×

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை கடக்க எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

 

தாம்பரம், ஏப்.27: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில், கட்டப்பட்ட நகரும் படிகட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். சென்னையின் நுழைவாயிலாக உள்ள தாம்பரம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. பல்வேறு பகுதியிலிருந்து தாம்பரம் வரும் பொதுமக்கள் தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளுக்கு செல்ல சிறிது தூரம் நடந்து சென்று, சுரங்கப்பாதை வழியாக ஜிஎஸ்டி சாலையை கடக்க வேண்டும். ஆனால், சிறிது தூரம் நடந்து சென்று சுரங்கப்பாதை வழியாக சாலையை கடக்க சிரமப்பட்டு, பொதுமக்கள் ஜிஎஸ்டி சாலையை நேரடியாக குறுக்கே கடந்து வந்தனர். இதனால், விபத்துகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மேற்கு – கிழக்கு மற்றும் ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையை இணைக்கும் வகையில், ₹17 கோடி செலவில் 242 மீட்டர் தூரத்திற்கு எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதில், ₹7 கோடியில் முதற்கட்டமாக ஜிஎஸ்டி சாலையில் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதி வரை பணிகள் முடிவடைந்து, கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம்தேதி நடை மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ரயில்வே நடைமேடையுடன் இணைக்கும் பணிகளுக்கு ரயில்வே துறையிடம் இருந்து அனுமதி கிடைக்காததால் பணியில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், ரயில்வே துறையினரிடம் அனுமதி பெறப்பட்டு, மீதமுள்ள ₹10 கோடி செலவில் டிக்கெட் கவுன்டர் மற்றும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது, பணிகள் முடிவடைந்தது.

இந்நிலையில், ₹10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகரும் படிகட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலத்தின் கூடுதல் இணைப்பை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியில் நகரும் படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நகரும் படிக்கட்டு அடிக்கடி பழுதாவது குறித்து புகார் எழுவதால் அதற்கென தனியாக ஆட்கள் போடப்பட்டு அவை கண்காணிக்கப்படும்’ என்றார். பின்னர், டி.ஆர்.பாலு எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘160 கோடி மதிப்பீட்டில் கிழக்கு தாம்பரத்தை இணைக்கும் வகையிலும் நடை மேம்பாலம் அமைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது’’ என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பஸ், ரயில் பயணிகளுக்கு வசதி
நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் திறக்கப்பட்டதால் மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு தாம்பரத்தில் உள்ள பேருந்து நிலையம் வரை இருபுறமும் பொதுமக்கள் எளிதில் செல்ல முடியும். அதேபோல, ரயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களும் எளிதில் செல்வதோடு மேம்பாலத்தில் இருக்கும் டிக்கெட் கவுன்டரில் ரயிலுக்கான டிக்கெட்டுகளை எளிதில் பெற்று நேரடியாக ரயில் நிலையத்தின் உள்ளே செல்லவும் முடியும்.

The post தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை கடக்க எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tambaram GST Road ,Minister ,Thamo Anparasan ,Tambaram ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...