×

உபியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதிக் கடிதத்தில் எழுதிய ரகசியங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி ஆதிக் அகமது எழுதிய ரகசிய கடிதம், ஏற்கனவே திட்டமிட்டபடி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உபி முதல்வருக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக அவரது வக்கீல் கூறி உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பிரபல தாதாவாகவும், சமாஜ்வாடி கட்சியின் எம்பி மற்றும் எம்எல்ஏவாகவும் இருந்தவர் ஆதிக் அகமது. வக்கீல் உமேஷ் பால் கொலை வழக்கில் கைதான இவரும், இவரது சகோதரர் அஷ்ரப் இருவரும் கடந்த சனிக்கிழமை போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 3 நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னதாக கடந்த 13ம் தேதி ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையே, ஒருவேளை தான் கொல்லப்பட்டால், பல ரகசியங்கள் எழுதப்பட்ட கடிதத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உபி முதல்வருக்கு அனுப்பி வைக்க ஆதிக் அகமது ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த ரகசிய கடிதம் தற்போது அனுப்பப்பட்டிருப்பதாக ஆதிக்கின் வக்கீல் விஜய் மிஸ்ரா நேற்று தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘சீலிடப்பட்ட அந்த கடிதத்தை நானோ, என் மூலமாகவோ அனுப்பப்படவில்லை. எங்கேயோ இருந்து, யாரோ ஒருவர் மூலமாக அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் உள்ள ரகசியங்கள் என்னவென்பது எனக்கும் தெரியாது’’ என கூறி உள்ளார். பல ரகசியங்களை மூடி மறைக்கவே ஆதிக் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் கூறப்படும் நிலையில், அவர் கடிதத்தில் என்ன மாதிரியான ரகசியங்களை கூறியிருக்கிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ஆதிக் கொலை தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை சமர்பிக்க உபி போலீஸ் டிஜிபி மற்றும் பிராயாக்ராஜ் கமிஷனருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
  • எந்த தாதாவும் மிரட்ட முடியாது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசுகையில், ‘‘உபியில் இப்போது எந்த ஒரு தாதாவும், மாபியா கும்பலும் தொழிலதிபர்களை போனில் மிரட்டி அச்சுறுத்த முடியாது. உத்தரபிரதேசம் கலவரத்திற்கு பெயர் போன மாநிலம். பல மாவட்டங்களின் பெயர்களே மக்களை பயமுறுத்தியது. இனி அந்த பயம் எல்லாம் தேவையில்லை’’ என்றார்.
  • வக்கீல் வீட்டில் நாட்டு குண்டு வீச்சு ஆதிக் அகமதுவின் வக்கீல்களில் ஒருவரான தயாசங்கர் மிஸ்ராவின் வீட்டருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரயாக்ராஜின் கத்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே நேற்று பகல் 2.30 மணிக்கு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர்.

The post உபியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதிக் கடிதத்தில் எழுதிய ரகசியங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Aadik ,UP ,Prayagraj ,Adiq Ahmed ,Uttar Pradesh ,Supreme Court ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...