×

12 மணிநேர வேலை மசோதா அதிகாரபூர்வமாக வாபஸ்: எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம்

சென்னை: தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வேலைக்கான மசோதா வாபஸ் பெறப்பட்டுள்ளதாக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம், தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு அப்போதே பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அன்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து, மே 1ம் தேதி, சென்னையில் நடந்த தொழிலாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதா வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். இதை அனைத்துக்கட்சி தலைவர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்ற பேரவை சட்டமுன்வடி எண் 8/2003) சட்டமன்ற பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர், இச்சட்டமுன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வரால் அறிவிக்கப்பட்ட நிலையில், இச்சட்டமுன்வடிவை அரசு திரும்ப பெறுவதென முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post 12 மணிநேர வேலை மசோதா அதிகாரபூர்வமாக வாபஸ்: எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Legislation ,Sinivasan ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும்...