×

குன்றத்தூர் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே கரைமா நகர் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது, அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
குன்றத்தூரில் இருந்து பல்லாவரம் செல்லும் பிரதான சாலை விரிவாக்க பணிக்காக, குன்றத்தூர் அடுத்த கரைமா நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில், சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை இடிக்க ஏற்கனவே அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அப்படியிருந்தும் பலர் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நேற்று ஆக்கிரப்புகளை அகற்ற ஜேசிபி இயந்திரங்களுடன் வந்திருந்தனர். ஏற்கனவே, இதேபோன்று ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல், அப்பகுதி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அன்றைய தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். மீண்டும் அதுபோன்ற ஒரு சூழ்நிலை வரக்கூடும் என்பதால், முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் அதிகாரிகள், போலீசாரின் துணையுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு வந்து, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்து, அரசு வாகனங்களை சிறை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டுமனை புதிதாக விற்பனை செய்ய உள்ளதால், அதனை விற்பனை செய்வதற்காக இங்குள்ள குடியிருப்புகள், கடைகள் அகற்றப்படுவதாக குற்றம் சாட்டினர். ஆனால், சாலை விரிவாக்க பணிக்காக முறையாக நோட்டீஸ் வழங்கி, ஆக்கிரம்புகளை அகற்றி வருவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post குன்றத்தூர் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Kunradhur ,Kunrathur ,Karaima Nagar ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...