மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இதில், பணிபுரியும் ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள், குடிநீர் டேங்க் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு கடந்த சில மாதங்கள் முன்பு வரை ஊராட்சியின் பொது நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குறைவான மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளுக்கு பொது நிதி குறைக்கப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிபவர்களுக்கு சம்பளம் வழங்கப் போதிய நிதி இல்லை. இதனால், ஒருசில பஞ்சாயத்து பணியாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதனை சரி செய்ய அனைத்து ஊராட்சிகளிலும் ஏழாவது ஊதிய நிதி கணக்கு துவங்கப்பட்டது.
இந்த கணக்கில் இருந்து பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பஞ்சாயத்துகளில் இந்த 7வது ஊதிய கணக்கிலும் போதிய நிதி இல்லாததால் தற்போது பெரும்பாலான ஊராட்சிகளில் கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னை காரணமாக மதுராந்தகம் ஒன்றியத்தில் அரியனூர், பெரியவெண்மணி, விராலூர், ஜமீன் பூதூர், சூரை, சிதண்டி, வில்வராயநல்லூர், பழமத்தூர், கீழவலம், குன்னத்தூர், நெட்ரம்பாக்கம், இரும்பேடு உள்ளிட்ட 30 ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
இதோபோல், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் திம்மாபுரம், கரிக்கிலி, கீழ்அத்திவாக்கம், சிறுநாகலூர், வடமணிபாக்கம், கொங்கரைமாம்பட்டு, தண்டரை புதுச்சேரி, ஆத்தூர், மாத்தூர், களத்தூர், வெளியம்பாக்கம், அன்னங்கால், வெள்ளபுத்தூர், ஆலப்பாக்கம், பெரும்பேர் கண்டிகை, பொற்பனங்கரணை, பாதிரி, எலப்பாக்கம், மோகல்வாடி, தீட்டாளம் செம்பூண்டி, கடமலைப்புத்தூர் உள்ளிட்ட 31 ஊராட்சிகளை சேர்ந்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஊராட்சி செயலர்கள் கூறுகையில், ‘மிகவும் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நாங்கள் ஒவ்வொரு மாத சம்பளத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டும். ஆனால், தற்போது 3 மாதங்களாக சம்பளம் வழங்காமல் நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறோம். மேலும், தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து பணிபுரியும் ஊராட்சி பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்காக தினந்தோறும் நாங்கள் சென்றுவர இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தினசரி தவிர்க்க முடியாததாக உள்ளது.
இதுபோல், பல்வேறு பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே, அரசு அதிகாரிகள் உடனடியாக இந்த நிலையை சரி செய்து எங்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இது குறித்து மதுராந்தகம் ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘இதுபோன்ற பிரச்னைகள் சில ஊராட்சிகளில் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது நிதி கணக்கிற்கு மற்ற கணக்கில் இருக்கும் நிதியை மாற்றி சம்பளம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும், இந்த பிரச்னைகள் விரைவில் துறை ரீதியாக சரி செய்யப்படும்’ என்றார்.
The post பொது நிதி குறைக்கப்பட்டதால் 3 மாதங்களாக சம்பளம் பெறாமல் பணிபுரியும் ஊராட்சி பணியாளர்கள்: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் அவலம் appeared first on Dinakaran.
