- பங்குனி உத்திரம் 8ம் திருவிழா
- தண்டாயுதபாணி கோயில்
- செட்டிகுளம் கிராமம்
- Padalur
- தண்டாயுதபாணி ஆலயம்
- செட்டிக்குளம்
- ஆலத்தூர்
பாடாலூர், ஏப். 12: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர 8ம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயில். இந்த கோயிலில் கடந்த மார்ச்- 27ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் இரவு சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான ஏப்ரல் 4ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் இருந்து எட்டாம் நாளான நேற்று எட்டாம் திருவிழாவை முன்னிட்டு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடனை விண்ணை முட்டும் அளவிற்கு அரோகரா…! அரோகரா…! என்ற பக்தி முழக்கத்துடன் பலர் தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த விழாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், மாவிலிங்கை, நக்கசேலம், சத்திரமனை பாடாலூர், கூத்தனூர், பொம்மனப்பாடி, குரூர், சிறுவயலூர், ஆலத்தூர்கேட், பெரகம்பி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஹேமாவதி, தக்கார் வேல்முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
The post செட்டிகுளம் கிராமத்தில் தண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திர 8ம் திருவிழா appeared first on Dinakaran.
