்வக் குழந்தையினை?

விருப்புற்ற சூதினுக்கே – ஒத்த பந்தயம்
மெய்த்தவப் பாஞ்சாலியோ?’
எனக் கவிக்கூற்றாய் சீற்றத்தோடு வினவுகிறார் அவர்.

பின்னாளில் வேள்வித் தீயில் உயிர்களைப் பலியிடும் மரபு தவறு என்ற சிந்தனை எழத் தொடங்கியது. மாமிசம் போல் தோற்றமளிக்கும் பூசணிக்காய், நெய் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி வேள்விகள் நிகழ்த்தப் படலாயின. உயிர்க்கொலையைத் தவறு என புத்த மதம் போதிக்கத் தொடங்கியது. வேள்வியில் உயிர்களைப் பலியிடும் மரபை புத்தர் எதிர்த்த சம்பவம் ஒன்று அவர் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.

ஆசியஜோதி என்ற தலைப்பில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அந்த நிகழ்வைத் தம் கவிதையில் மிக அழகாகச் சித்திரிக்கிறார்.

கானகத்தில் நடந்துசெல்லும்போது ஏராளமான ஆடுகளை ஓர் இடையன் மேய்த்துச் செல்வதைக் கண்டார் புத்தர். அந்த ஆடுகள் எங்கு எதன்பொருட்டுச் செல்கின்றன என விசாரித்தார்.

அவை மன்னன் பிம்பிசாரன் நிகழ்த்தும் யாகத்தில் பலியிடுவதற்காக அழைத்துச் செல்லப்படுகின்றன என்பதை அறிந்தார். அவரின் கருணைமனம் பதறியது.

அந்த மந்தையில் ஒரு சின்ன ஆடு கால் ஊனமானதால் தடுமாறியவாறே நடந்துகொண்டிருந்தது. மல்லிகைப்பூ மாலை போல் இருந்த அந்த வெள்ளை ஆட்டுக்குட்டியைத் தன் ரோஜாப்பூப் போன்ற கரங்களில் தூக்கிக்கொண்டார் புத்தர். ஆடுகளோடு புத்தரும் மன்னன் பிம்பிசாரன் அரண்மனைக்குச் சென்றார்.உயிர்க்கொலை தவறு என்பதையும் ஆயிரம் ஆடுகளை வெட்டி வேள்வி நிகழ்த்துவதை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது மிக நல்லது என்பதையும் வலியுறுத்தினார்.

தன் கருத்தை நிறுவுவதற்கு அருமையான ஒரு வாதத்தையும் முன்வைத்தார். அவரின் அறிவுப்பூர்வமான வாதத்தைக் கேட்டு மன்னன் திடுக்கிட்டான்.`இறைவன் இந்த மாமிசத்தை உண்பானா? மனிதர்களும் ஆடுகளும் இறைவனின் குழந்தைகள். மனிதர்கள் வாயுள்ள பிள்ளைகள். ஆடுகள் வாயில்லாப் பிள்ளைகள். அவ்வளவே வேறுபாடு. வாயுள்ள பிள்ளை வாயில்லாப் பிள்ளையை அரிந்து கறிசமைத்தால் அதைக் கருணை நிறைந்த தந்தை உண்டு மகிழ்வாரா?’ என்ற புத்தரின் வினா மன்னனைச் சிந்திக்க வைத்தது.பிம்பிசாரன் உடனே உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்தினான். தன் நாட்டு மக்கள் புலால் உண்ணலாகாது என்றும் சட்ட மியற்றினான் என்கிறது வரலாறு..

கவிமணியின் கவிதை வரிகளில் புத்தர் வாதம் செய்யும் பகுதி இதோ:

`ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கி நீர்
ஆக்கிய யாகத்து அவியுணவை
ஈட்டும் கருணை இறையவர் கைகளில்
ஏந்திப் புசிப்பரோ கூறுமையா!
மைந்தருள் ஊமை மகனை ஒருமகன்
வாளால் அரிந்து கறிசமைத்தால்
தந்தையும் உண்டு களிப்பதுண்டோ இதைச்
சற்று நீர் யோசித்துப் பாருமய்யா!’

வேள்விகளில் நிகழ்த்தப்பட்ட உயிர்ப்பலி காலப் போக்கில் மறைந்துவிட்டது. மாமிசம் போல் தோற்றமளிக்கும் பூசணிக்காயில் குங்குமம் தடவி அதை அர்ப்பணிக்கும் மரபு தோன்றியது.இப்போது வேள்விகளில் பெரும்பாலும் சமித்துக்கள் எனச் சொல்லப்படும் மரக் குச்சிகளும் பசுஞ்சாணத்தால் செய்த வறட்டியும் நெய் முதலிய திரவியங்களும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
அறநூல் எனப் போற்றப்படும் திருக்குறளில் பற்பல ஆன்மிகக் கருத்துகள் புதைந்துள்ளன. வேள்வி தொடர்பான கருத்தும் அவற்றில் முக்கியமான ஒன்று.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post திருக்குறளில் வேள்வி! appeared first on Dinakaran.

Tags : Velvi ,Thirukkural ,Velvis ,Tamil Nadu ,Valluvar ,
× RELATED தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை